
பள்ளிக்கு செல்லும்போது குழந்தைகளுக்கு பயணம், மைதானத்தில் விளையாட்டு, சூரிய ஒளி உடலில்படுதல் போன்றவை கிடைக்கும். சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி மூளையின் செயல்பாட்டிற்கு மிக முக்கியம். ஆனால் இப்போது குழந்தைகள் வீட்டிற்குள்ளே இருக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு வீட்டு முற்றத்திற்கு வருவதற்குகூட அனுமதி கிடைப்பதில்லை.
பள்ளிகள் இல்லாததால் மைதானங்களிலான விளையாட்டுகளுக்கு பதில் செல்போன், கம்ப்யூட்டர்களில் விளையாடுகிறார்கள். அதனால் டிஜிட்டல் அடிக்ஷன் எனப்படும் பாதிப்புக்கு நிறைய சிறுவர்-சிறுமியர்கள் உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களை மனநல சிகிச்சைக்கு அழைத்து வருகிறார்கள். எலக்ட்ரானிக் உபகரணங்களோடு குழந்தைகள் அதிக நேரத்தை செலவிடுவது அவர்களுக்கு உற்சாகமின்மை, அலட்சியம், உறக்கமின்மை, மறதி போன்றவைகளை ஏற்படுத்துகிறது.
முன்பு தினமும் பெருமளவு நேரத்தை குழந்தைகள் பள்ளிகளில் செலவிடுவார்கள். இப்போது முழுநேரத்தையும் அவர்கள் வீடுகளிலேயே செலவிடுவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக ஆசிரியர் வேலையையும் சேர்த்து செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இது பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒருவித கடினமான அனுபவம்தான்.