search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குற்றவலையில் சிக்கும் இளம் குற்றவாளிகள்
    X
    குற்றவலையில் சிக்கும் இளம் குற்றவாளிகள்

    குற்றவலையில் சிக்கும் இளம் குற்றவாளிகள்

    சிறுவர்கள் குற்ற விகிதத்தில் தமிழகத்தின் நிலை இதர மாநிலங்களை விட மேம்பட்டு இருப்பதாக தோன்றினாலும் இவற்றின் போக்குகள் கவலையளிப்பதாக உள்ளதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    மாறி வரும் சமூக அமைப்பு, பொருளாதார அழுத்தங்கள் மற்றும் சிறு வயது முதல் வடிகட்டப்படாத செயல்களுக்கு ஆட்படுதல் ஆகியவை சிறுவர்களை குற்றச்செயல்களில் ஈடுபட தூண்டுகின்றன.

    சிறுவர்கள் குற்ற விகிதத்தில் தமிழகத்தின் நிலை இதர மாநிலங்களை விட மேம்பட்டு இருப்பதாக தோன்றினாலும் இவற்றின் போக்குகள் கவலையளிப்பதாக உள்ளதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    தமிழகத்தில் சிறுவர்கள் புரியும் குற்றங்களின் எண்ணிக்கை 2017-ல் 2,376 ஆக இருந்தது; இதன் விகிதம் (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு பதிவாகும் நிகழ்வுகள்) 11.8 ஆக பதிவானது.

    தேசிய அளவில் இது 33,606 ஆக, குற்ற விகிதம் 7.5 ஆக இருப்பதாக என்.சி.ஆர்.பி. (தேசிய குற்ற ஆவண காப்பகம்) கூறுகிறது.

    வெகு வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப, சமூக, பொருளாதார மாற்றங்களின் விளைவாக பாரம்பரியமான சமூக அமைப்பில் ஏற்பட்டு வரும் பெரும் தாக்கத்தினால் எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும் என்று குற்றவியல் உளவியலாளர்கள் கருதுகின்றனர்.

    கூட்டுக்குடும்பங்களின் சிதைவு, வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுடன் போதுமான அளவு நேரம் செலவிட முடியாத சூழல், சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர்களிடம் பரவும் வயது வந்தவர்களுக்கான காட்சிப்பொருட்கள் இவற்றின் விளைவாக ‘நாயக பிம்பத்தை’ கட்டமைக்கும் உந்துதல் ஏற்பட்டு சிறுவர்களிடம் அழுத்தத்தை உருவாக்கி அவர்களை குற்றச்செயல்களில் ஈடுபட செய்கிறது.

    தமிழகத்தில் சிறுவர்கள் குற்றம் 2015-ல் 1,814 ஆகவும், 2016-ல் 2,217 ஆகவும் இருந்து 2017-ல் 2,376 ஆக சற்று உயர்ந்துள்ளதாக என்.சி.ஆர்.பி தரவுகள் கூறுகின்றது.

    “சிறுவர் குற்றங்களில் அனேகமாக 30 முதல் 40 சதவீதம் மட்டுமே காவல் துறையினரின் கவனத்திற்கு வருகிறது. பெரும்பாலான சிறுவர் குற்றவாளிகள் வசதியான குடும்பங்களை சேர்ந்தவர்கள் தாம். அரசாங்கம் அல்லது அரசியல் தலைமையில் உயர்ந்த பதவியில் இருக்கும் உறவினர் ஒருவரின் பெயரை சொல்லி தப்பிக்கின்றனர். மிகவும் சக்தி வாய்ந்த குடும்பங்களில் இருந்து இவர்கள் வருகின்றனர்” என்கிறார் முன்னாள் தமிழக டி.ஜி.பி. டி.முகர்ஜி.

