search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாளை ஆடி அமாவாசை- சதுரகிரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம்
    X

    நாளை ஆடி அமாவாசை- சதுரகிரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம்

    • சதுரகிரி கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • ஆடி அமாவாசையை முன்னிட்டு மலையடிவாரம் மற்றும் கோவில் பகுதிகளில் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி மேல் உள்ள இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    வருடந்தோறும் ஆடி, தை, மகாளய அமாவாசை நாளன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த 12-ந் தேதி முதல் வருகிற 17-ந் தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் நாளில் இருந்தே சதுரகிரிக்கு சிறுவர்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலை 5.30 மணிக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கடந்த 3 நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் நாளை (16-ந் தேதி) ஆடி அமாவாசையை முன்னிட்டு வழக்கத்தை விட இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை அடிவாரத்தில் அதிகளவில் திரண்டனர். அவர்களின் உடைமைகளை சோதனை செய்த வனத்துறையினர் பின்னர் மலையேற அனுமதித்தனர்.

    அடிவாரத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூர மலைப்பாதையில் பக்தர்கள் சாரைசாரையாக சென்று சாமி தரிசனம் செய்தனர். சங்கிலிபாறை, வழுக்கு பாறை, பிலாவடி கருப்ப சாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சதுரகிரி கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் உள்பட ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர். ஆடி அமாவாசையை முன்னிட்டு மலையடிவாரம் மற்றும் கோவில் பகுதிகளில் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    இன்று முதல் 17-ந் தேதி வரை பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் மதுரை, விருதுநகர், திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து சதுரகிரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×