என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    தேர்வு
    X
    தேர்வு

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்வது எப்படி?

    இத்தனை நாட்கள் வீட்டில் அடைபட்டு இருப்பதால் பலருக்கு படிப்பின் மீது கவனம் இருக்காது. எனவே மாணவர்கள் தேர்வு நாட்களில் இருந்து பின்னோக்கி அட்டவணைப்படுத்தி பாடம் வாரியாக திரும்பப் படிக்க வேண்டும்.
    ஓட முடியவில்லை என்றால் நடக்க முயற்சி செய், நடக்க முடியவில்லை என்றால் தவழவாவது முயற்சி செய். ஏனென்றால் வாழ்க்கையில் நகர்தல் அவசியம் என்பது பெரியோர்கள் சொல். 55 நாட்களுக்கு பிறகும் கொரோனாவின் தாக்கம் இருப்பதால் உலக சுகாதார அமைப்பு முதல் உள்நாட்டு சுகாதார அமைப்பு வரை கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள அறிவுறுத்தி கொண்டிருக்கிறது. அதனால் தான் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் விடுபட்ட தேர்வுகளை நடத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நோய்நாடி நோய் முதல் நாடி என்ற வள்ளுவன் வாக்கு போல் இந்த தேர்வு நடத்துவதால் ஏற்படக்கூடிய அடிப்படையான அச்சங்களை போக்கி விட்டால் தேர்வை எதிர் கொள்வது கடினமாக இருக்காது.

    இத்தனை நாட்கள் வீட்டில் அடைபட்டு இருப்பதால் பலருக்கு படிப்பின் மீது கவனம் இருக்காது. எனவே மாணவர்கள் தேர்வு நாட்களில் இருந்து பின்னோக்கி அட்டவணைப்படுத்தி பாடம் வாரியாக திரும்பப் படிக்க வேண்டும். ஏற்கனவே தேர்வுக்கு தயாரானதால் இது மாணவர்களுக்கு எளிதாகவே இருக்கும். முதன்முறையாக மாணவர்கள் படித்த பள்ளியிலேயே தேர்வு எழுதப் போகிறார்கள், இதுவே மிகப்பெரிய மனோபலத்தை மாணவர்களுக்கு தரும். இனிவரும் நாட்களில் உடலைச் சீராக வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை உண்பது, உடலுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்ப்பது உடல் நலனைப் பேண காய்ச்சல், சளி, இருமல் வராமல் பாதுகாக்கும். இதுவே மாணவர்களின் பலம். தெருவிளக்கில் படித்து மேதையான பலர் உள்ள இந்த நாட்டில் இதையும் கடந்து போக முடியும் என்று மாணவர்களுக்கு மனோதைரியம் தர வேண்டியது நம் கடமை.

    பெற்றோர்களைப் பொறுத்தவரை பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு, பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தொலைவு இதுவே மிகப்பெரிய அச்சம். அவர்களின் அச்சத்தில் நியாயம் உள்ளது. 21-ந் தேதி பள்ளிக்கு ஆசிரியர்கள் வர அறிவுறுத்தப் படுகிறார்கள். அதன் பிறகு பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அறைக்கு 10 பேர் என அமரும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் மாணவர்களின் உடல் வெப்ப நிலை அறியப்பட்டு உடல் வெப்ப நிலை அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தார்போல் எங்கு அமர்ந்து தேர்வு எழுத வைப்பது என்பதையும் பள்ளிகள் முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது.

    ஊருக்குச் சென்ற மாணவர்கள், ஆசிரியர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு இ-பாஸ் வழங்குவது, மாணவர்களை அழைத்து வருவது, மலையகப் பகுதிகள், பேருந்து வசதிகள் இல்லாத கிராமப்பகுதியில் உள்ள மாணவர்களை தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்னால் அழைத்து வந்து விடுதிகளில் தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் அங்குள்ள ஆசிரியர்களைக் கொண்டு தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தேர்வு நடத்தும் அதிகாரிகள் என அனைவரும் சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதற்கிணங்க தேர்வுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் இவை அனைத்தும் அரசு தரப்பில் செய்யப்பட்டு விட்டதா? என ஆராய்ந்து தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியில் உள்ள பெற்றோர்களை கொண்ட ஒரு குழுவை அமைத்து அவர்களிடம் கேட்கலாம். அரசியல்வாதிகளும் மற்றவர்கள் பார்க்கும் பார்வைக்கும் தன் பிள்ளைகள் எழுத இருக்கும் பள்ளிகளை பெற்றோர்கள் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அவர்கள் மனதில் உள்ள அச்சத்தைப் போக்கினால் அவர்களே பிள்ளைகளை தைரியமாக தேர்வுக்கு தயார் படுத்துவார்கள்.

    அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் எதிர்த்து அரசியல் செய்ய ஆயிரம் பேர் இருக்கலாம். ஆனால் தன் பிள்ளைகள் வாழ்வென வரும்பொழுது தன்னலமற்ற அக்கறை மட்டுமே இருக்கும். இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் கேட்டு உடனடியாக சரி செய்ய அரசு இயந்திரம் தயாராக இருந்தால் பத்தாம் வகுப்பு தேர்வு மாணவர்களை நேர்மறையான எண்ணங் களுடன் எழுத வைக்கலாம்.

    மாணவர்களும் நீண்ட நாள் கழித்து பார்க்கும் நண்பர்கள் என உணர்ச்சி வசப்படாமல் சமூக இடைவெளி கடைப் பிடித்தல், முக கவசம் அணிதல், கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி திரவத்தை பயன்படுத்துதல், குடிப்பதற்கு தண்ணீர் எடுத்துச் செல்லுதல், வெளியில் உள்ள உணவுகளை வாங்கி சாப்பிடாமல் இருத்தல் போன்றவற்றை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். முகக் கவசம், சுத்திகரிப்பு திரவம் மாணவர்களால் வாங்க இயலாத பட்சத்தில் அரசு அதனை மாணவர்களுக்கு தரவேண்டும். பள்ளிக்கு முன்னாலேயே மாணவர்களின் தேர்வு அறை பற்றிய தகவல் பலகையை வைத்து தகவல்களை அளித்தல், உள் நுழையும் போதே உடல் வெப்பம் சரிபார்த்தல், நேரடியாக மாணவர்களை தேர்வு அறைக்கு அனுப்புதல், தேர்வு முடிந்த பின்னர் ஒவ்வொரு அறையாக மாணவர்களை வெளியே அனுப்புதல் போன்ற முறைகளை கடைபிடித்தால் சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக தேர்வை நடத்த முடியும்.

    எந்த ஒரு விஷயத்தையும் வேண்டாம் என எதிர்ப்பதை விட ஒத்திப் போடுவதைவிட எப்படி அதனை செய்ய சாத்தியம் என நினைத்தவர்கள்தான் வாழ்வில் சாதித்துள்ளார். பெற்றோர்கள் திருப்தியுடன், ஆசிரியர்களின் நம்பிக்கை யுடன், அரசின் நேர்மறையான வழிகாட்டுதலுடன் பொதுத்தேர்வில் வெற்றி கொள்வோம்.

    காயத்ரி, கல்வியாளர்
    Next Story
    ×