    “சில இடங்களில் இது மிக இளம் வயதில் ஒன்பது வயதில் தொடங்குகிறது. 100-ல் சுமார் 30 சிறுவர்கள், குற்றங்களை புரியும் சூழல்களுக்கு ஆளாகின்றனர். அதிகாரப்பூர்வமாக பதிவாகும் குற்றங்களை விட சிறுவர் குற்றங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும். அவமானத்திற்கு பயந்து பெற்றோர்கள் இதை பற்றி புகார் அளிக்க மறுப்பதே இதற்கு காரணம். சிறிய குற்றங்களை, பாதிக்கப்பட்டவர்களும், பெற்றோர்களும் பேசித் தீர்த்துக்கொள்கின்றனர். காவல் துறையினரிடம் இவை பற்றி புகார் அளிக்கப்பட்டாலும் அதிகாரப்பூர்வமற்ற சமரசங்கள் மூலம் இவை தீர்க்கப்படுகின்றன” என்கிறார் தேசிய குற்ற புலன் விசாரணை அமைப்பின் பிராந்திய இயக்குனரும், தமிழ்நாடு உளவியலாளர்கள் சங்கத்தின் உறுப்பினருமான டாக்டர் ஹேமப்பிரியா கார்த்திக்.

    செல்போன்களுக்கு அடிமையாதல், தம் பெற்றோர்களின் வசதிக்கு மீறிய வாழ்க்கை முறையை வெளிகாட்டிக்கொள்ள அதீத ஆசை, தங்களின் ஸ்மார்ட்போன்களில் உள்ள சமூக ஊடகங்கள் மூலம் சிறிய வயதிலேயே பாலியல் தொடர்பான விஷயங்களை பார்த்தல், சிறிய வயதிலேயே மதுகுடித்தல், புகை பிடித்தல், சக நண்பர்களின் அழுத்தத்தில் தம்மை தாதாக்களை போல் காட்டிக்கொள்ள, எதற்கும் துணிந்தவன் என்ற பிம்பத்தை கட்டமைக்க, சங்கிலி பறிப்பு, அடிதடியில் ஈடுபடுவது, எதிர் கோஷ்டி பையன்களை தாக்குதல், காதலிக்க மறுத்த பெண்களை தாக்குதல் போன்றவை குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களிடம் காணப்படும் சில போக்குகள் ஆகும்.

    மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபடுவது, அதிவேகமாக ஓட்டுதல், பொறுப்பில்லாமல் ஓட்டி பிறருக்கு பாதிப்புகளை ஏற்படுத்துதல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். பணம் இல்லாதபோது சிறிய அளவில் திருட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர்.

    பெற்றோர்கள் செல்லம் கொடுப்பது, அசுரன், நூறாவது நாள் போன்ற வன்முறையை தூண்டும் திரைப்படங்களின் தாக்கங்கள், திரைப்பட தணிக்கை வாரியத்தின் அலட்சியபோக்கு, வீடுகளில் மது குடிக்கும் கலாசாரத்தினால் அதை பின்பற்றும் சிறுவர்கள், தங்களின் பிள்ளைகளின் விருப்பத்தை என்ன செலவானாலும் நிறைவேற்ற முயலும் பெறோர்களின் போக்குகள் ஆகியவை சிறுவர் குற்றங்கள் அதிகரிக்க காரணங்கள் ஆகும். அதிகரிக்கும் சிறுவர் குற்றங்களை கட்டுப்படுத்த சமூக சீர்திருத்தம் தேவை. சமுதாயம் தான் இதை முன்னெடுக்க வேண்டும்” என்கிறார் முகர்ஜி.

    ஒரு 14 வயது சிறுவன், கஞ்சா வாங்க தன் தாயிடம் பணம் கேட்ட சம்பவத்தை டாக்டர் ஹேமப்பிரியா விவரிக்கிறார். பணம் கொடுக்க அவர் மறுத்ததும் அந்த சிறுவன் தன் தாயை கீழே தள்ளி விட்டதில் அவரின் தலையில் அடிபட்டு மரணமடைந்தார். அந்த சிறுவன் இறந்து போன தன் தாயாரின் கைகளில் இருந்த பணத்தை எடுத்து கஞ்சா வாங்கி புகைத்தான். மாலையில் அவனின் தந்தை வீடு திரும்பிய போது அவன் முழுமையாக கஞ்சா போதையில் இருப்பதை கண்டார்.

    இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று அவன் தந்தை யோசித்து கொண்டிருந்தபோது அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் போதையில் இருந்த அந்த மகன் அவரை ஒரு விளக்கு வைக்கும் கட்டையால் அடித்துக்கொன்றான். இப்போது அந்த சிறுவன் ஒரு சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் தனது செயல்களுக்கு வருந்தியவாறு தண்டனை காலத்தை கழிக்கிறான்.

