search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    இளம் வயதில் கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்படும் சிறுவர்கள்: ஆசிரியர், மருத்துவர் கருத்து
    X

    இளம் வயதில் கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்படும் சிறுவர்கள்: ஆசிரியர், மருத்துவர் கருத்து

    • குழந்தைகள் கண்ணாடி அணியும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
    • குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

    இயற்கையை ரசிக்கும் ஓர் அற்புதமான வாய்ப்பு கண்களுக்கு மட்டுமே கிடைத்து இருக்கிறது. ஆனால் இந்த கண்களை பாதுகாப்பதில் நாம் பலரும் இன்று அலட்சியம் காட்டுவதால், பல்வேறு பின்விளைவுகளை சந்திக்கிறோம். முதுமை வயதை அடைவதற்கு முன்பே கண்பார்வை மங்கி போவது, முதுமையில் அணிய வேண்டிய கண் கண்ணாடியை இளமையில் அணிவது உள்பட ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.

    முன்பு கண் கண்ணாடி அணிவதை ஒரு குறையாக பார்த்தனர். திருமண நிகழ்வுக்குக்கூட பங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு காலத்தில் அது தடையாக இருந்திருக்கிறது. ஆனால் இன்றோ கண்ணாடி அணிவது நாகரிகமாக மாறத் தொடங்கிவிட்டது. இதன் விளைவு சிறுவர்கள் முதல் பெரியவர் வரை ஏராளமானோர் கண்ணாடி அணியும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

    இளம் வயதினர்

    தற்போது பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கண் பார்வை பிரச்சினை அதிகரித்து, கண்ணாடி அணியும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு, டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் இளம்வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    நாகரிக வளர்ச்சி எதில் இருக்க வேண்டுமோ? அதில் இல்லாமல், மற்றவற்றில் ஊற்றி வளர்ப்பது, இன்று பெரிய அளவிலான பிரச்சினைகளை இன்றைய தலைமுறை சந்திக்க தொடங்கி இருக்கிறது. அதில் ஒன்றுதான் இளம் வயதிலேயே கண்ணாடி அணிவது. இதுதொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோர், மருத்துவர் என்ன சொல்கிறார்கள்? என்பதை பார்க்கலாம்.

    செல்போன், டி.வி.

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவத் துறை தலைவர் விஜய்சோப்ரா:-மக்களிடையே செல்போன் பயன்பாடு தற்போது அதிகமாக உள்ளது. குழந்தைகள் அழும் போது அவர்களை சமாதானம் செய்ய, பெற்றோர்கள் செல்போனை கையில் கொடுத்து அழுகையை நிறுத்துகின்றனர். காலப்போக்கில் குழந்தைகள் செல்போன் இருந்தால் தான் உணவு சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது என அனைத்திற்கும் அடம்பிடிக்க ஆரம்பிக்கின்றனர். கொரோனா கால கட்டத்தில் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது.

    அதில் இருந்து குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். செல்போன்களை அதிக நேரம் உற்றுப்பார்ப்பதால் குழந்தைகளுக்கு தூர பார்வையில் கோளாறுகள் ஏற்படுகிறது. அதேபோல் லேப்டாப்பில் படம் பார்ப்பது, அதிக நேரம் டி.வி. பார்ப்பது போன்ற செயல்களின் காரணமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கண் பார்வை அதிகம் பாதிக்கப்படுகிறது. காலப்போக்கில் பார்வை கோளாறு, மங்கலான பார்வை போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி கண்ணாடி பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. அதேபோல் உணவு பழக்க வழக்க முறைகளிலும் மாற்றம் வந்துள்ளது.

    கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள், பிரைடு ரைஸ், பர்கர் போன்ற அரைவேக்காடு உணவுகளால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே குழந்தைகளுக்கு சிறு தானியங்கள், காய்கறிகள், பழ வகைகள் மற்றும் கீரைகள் போன்ற உணவு முறைகளை பழக்கப்படுத்த வேண்டும். அதேபோல் கண்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுத்தும் செல்போன் உள்ளிட்ட பயன்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

    துரித உணவு

    திருப்பத்தூரை அடுத்த கெஜல் நாயக்கன்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அறிவியல் ஆசிரியை ர.நித்யா:-குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டிற்கு இன்றைய காலகட்டத்தில் ஏராளமான காரணங்கள் உள்ளன. அதிகப்படியான ஒளி தொடர்ச்சியாக கண்களில் படுவதால் கண் நரம்புகளை பாதித்து கண் குறைபாடுகளை உருவாக்குகிறது. அதற்கு நம் அன்றாட வாழ்க்கை முறையில் உள்ள பல காரணங்களை கூறலாம். உணவு முறை, டி.வி., செல்போன் முழு முதல் காரணம் என்றாலும், நாம் அதிகமாக கவனிக்க தவறும் காரணம் எல்.இ.டி. பல்புகள். வீடுகள், வாகனங்களில் அதிகமாக பயன்படுத்தும் எல்.இ.டி. பல்புகள் மற்றும் செல்போன் பிளாஷ் லைட்டுகளிலிருந்து வரும் நீல ஒளி விழித் திரையை குறிப்பாக குழந்தைகளுக்கு உடனடியாக பாதிக்கும். இதர கண் நோய்களையும், தூக்கமின்மையையும் கொடுக்கும். அதனால் பொதுமக்கள் சமூகப் பொறுப்புடன் அலங்காரத்திற்காகவும், ஆடம்பரத்திற்காகவும், அதனை பயன்படுத்துவதை தவிர்த்தல் வருங்கால தலைமுறைக்கு செய்யும் சமூக கடமையாகும். சாதா குண்டு பல்பும், டியூப் லைட்டும் கண் பாதிப்புகளை ஏற்படுத்தாது. செல்போனை எவ்வாறு கையாள வேண்டும் என்ற ஒழுங்கு முறை மற்றும் தினசரி உடற்பயிற்சியுடன் கூடிய கண் பயிற்சி குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கற்பித்து, பெற்றோரும் அவர்களுடன் இணைந்து செய்து நடைமுறைப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டால் கண் பார்வையை பல தலைமுறைகளுக்கு காப்பாற்றிக் கொள்ளலாம்.

