search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோவிலில் ஜூலை மாத உண்டியல் வருமானம் ரூ.139.33 கோடி
    X

    திருப்பதி கோவிலில் ஜூலை மாத உண்டியல் வருமானம் ரூ.139.33 கோடி

    • லட்டு பிரசாதம் ரூ.1 கோடியே 7 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
    • 53 லட்சத்து 41 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.

    திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேகற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பக்தர்கள் மூல மூர்த்தியை திருப்திகரமாக தரிசனம் செய்வதற்கும், வாகன சேவைகளை பின்னணியில் இருந்து தரிசிப்பதற்கும் போதிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

    செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கொடியேற்றம், அக்டோபர் மாதம் 1-ந்தேதி கருடசேவை, 2-ந்தேதி தங்கத்தேரோட்டம், 4-ந்தேதி மரத்தேரோட்டம், 5-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலின் நான்கு மாட வீதிகளில் பிரம்மோற்சவ விழா வாகனச் சேவைகளை நடத்த பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறோம். சாதாரணப் பக்தர்களுக்கு இலவச தரிசனம் வழக்கம்போல் அளிக்கப்படும்.

    பிரம்மோற்சவ விழா நாட்களில் ரூ.300 டிக்கெட் தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம் உள்பட அனைத்து வகையான தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பிரம்மோற்சவ விழா முதல் நாளான செப்டம்பர் மாதம் 27-ந் தேதி, மாநில அரசு சார்பில் மூலவர் ஏழுமலையானுக்கு ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி பட்டு வஸ்திரம் மற்றும் மங்கள பொருட்களை சமர்ப்பணம் செய்கிறார்.

    முதல் நாள் கொடியேற்றத்தையொட்டி இரவு 9 மணிக்கு பெரியசேஷ வாகனச் சேவை நடக்கிறது. மற்ற நாட்களில் காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் வாகனச் சேவை நடக்கும்.

    திருமலையில் கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அகண்ட ஹரிநாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி திருமலையில் மீண்டும் தொடங்கியது. திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 2007-ம் ஆண்டு அகண்ட ஹரிநாம சங்கீர்த்தனம் திட்டத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    சுமார் 1.30 லட்சம் கலைஞர்கள் 7,500-க்கும் மேற்பட்ட குழுக்களில் பதிவு செய்துள்ளனர். கலைஞர்களுக்கு தங்குமிடம், போக்குவரத்துக் கட்டணம் மற்றும் இதர வசதிகளை கம்ப்யூட்டர் மயமாக்கல் முறையில் செய்து தருகிறோம்.

    திருப்பதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மருத்துவமனையில் 3 வார்டுகளை மேம்படுத்தி, மேலும் 100 படுக்கை வசதிகளை நோயாளிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    திருமலையில் உள்ள விடுதிகளில் அறைகள் பெற்ற பக்தர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை விரைந்து தீர்க்க அமைக்கப்பட்ட புகார் மைய திட்டம் நல்ல பலனை தந்து வருகிறது. திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணு நிவாசம், கோவிந்தராஜசாமி சத்திரங்களில் இந்தப் புகார் மையம் தொடங்க முடிவு செய்துள்ளோம்.

    திருமலையில் மூலவர் ஏழுமலையானுக்கு தினமும் நடக்கும் அனைத்து சேவைகளை பக்தர்கள் அனைவரும் காணும் வகையில் 16-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை நெல்லூரில் உள்ள ஏ.சி. சுப்பாரெட்டி அரங்கத்தில் ஸ்ரீவெங்கடேஸ்வர வைபவ உற்சவம் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது.

    விழாவில் பங்கேற்று தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படும். முதலுதவி மையங்கள் அமைக்கப்படும். ஆன்மிகம் மற்றும் பக்தி இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    திருமலையில் வருகிற 19-ந்தேதி கோகுலாஷ்டமி ஆஸ்தானம், 20-ந்தேதி கோவில் எதிரே உறியடி உற்சவம், 30-ந்தேதி வராஹ ஜெயந்தி, 31-ந்தேதி விநாயக சதுர்த்தி விழாக்கள் நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 23 லட்சத்து 40 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் வருமானமாக ரூ.139 கோடியே 33 லட்சம் கிடைத்துள்ளது.

    லட்டு பிரசாதம் ரூ.1 கோடியே 7 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 53 லட்சத்து 41 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. 10 லட்சத்து 97 ஆயிரம் பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

    நேற்று முன்தினம் 74 ஆயிரத்து 497 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 36 ஆயிரத்து 244 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.5 கோடியே 15 லட்சம் கிடைத்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×