    அந்த சீர்திருத்த பள்ளியில் பல முறை தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளான். விடுதலை ஆனபின்பு சமூகமும், தன் குடும்பமும் தம்மை ஏற்க மாட்டார்கள் என்பதை அவன் உணர்ந்திருக்கிறான். எதிர்காலத்தில் அவன் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.

    அரசு நடத்தும் சிறுவர் சீர்திருத்த காப்பகங்களில் ஆரோக்கியமான சூழல் நிலவுவதில்லை. பிடிபட்ட சிறுவர்கள் சரியாக நடத்தப்படுவதில்லை. போதுமான இடவசதிகள் இருப்பதில்லை. இடப்பற்றாக்குறையினால் சிறுவர் குற்றவாளிகள் வயது வந்தவர்களுக்கான சிறைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கு குற்றச்செயல்களின் நுணுக்கங்கள் பற்றி கற்கின்றனர். சிறையை விட்டு விடுதலை ஆன பின்னர் குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களில் சேருகின்றனர். சமூகம் இவர்களை மன்னிப்பதில்லை என்பதால் இச்சிறுவர்கள் ஒரு குற்றச்சுழலில் சிக்குகின்றனர்.

    “பேருந்து நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களின் அருகில் இருக்கும் சிறுவர்கள் அவ்வப்போது பிடிக்கப்பட்டு துணை சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். பிறகு அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை கைதிகளாகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு தீவிரமான குற்றவாளிகளுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களிடம் பல விஷயங்களை கற்றுக்கொள்கின்றனர். இவர்கள் குற்றவாளிகளை உற்பத்தி செய்கின்றனர்.

    இந்த சிறுவர்கள் சிறு குற்றச்செயல்களில் தொடங்குகின்றனர். பிறகு கே.டி.(தெரிந்த திருடன்), டி.சி. (ஆவணக்குற்றவாளி) மற்றும் ஹெச்.ஓ. (தொடர்ச்சியாக குற்றம் செய்பவர்) போன்ற அடுத்த கட்டங்களுக்கு நகர்கின்றனர். தொடக்க காலத்தில் சிறிய குற்றச்செயல்கள் புரியும் சிறுவர்கள் மீது வீடற்றவர்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அட்டவணை ரவுடிகள் சட்டம் ஒழுங்கு பிரிவின் கீழ் வந்தனர். சந்தேகத்திற்கிடமானவர்கள் அட்டவணையில் சேர்க்க எப்.ஐ.ஆர்.கள் மட்டும் போதும். குற்றம் நிரூபிக்கப்பட தேவையில்லை. வரலாறு அட்டவணையில் குற்றவாளிகளின் பின்னணி முழுவதும் சேர்க்கப்படும்” என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி விவரிக்கிறார்.

    காவல் நிலையங்களில் உள்ள குற்றங்கள் பற்றிய ஆவணங்கள் ஐந்து வகையானவை. குற்றங்கள் பதிவேடு, குற்ற வரைபடம் (அதிக அளவில் குற்றங்கள் நிகழும் பகுதிகள்), முன்னாள் கைதிகள் பதிவேடு, கிராம குற்றப்பதிவேடு (கோஷ்டிகள், சாதி மோதல்கள், சந்தைகள் மற்றும் திருவிழாக்கள், முக்கிய வழக்குகள் போன்றவற்றை பற்றிய விரிவான தகவல்களை கொண்ட பதிவேடு) மற்றும் வரலாறு பதிவேடு ஆகியவை.

    வீடுகளில் ஒரு நிறைவான சூழலை வளர்த்தெடுக்க முடியாத பெற்றோர்களிடம் இருந்து போதிய கவனம் கிடைக்காததில் இருந்து இது தொடங்குவதாக உளவியாளர்கள் கூறுகின்றனர். உணர்வுரீதியான வெற்றிடம் ஒன்று உருவாகும்போது அதை சிறுவர்கள் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு நிரப்புகின்றனர். இது அனைத்து வர்க்கத்திற்கும் பொருந்தும். பள்ளிகள் இந்த பிரச்சினைகளை எதிர்கொள்வது அதிகரித்துள்ளது. ஆனால் அவை இதற்கான பொறுப்பை பெற்றோர்களிடம் சுமத்தி இது சிறுவர்களிடம் ஏற்படும் தாக்கங்களை புறந்தள்ளுகின்றன.
    Next Story
    ×