search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடி மாதம் அம்மன் விழாவில் எலுமிச்சை, வேம்பு, மஞ்சள் முக்கிய பங்கு வகிக்க காரணம்...
    X

    ஆடி மாதம் அம்மன் விழாவில் எலுமிச்சை, வேம்பு, மஞ்சள் முக்கிய பங்கு வகிக்க காரணம்...

    • வேம்புக்கு சக்தி விருட்சம் என்று பெயர் உண்டு.
    • அம்மன் வழிபாட்டில் அவ்வளவு முக்கியத்துவமானது எலுமிச்சை பழம்.

    அரிசி மாவும் வெல்லமும் அல்லது நாட்டுச்சர்க்கரையும் சேர்த்து பிசைந்து, நெய் விட்டு விளக்கை ஏற்றுகிற வழிபாடு மாவிளக்கு. ரேணுகா பரமேஸ்வரியை காப்பாற்றிய சேரிமக்கள், வறுமை காரணமாக, ரேணுகா தேவிக்கு தினைமாவும் தேனும் தான் உணவாகக் கொடுத்தனர். சிலசமயம் ''கூழ்'' கொடுத்தும் காத்தனர். அதை நினைவுபடுத்துகிற மாதிரியான வழிபாடுதான் மாவிளக்குப் போடுவது. கூழ் ஊற்றுவது, ஆடி மாதத்தில் வசதி படைத்தவர்களும் எளிமையான கூழை அம்மனுக்கு படைப்பதும் பிரசாதமாக பிறருக்கு தந்து தானும் குடிப்பதும் அதை நினைவுபடுதுகிற மாதிரியான வழிபாடுதான்.

    பண்டைக்காலம் முதல் ஆடி மாதம் மருந்துக்கஞ்சி தயாரித்து குடிக்கும் வழக்கம் இருந்தது. அதிமதுரம், ஜீரகம், சின்ன வெங்காயம் திருகடுகு, திப்பிலி குன்னிவேர், உழிஞ்சைவேர், சிற்றாமுட்டி இதை கேப்பையில் (கேழ்வரகு) இட்டு கஞ்சி வைத்து துணிப்பையை பிழிந்து பின் அருந்துவதே மருந்துக்கஞ்சி.

    வேம்பு

    பச்சை வண்ணமானவள், பராசக்தி எப்போதும் பசுமையாகவே காட்சியளிக்கக் கூடியது வேம்பு. அதனால் வேம்புக்கு சக்தி விருட்சம் என்று பெயர் உண்டு. அக்னி வடிவான ரேணுகாதேவி தீயினால் காயம் அடைந்த போது அவளுக்கு மருந்தாகவும், ஆடையில்லாமல் அவள் தவித்த போது அவளது உடையாகவும் இருந்து உதவியது வேம்பு.

    மஞ்சளைப் போலவே வேப்பிலையும் கிருமிகளை ஓட்டி நோய் நீக்கும் தன்மை உடையது. ரேணுகாம்பாளுக்கு உதவிய சேரி பெண், மஞ்சளும் வேப்பிலையும் சேர்த்து அரைத்து தீக்காயத்தை ஆற்ற பயன்படுத்தினாளாம். அதனால்தான் அம்மன் விழாவில் வேம்பும், மஞ்சளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    எலுமிச்சை

    எலுமிச்சை மாலை சாத்தப்படாத மாரியம்மன் கோவில்களோ, எலுமிச்சை தீபம் ஏற்றப்படாத காளி, துர்க்கை, மாரியம்மன் சன்னதிகளோ இருக்காது எனக்கூறலாம். அம்மன் வழிபாட்டில் அவ்வளவு முக்கியத்துவமானது எலுமிச்சை பழம். துர்சக்திகளை தூரவிரட்டுகிற சக்தி எலுமிச்சைக்கு உண்டு. அது மட்டுமல்ல அம்பிகையோட அம்சம் எலுமிச்சை பழத்திலும் கலந்துள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு. பொதுவாகவே குளிர்ச்சியான பார்வையும், வெப்பமான திருமேனியும் உடையவள், கனிவான அருளை நமக்கு வழங்குகிற அம்பிகையோட மேனி வெப்பத்தைக் குறைத்து அவளைக் குளிர்விக்க சாற்றப்படுவதுதான் எலுமிச்சைக்கனி மாலை.

    Next Story
    ×