search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    எப்போதும் பரபரப்பாக இயங்கி வந்த உடற்பயிற்சி கூடம் வெறிச்சோடி கிடக்கும் காட்சி. (இடம்: பட்டாபிராம், சென்னை)
    X
    எப்போதும் பரபரப்பாக இயங்கி வந்த உடற்பயிற்சி கூடம் வெறிச்சோடி கிடக்கும் காட்சி. (இடம்: பட்டாபிராம், சென்னை)

    ஊரடங்கால் உற்சாகம் இழந்த உடற்பயிற்சி கூடங்கள்: மீண்டும் திறப்பது எப்போது ?

    ஊரடங்கால் உடற்பயிற்சி கூடங்களில் இருந்த உற்சாகம் பறிக்கப்பட்டுள்ளது. உடலை கட்டுக்கோப்பாக வைக்க முடியாமல் மக்கள் திணறி வருகிறார்கள்.
    ஒரு கட்டிடத்துக்கு அஸ்திவாரம் போல, கப்பலுக்கு கலங்கரை விளக்கம் போல, வண்டிக்கு அச்சாணி போல, நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வுக்கு உடல்நலமே முக்கியமானதாக அமைகிறது. ஒரு காலத்தில் நாமெல்லாம் ஒவ்வொரு உணவையும் சுவையறிந்து சாப்பிட்டோம். ஆனால் இன்று சாப்பிடும் உணவில் சர்க்கரை இருக்கிறதா? என்று அறிந்து சாப்பிட வேண்டி உள்ளது. உணவே மருந்து என்ற நிலை மாறி மருந்தே உணவு என்ற நிலை வந்துவிடுமோ? என்ற அச்சம் நிலவுகிறது.

    அதனால் இந்த காலக்கட்டத்தில் உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. அதனாலேயே உடற்பயிற்சி கூடங்களும் அதிகளவு முளைக்க தொடங்கின. உடற்பயிற்சியாளர்களும் அதிகளவு களத்துக்கு வந்துவிட்டனர். இதனால் ஆரோக்கியத்தை பேணுவதற்கு என நேரம் ஒதுக்கி மக்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று உடல்நலத்தை மேம்படுத்தி வருகிறார்கள்.

    கட்டுக்கோப்பான உடல் பெற வேண்டும் என்று வருவோர் ஒரு ரகம் என்றால், நோயற்ற உடல் நலத்துக்காக வருவோர் மற்றொரு ரகமாக இருக்கிறார்கள். ஆண்கள் போல பெண்களும் தற்போது உடற்பயிற்சி கூடங்களுக்கு வருகிறார்கள். தன்னம்பிக்கையுடன் பயிற்சி பெறுகிறார்கள். மருந்து, மாத்திரைகளால் இல்லாமல் கடுமையான உடற்பயிற்சியின் மூலம் உடலை கட்டுக்கோப்பாக்கி விடுகிறார்கள். இதுதவிர ஏராளமான உடற்பயிற்சி கூடங்களில் இப்போது யோகா வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இவ்வாறு ஆரோக்கியம் பேணும் இடமாக உடற்பயிற்சி கூடங்கள் திகழ்கின்றன என்றால் அது மிகையல்ல.

    தற்போது கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் எப்போதுமே பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கி கொண்டிருக்கும் உடற்பயிற்சி கூடங்கள் தற்போது வெறிச்சோடி கிடக்கின்றன.

    இதுகுறித்து சென்னை பட்டாபிராமை சேர்ந்த உடற்பயிற்சி கூட நிர்வாகி பிரேமா குமாரி கூறியதாவது:-

    நல்ல உடல் நலம் என்பது தானாக கிடைக்கக் கூடியது அல்ல. அதை நாம் தான் தேடி பெற்றுக்கொள்ள வேண்டும். நலமான வாழ்க்கையை விரும்புபவர்கள் நிச்சயம் உடற்பயிற்சியை தவிர்க்க முடியாது. தற்போதைய சூழலில் பெரும்பாலானோர் எதிர்காலத்தை கருதி உடற்பயிற்சி கூடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். எடை குறைப்பு, உடல் கட்டுக்கோப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக உடற்பயிற்சி கூடங்களை அணுகி உடல்நலம் பேணுகிறார்கள்.

    ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் எங்களது வாடிக்கையாளர்களை வீடுகளில் இருந்தே உடற்பயிற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறோம். உடற்பயிற்சி கூடங்கள் மூடியிருப்பதால் வாடகை, பணியாளர்கள் கூலி என பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் வேறு வழியின்றி சமாளித்து வருகிறோம். உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி அளித்தாலும் முன்பு போல வாடிக்கையாளர்கள் வருவார்களா? என்பது சந்தேகமே...

    இவ்வாறு அவர் கூறினார்.

    உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டு இருப்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஆண்களும், பெண்களும் தவித்து திணறி போகிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். இப்போதைய சூழலில் வீட்டின் வளாகங்கள் மற்றும் மொட்டை மாடிகளில் நடைபயிற்சியில் ஈடுபடுவது, எளிய உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது என இருக்கிறார்கள். ஊரடங்கு காரணமாக பலர் உடல் பருமனாலும் அவதிப்படுகிறார்கள். இதையெல்லாம் போக்க மீண்டும் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட வேண்டும் என வேண்டுகோளும் விடுக்கிறார்கள்.

    அதேபோல சலூன் கடைகள் மூடப்பட்டிருப்பதால் ஏராளமானோர் தாடி, பெரிய மீசைகளுடன் வலம் வருகிறார்கள். ‘டை’ அடிக்க முடியாததால் பலரது சாயம் வெளுத்திருக்கிறது. வெண் பஞ்சு போன்ற முடிகளை மறைக்க மிகவும் சிரமப்படுவதையும் பார்க்கமுடிகிறது. அதேபோல் அழகுநிலையங்களுக்கு செல்லாததால் பெண்களும் தவித்து போயிருக்கிறார் கள். பல பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை என்றால் பாருங்களேன்...

    Next Story
    ×