search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளை சுலபமாக சாப்பிட வைக்கலாம்
    X
    குழந்தைகளை சுலபமாக சாப்பிட வைக்கலாம்

    குழந்தைகளை சுலபமாக சாப்பிட வைக்கலாம்

    குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காதீர்கள். குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில், கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுங்கள்.
    ‘‘என் குழந்தையா? லேசிலே சாப்பிடாது! சாப்பிட வைக்கிறதுக்கு நான் படுற அவஸ்தை இருக்கே... அம்மம்மா!’’ என்று அலுத்துக் கொள்ளும் தாய்மார்களுக்கு, குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவதை இனிய அனுபவமாக்க முடியும்.

    குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காதீர்கள். குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில், கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுங்கள். குழந்தைக்கு திகட்டாமல் இருக்கும்.

    குழந்தை சாப்பிடக்கூடிய அளவுக்கு மேல் ஒருபோதும் வைத்துத் திணிக்காதீர்கள். இப்படிச் செய்வதால், அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவள்(ன்) ஆகும்போது, சாப்பாட்டையே ‘வேண்டாம்’ என்று ஒதுக்கித் தள்ளவும் கூடும்.

    பெரும்பாலான வீடுகளில், காலை நேரத்தில் குழந்தைகள் பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில், வாசலில் ஆட்டோ டிரைவர் ‘பாம் பாம்’ என ஹாரனை அலறவிட, டென்ஷனின் உச்சியில் இருக்கும் அம்மாக்கள், ‘ம்... முழுங்கித் தொலை!’ என்ற அர்ச்சனையோடு, இட்லியையோ, தோசை யையோ குழந்தையின் வாயில் திணித்து, விழிபிதுங்க வைப்பார்கள். இது ரொம்பவே தப்பு.

    சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது குழந்தைகளை அவசரப்படுத்தவே கூடாது. உணவு உண்ணும் நேரம் அவர்களுக்குச் சந்தோஷமான நேரமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். தான் ஊட்டினால்தான் தன் குழந்தை சாப்பிடும் என்று சில தாய்மார்கள் பெருமை பொங்க சொல்வார்கள். ஆனால், அது பெருமைப்பட வேண்டிய விஷயம் இல்லை.

    இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டவே கூடாது. மற்றவர்களோடு அமர்ந்து, அவர்களாகவே சாப்பிட விடவேண்டும். சாப்பாட்டை மேலே, கீழே இறைத்தாலும், குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிடுவார்கள். பழங்கள், காய்கறிகள், முழு பயறு வகைகள், பருப்பு வகைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் இவை தடுக்கும்.

    ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீராவது குழந்தைகளை அருந்த வையுங்கள். வெறும் தண்ணீராகக் குடிக்க அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், பழச்சாறாகவோ, பானகமாகவோ, மோராகவோ, மில்க் ஷேக்குகளாகவோ, இளநீராகவோ கொடுக்கலாம்.

    ‘காய்கறிகளை சாப்பிடவே மாட்டேன் என்கிறார்களே?’ என்பவர்களின் கவனத்துக்கு... காய்களை அப்படியே கொடுக்காமல், சாண்ட்விச்சுகளாகவோ, காய் நூடுல்ஸாகவோ, ஃப்ரைட் ரைஸாகவோ கொடுங்கள். பட்டாணியை வேக வைத்து மசித்தோ, கேரட், பீட்ரூட் போன்றவற்றைத் துருவி தூவியோ, உங்கள் அயிட்டங்களை கலர்ஃபுல்லாக பரிமாறுங்கள். அப்புறம் பாருங்கள், சந்தோஷமாகச் சாப்பிடுவார்கள்.

    ஒரே பழத்தை முழுதாகக் கொடுப்பதைவிட, பல பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பால், தேன் கலந்து சாலட்டாகவோ, மில்க் ஷேக்குகளாகவோ கொடுத்தால் வைட்டமின், மினரல், நார்ச்சத்து எல்லாம் ஒரே உணவில் அவர்களுக்குக் கிடைக்கும்.

    குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும்போதோ, அல்லது அவர்கள் கேட்கிறார்கள் என்றோ தயவுசெய்து, செயற்கையான மணம், நிறம் சேர்க்கப்பட்ட தின்பண்டங்களை வாங்கித் தராதீர்கள். ஒரு முறை சாப்பிட்டால், அதற்கே அடிமையாகும் அளவுக்கு அப் பண்டங்களில் செயற்கை ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உங்கள் குழந்தைகளின் பஞ்சு போன்ற வயிற்றைப் பதம் பார்த்து, அவர்களுக்குப் பசியே எடுக்கவிடாமல் அவை செய்துவிடும்.

    நீண்ட நாள் பேக் செய்யப்பட்ட தின்பண்டங்களும் வேண்டாமே! செயற்கை நிறம், மணமூட்டப்பட்ட பொருள்களும், பேக் செய்யப்பட்ட தின்பண்டங்களும் உங்கள் செல்லங்களின் விட்டமின் சத்துக்களை உறிஞ்சுவதோடு, அவர்களின் நடவடிக்கைகளையே மாற்றுகிறது. ‘ஹைபர் ஆக்டிவிடி’ எனப்படும் (அதிவேக செயல்பாடு உடைய) இயல்பும்கூட இதனால் உண்டாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    காபி, டீ, குளிர் பானங்கள் போன்றவை குழந்தைகளின் முழு சிஸ்டத்தையே குலைக்கக் கூடியவை. தவிர்த்து விடுங்களேன்! சிலர், ‘பால் குடிக்கமாட் டேங்கிறான்’ என்று கூறி, சில துளிகள் டிக்காஷன் விட்டுக் கொடுப்பார்கள். குளிர்பானத்தை ஃபீடிங் பாட்டிலில் ஊற்றிக் கொடுப்போரும் உண்டு. இவை ரொம்ப தப்பான விஷயங்கள்.

    எந்த உணவிலும் முடிந்தவரை ஜீனியைத் தவிர்த்துவிட்டு, பனை வெல்லம், நாட்டு சர்க் கரை, கருப்பட்டி போன்ற வற்றைச் சேர்த்துக் கொடுத்துப் பழக்குங்கள். அவ்வளவும் இரும்புச் சத்து! இல்லையெனில், இயற்கையே நமக்குத் தந்திருக்கும் அற்புத இனிப்பான தேன் சேர்க்கலாம்.

    செலவைப் பார்க் காமல், பல நிறங்களில், பல வடிவங்களில், பிளேட்டுகள், கிண்ணங் கள், ஸ்பூன்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஒரே தட்டில் போட்டுக் கொடுப்பதுகூட, குழந்தைகளுக்கு அலுப்பூட்டும். ‘தோ பார்றா கண்ணா, மிக்கி மவுஸ் ஷேப் பிளேட்டுல பப்பு மம்மு’ என்றோ, ‘எங்க செல்லத்துக்கு இன்னிக்கு ஸ்டார் ஷேப் பிளேட்டுலதான் டிபனாம். உங்க யாருக்கும் கிடையாது’ என்றோ சொல்லிப் பாருங்கள். பிளேட்டின் மேலுள்ள கவர்ச்சி, கிடுகிடுவென உணவை உள்ளே இழுக்கும்.

    தோசை, சப்பாத்தி, பூரி, இட்லி போன்ற டிபன்களின் வடிவங்களையும் உங்கள் கற்பனைக்கேற்ப, குழந்தையின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றலாமே! பிறை நிலா வடிவில் தோசை, பூ டிசைனில் சப்பாத்தி, சதுரக் கேக்குகளாக இட்லி என்று வேளைக்கு ஒன்றாக அசத்தினால், எந்தக் குழந்தை சாப்பிட அடம்பிடிக்கும்?

    உடல்நிலை சரியில்லாத குழந்தைகளுக்கு, நீர்க்க இருக்கும் சூப் அல்லது ரசம் பிசைந்த சாதம், வேகவைத்த காய் என சீக்கிரம் செரிக்கும் உணவுகளைக் கொடுங்கள். காரம், மசாலா வேண்டாம். தண்ணீர் நிறையக் கொடுக்கலாம். அப்போது தான் மாத்திரை, மருந்தினால் உடலில் படிந்த நச்சுக்கள் வெளியேறும். 
    Next Story
    ×