என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாளை (18-4-2025) வளம் தரும் `வராக ஜெயந்தி
    X

    நாளை (18-4-2025) வளம் தரும் `வராக ஜெயந்தி'

    • வராகர் திருமாலின் தசாவதாரங்களில் மூன்றாவது அவதாரமாகும்.
    • கடன்கள் தீர்ந்து செல்வ வளம் பெருகவும் வராகர் அருள்வதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    வராக மூர்த்தி மனித உடலும், வராக முகமும் கொண்ட திருமாலின் தசாவதாரங்களில் மூன்றாவது அவதாரமாகும். வராக மூர்த்தியின் உருவத்தை ஆதிவராகம், யக்ஞவராகம், பிரளய வராகம் என்று மூன்றாகக் குறிக்கின்றனர். லட்சுமியையும் பூதேவியையும் தன்னுடன் கொண்டிருப்பவர் லட்சுமி வராகர், பூவராகர் என வணங்கப்படுகிறார்.

    "பூமியைக் கைப்பற்றிய இரண்யாட்சன் என்ற அசுரன், அதை கடலுக்கடியில் எடுத்துச் சென்றான். திருமால் வராக அவதாரம் எடுத்து, இரண்யாட்சனுடன் பல ஆண்டுகள் போர் புரிந்து வென்றார்' என்கிறது வரலாறு.

    சிம்ம விஷ்ணு அரிகேசரிவர்மன் என்னும் பல்லவ மன்னனுக்கு பெருமாள் காட்சி தந்ததால், ஆதிவராக பெருமாள் கோயிலை மாமல்லபுரத்தில் குடைவரை கோயிலாக அவன் அமைத்துள்ளான்.

    திருவிடந்தைப் பெருமாளை அரிகேசரிவர்மன் தினமும் வணங்கி, அன்னமிட்டதன் பிறகே உணவு உண்பது பழக்கம். ஒருநாள் திருமால் தாயாருடன் மனித உருவில் வந்து மன்னனிடம் உணவு கேட்டார். மன்னன் சொல்லியும் இறைவன் கேட்காததால், அவர்களுக்கு அன்னம் படைத்தான்.

    திருமால் வலது தொடையில் தாயாரை அமர்த்தி லட்சுமி வராகராகச் சேவை சாதித்தார். தலசயனப் பெருமாளுக்கும் முந்தைய மூர்த்தி என்பதால், இவர் "ஆதிமூர்த்தி' என்று அழைக்கப்படுகின்றார்.


    மூலவர் ஆதிவராகர் வர்ண கலாப மூர்த்தியாக நின்ற திருக்கோலத்தில், இடது திருவடியின் கீழ் ஆதிசேஷன், மனைவி வணங்கியபடி இருக்க, மேற்கு நோக்கியபடி, பிராட்டியை வலப்பக்கத்தில் ஏந்தி காட்சி அளிக்கிறார். ஆகையால் இவர் "வலவெந்தை பெருமாள்' ஆகிறார். திருவிடந்தை திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

    "என்+தந்தை=எந்தை' என்பது அவர் திருநாமம். வராகமூர்த்தி தமது இடப்பக்கத்தில் பூமிதேவியை ஏந்திய கோலமாகக் காட்சி தருதலால் "இடஎந்தை' எனப்படுகிறார். மூலவர் தினம் ஒரு கன்னியை ஆண்டு முழுவதும் திருமணம் செய்ததால், "நித்ய கல்யாணப் பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார்.

    கருவறையில் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்தோடு இடது மடியில் தாயாரை அமர்த்தி அவரின் காதருகே சரம ஸ்லோகம் உபதேசிக்கும் கோலம்.

    பெருமாளின் இடது திருவடி ஆதிசேஷன் தம்பதியினரின் சிரசில் படுமாறு அமைந்துள்ளது. இவரை தரிசிப்பவர்களுக்கு ராகு-கேது தோஷ நிவர்த்தியும் ஏற்படுகிறது.

    திருமலை முதலில் வராகரின் கோவிலாகவே இருந்தது. அங்கே புஷ்கரணிக்கு ""வராக சுவாமி புஷ்கரணி'' என்று பெயர். கரைமேல் ஆதிவராக சுவாமி கோவில் உள்ளது.

    சீனிவாசர் இருக்க இடம் கொடுத்ததாக வரலாறு. ராமானுஜர் வராகப் பெருமாளுக்கு ஒரு உற்சவ மூர்த்தியையும் பிரதிஷ்டை செய்து, ஒருநாள் அத்யயன உற்சவம், வராக ஜெயந்தி உற்சவத்தை நடத்தினார். திருமலையில் வராகர் தோன்றிய ஐப்பசி திருவோணத்தன்று சிறப்பாக உற்சவம் நடத்தினார்.

    கடலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஸ்ரீமுஷ்ணம் கோவில் கரு வறையில் சாளக்கிராமத்தினாலான சிறிய வராகப் பெருமாள் இடுப்பில் கை வைத்துக் கொண்டு கம்பீரமாகக் காட்சி தருகின்றார். மூலவருக்கு தினமும் திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

    திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குபேரன் ஆதிவராகரை பிரதிஷ்டை செய்ததாக வரலாறு கூறுகிறது. ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் சந்நிதிக்கு பின்புறத்தில் ஞானபிரான் சந்நிதியில் லட்சுமி வராகர், காஞ்சி வரதராஜர் கோவில், மதுரை கள்ளழகர் கோவிலில் கும்பகோணம் திருமலைவையாவூர் ஆகிய இடங்கள் தவிர பிற இடங்களிலும் தனி சந்நிதிகள் உள்ளன.

    நிலப் பிரச்னைகள் தீரவும் கடன்கள் தீர்ந்து செல்வ வளம் பெருகவும் வராகர் அருள்வதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    சித்திரை மாத கிருஷ்ண பட்சத்தில் பஞ்சமி திதியில் பன்றி உருவத்தில் பலத்துடன் பூமியைக் கொம்புகளில் சுமந்தவாறு நாராயணன் தோன்றிய தினம் தான் "வராக ஜெயந்தி'. இந்த ஆண்டு வராக ஜெயந்தி நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    Next Story
    ×