search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தேர்வு அறையில் பதற்றம் வேண்டாம்
    X
    தேர்வு அறையில் பதற்றம் வேண்டாம்

    தேர்வு அறையில் பதற்றம் வேண்டாம்

    மாணவர்கள் தேர்வு நேரத்தில் பதற்றமும், குழப்பமும் அடைவார்கள். தேர்வு அறையில் பதற்றமின்றி செயல்பட என்ன செய்ய வேண்டும்? அது பற்றி பார்க்கலாம்...
    பிளஸ்-2 தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற 27-ந் தேதி தொடங்க இருக்கிறது. சராசரி மாணவர்கள் தேர்வு பயம் கொண்டிருக்கலாம். ஆனால் நன்றாகப் படிக்கும் மாணவர்களும்கூட தேர்வு அறைக்குள் பதற்றம் அடைவது உண்டு. முழு மதிப்பெண் பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் செல்லும் அவர்கள், ஒற்றை ஒரு மதிப்பெண் வினாவுக்கு விடை சரியாகத் தெரியா விட்டால், பதற்றத்துக்கு உள்ளாகிவிடுவது உண்டு. சிறந்த மாணவர்களான அவர்களுக்கு அப்படியென்றால், சராசரி மாணவர்கள் அவர்களைவிட பலமடங்கு பதற்றமும், குழப்பமும் அடைவார்கள். தேர்வு அறையில் பதற்றமின்றி செயல்பட என்ன செய்ய வேண்டும்? அது பற்றி பார்க்கலாம்...

    பொதுத் தேர்வு குறித்த மாணவர்களின் மனப் பயத்தை போக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உள்ளது. இந்தத் தேர்வில்தான் உன் எதிர்காலமே உள்ளது என்று பயமுறுத்தி, அவர்களை தேர்வை பதற்றத்துடன் எதிர்கொள்ள வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    தேர்வு எழுதச் செல்லும் ஒவ்வொரு நாளும், பெற்றோரும், ஆசிரியரும் அவர்களுக்கு ஊக்கமும், ஆலோசனையும் தர வேண்டும்.

    வினாத்தாள் அமைப்பை மாணவர்கள் நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு தயாராகி இருந்தால் பதற்றத்தை வெகுவாக தவிர்த்துவிடலாம். நாம் சிறப்பாக தயாராகி இருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன் தேர்வெழுதச் செல்ல வேண்டும். இந்த உறுதி, மனதளவில் உள்ள தேர்வு பயத்தை நீக்கிவிடும்.

    தேர்வு மையத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிடுங்கள். கடைசி நேரம் வரை படித்துக் கொண்டிருப்பதை தவிருங்கள். அதற்கு மாறாக தேர்வெழுத தயாராகி, தேர்வுக் குத் தேவையான உபகரணங்கள், எழுதுபொருட்கள், நுழைவு அட்டை எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று சோதித்துப் பாருங்கள். பேனாவில் மை நிரப்புவது, பென்சிலை கூராக்குவது உள்ளிட்ட எல்லா முன்தயாரிப்பு பணி களையும் முடித்து வைத்திருங்கள்.

    தடை செய்யப்பட்ட பொருட்களான செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்களை தேர்வு மையத்திற்குள் கொண்டு சென்றுவிட்டு தேவையற்ற பதற்றத்தை உருவாக்கிக் கொள்ளாதீர்கள்.

    தேர்வு அறைக்குள் நுழைந்ததும், படித்த பாடங்கள், படிக்காத பாடங்கள் பற்றி யோசிக்க வேண்டாம். மனதை தளர்வாக வைத்து தேர்வு எழுத தயாராகுங்கள்.

    வினாத்தாளை படிக்க சில நிமிடங்களை ஒதுக்குங்கள். வினாத்தாள் கடினமாக இருக்கிறதா? எளிதாக இருக்கிறதா? என்று எடை போடாமல், விடை தெரிந்த வினாக்களுக்கு வேகமாக பதிலளிக்கத் தொடங்குங்கள். ஒவ்வொரு வினாவுக்கும் எவ்வளவு நேரத்திற்குள் விடையளிக்க வேண்டும் என்ற தெளிவுடன் நேரம் அறிந்து துரிதமாக விடை அளியுங்கள்.

    தெரியாத வினாவில் குழம்பிக் கொண்டிருப்பதை தவிருங்கள். தெரிந்தவரை விடை எழுதுங்கள்.

    முழு மதிப்பெண் கிடைக்காதோ என்று தயங்கவோ, குழம்பவோ வேண்டாம்.

    தேவையான பென்சில், பேனா, ஸ்கெட்ச் மற்றும் கணினி உபகரணங்கள் போன்றவற்றை தயாராகவும் உபயோகப்படுத்த எளிதாக வைத்திருங்கள். அவசர தேவைக்கான கூடுதல் உபகரணங்களையும் வைத்திருந்தால், அசாதாரண சூழலை சமாளிக்க முடியும்.

    தேர்வு முடியும் சமயத்தில், தேர்வு கடினமாக இருந்ததாக வருத்தப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். விடைகளை சரியாக எழுதியிருக்கிறோமா? என்று சரி பாருங்கள். அழகுபடுத்தல் வேலைகளை மன திருப்தியுடன் செய்யுங்கள். அத்துடன் விடைத்தாளை ஒப்படைக்கும் முடிவு எடுத்துவிட்டு அடுத்த தேர்வு பற்றிய சிந்தனைக்குத் தாவி விடுங்கள். எதையும் பின்னோக்கி சிந்திப்பதால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.

    ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே இருக்கும் விடுமுறை, ஓய்வு நாட்களை நன்கு பயன்படுத்தி அடுத்த தேர்வில் சிறப்பாக செயல்பட உறுதி கொள்ளுங்கள்.

    முறைகேடான செயல்களில் ஈடுபடும் நோக்கத்துடன் செல்பவர்களுக்கு பதற்றத்தை தணிக்க முடியாது. எனவே தவறான நோக்கத்தை கைவிட்டு தேர்வை நேர்மையுடன் எதிர்கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் பார்த்து எழுதுவது போன்ற செயல்களையும் தவிர்க்கலாம்.

    தேர்வு உங்களை பக்குவப்படுத்தவும், அடுத்தகட்டத்திற்கு உங்களைத் தயார்படுத்தவும்தான். முறைதவறி வெற்றி பெறுவதற்கானதல்ல என்பதை மனதில் கொண்டு, தேர்வை நேர்மறை எண்ணங்களுடன் வெற்றிகரமாக எதிர் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்!
    Next Story
    ×