என் மலர்
வழிபாடு

ராமேசுவரம் கோவில் விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உலா
- விநாயகருக்கு பாலாபிஷேகம், புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- கோவில் யானை தும்பிக்கையை தூக்கி விநாயகரை வணங்கியது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதே போல் அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நந்தி மண்டபம் எதிரில் உள்ள விநாயகருக்கு நேற்று பாலாபிஷேகம் மற்றும் புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வெள்ளி கவசம் சாத்தப்பட்டு கொழுக்கட்டை படையல் வைக்கப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து கோவிலில் இருந்து விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, நடுத்தெரு, திட்டக்குடி சாலை, ராமத்தீர்த்தம், சீதா தீர்த்தம் சாலை வழியாக பஸ் நிலையம் அருகே உள்ள காட்டுப் பிள்ளையார் கோவிலுக்கு வந்தடைந்தார்.
வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளிய போது கோவில் யானை ராமலட்சுமி தன் தும்பிக்கையை விநாயகரை நோக்கி தூக்கிய படி வணங்கியது. அப்போது இந்த காட்சியை கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து செல்போனிலும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அதுபோல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேசுவரம் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.