    சத்துவாச்சாரியை சேர்ந்த பசுபதி:-எனது மகன் சிறுவயதில் இருந்தே கண் கண்ணாடி அணிந்து வருகிறான். தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் தேர்வுகள், ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. இதனால் செல்போன், கம்ப்யூட்டரை குழந்தைகள் அதிகம் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் பல குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பெடுத்து படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. எனவே மாணவர்களுக்கு பள்ளிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகளின் நேரத்தை குறைக்க வேண்டும். குழந்தைகளுக்கு துரித உணவுகள் வழங்குவதை பெற்றோர் கைவிட வேண்டும். குழந்தைகளின் நலன் மீது பெற்றோருக்கு அக்கறை வேண்டும். அனைத்து பெற்றோருக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

    பாரம்பரிய உணவு

    செய்யாறு பகுதியை சேர்ந்த முதுகலை ஆசிரியர் எம்.முனுசாமி:-இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் உடல் பராமரிப்பு இன்றி இளம் வயதில் கண்ணாடி அணிவது அதிகரித்து வருகிறது. சரியான விகிதத்தில், காய்கறிகளுடன் சத்தான உணவு சாப்பிட வேண்டும். பாரம்பரிய உணவுகளை இன்றைய தலைமுறை சாப்பிடுவதில்லை, துரித உணவகம், பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்ட தின்பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் செல்போன் மற்றும் டி.வி. பார்ப்பதால் கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி அணிகின்ற நிலை ஏற்படுகிறது. நள்ளிரவு வரை கண்விழித்து செல்போனில் விளையாடுவதும், குறைந்த நேரம் தூக்கம் மேற்கொள்வதாலும் கண்ணில் குறைபாடு ஏற்படுகிறது. சரியான தூக்கம், சத்தான உணவு எடுத்துக் கொண்டால் மட்டுமே கண் குறைபாடு இன்றி கண்ணாடி அணிவதை தவிர்க்க முடியும்.

    அதிக வெளிச்சம்

    வேலூரைச் சேர்ந்த கண் பரிசோதகரும், ஆப்டிகல்ஸ் கடை உரிமையாளருமான வி.தேசிகன் கூறியதாவது:- தாய், தந்தையருக்கு கண் குறைபாடு இருந்தால் அது பரம்பரையாக குழந்தைக்கும் வரும். அவர்கள் பரிசோதனை செய்து கண்ணாடியை அணிந்து கொள்ள வேண்டும். பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள் 9 மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டு கண்ணாடியை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு இரண்டு ஆண்டுகள் வரை பார்வை மாறாது. மற்றவர்கள் பரிசோதனை செய்து கண்ணாடியை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் வகுப்பறையில் கரும்பலகையில் எழுதுவதை படிக்க முடியும். பாடங்களில் கவனம் செலுத்த முடியும். குழந்தைகள் செல்போனில் அதிக வெளிச்சத்துடன் பார்ப்பதால் அவர்களுடைய கண்கள் பாதிப்படைகிறது. மேலும் பல குழந்தைகள் வீட்டில் உள்ள கார்ட்டூன் சேனல்களை திரும்ப திரும்ப பார்க்கின்றனர். தொடர்ந்து டி.வி. பார்ப்பதாலும், செல்போனில் விளையாடுவதாலும் முட்டை, கீரை, காய்கறிகள் போன்ற உணவுகளை உண்ணாததாலும் குழந்தைகளின் கண்கள் இளம் வயதிலேயே பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே கண்ணாடி அணியும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    பாதுகாப்போம்

    ஒரு குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், இருட்டில் பார்க்க முடியாமல் எப்படி திணறுகிறோம். அப்படி இருக்கும் போது கடவுள் நமக்கு அளித்த சிறப்பு பரிசான கண்களை நாம் சரியான முறையில் பாதுகாப்போம். அலட்சியம் காட்டாமல் விழிப்புணர்வோடு இருப்போம்.

    கண்களை பாதுகாக்க 'டிப்ஸ்'

    * வெளிச்சம் குறைந்த இடத்தில் படிப்பதை தவிர்க்க வேண்டும். பச்சை நிற காய்கறி வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

    * கண்களுக்கு அதிக அழுத்தம் தரக்கூடிய செயல்களில் ஈடுபடுவதை கைவிடவேண்டும்.

    * கண்களில் ஏதாவது சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும், உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் பார்வை இழப்பை தவிர்க்க முடியும்.

    * இரவு படுக்கைக்கு செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு டி.வி., செல்போன், கணினி ஆகியவற்றை தவிர்க்க பழக வேண்டும். மாசு, தூசிகளினால் கண்கள் பாதிப்படையாமல் இருக்க, வெளியே சென்று வீடு திரும்பியதும் கண்களை தூய நீரில் கழுவ வேண்டும்.

    * கண்கள் தொடர்பான பயிற்சியை அவ்வப்போது மேற்கொள்வது அவசியம்.

    Next Story
    ×