search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனியையொட்டி வேளாங்கண்ணியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
    X

    ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனியையொட்டி வேளாங்கண்ணியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

    • சிலர் பாதயாத்திரையாக வந்து வேளாங்கண்ணி பேராலயத்தில் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • ஏராளமான பக்தர்கள் தங்களுடைய குறைகள் நீங்க மாதாவுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயம் இந்தியாவில் உள்ள மிக முக்கியமான ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆரோக்கிய மாதாவின் பிறந்த தினமான செப்டம்பர் 8-ந் தேதி வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி தேர்பவனியை காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்தனர். இதனால் வேளாங்கண்ணி பேராலய வளாகம் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளில் எங்கு நோக்கினும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் தங்களுடைய குறைகள் நீங்க மாதாவுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஒரு சிலர் பாதயாத்திரையாக வந்து வேளாங்கண்ணி பேராலயத்தில் நேர்த்திக்கடனை செலுத்தினர். வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக தென்னங்கன்றுகளை வாங்கி மாதாவுக்கு சமர்ப்பித்தனர்.

    மேலும் பக்தர்கள் தங்களது வீடு, வாகனங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பேராலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் பூட்டு வாங்கி பூட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகாத பெண்கள் தாலி வாங்கி கொடிமரத்தில் கட்டினர். திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி தொட்டில் வாங்கி பேராலய கொடிக்கம்பத்தில் கட்டி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் உடல்நலம் பாதுகாக்கவும், படித்த மாணவர்கள் வேலை வாய்ப்பை பெறுவதற்காகவும், பல்வேறு குறைகள் தீர பேராலய பகுதியில் அமைந்துள்ள சிலுவை பாதையில் முட்டியிட்டு சென்று பழைய மாதா கோவிலில் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    வேளாங்கண்ணி மாதா பேராலய பொிய ேதர்பவனியையொட்டி பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதாரத்துறையின் மூலம் ஆங்காங்கே தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் வேளாங்கண்ணியில் 10 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு மருத்துவ வசதி செய்யப்பட்டது. வெளியூரில் இருந்து ரெயிலில் வந்த பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் காய்ச்சல் கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 485 துப்புரவு பணியாளர்கள் அமைக்கப்பட்டு தினமும் உடனுக்குடன் குப்பைகள் அகற்றும் பணி நடந்தது. பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனா்.

    Next Story
    ×