search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடி பவனி: இன்று கொடியேற்றம்
    X

    கொடி பவனி நடந்த போது எடுத்த படம்.

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடி பவனி: இன்று கொடியேற்றம்

    • அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடியை பக்தர்கள் பவனியாக எடுத்துச் சென்றனர்.
    • நேர்ச்சையாக கொடிகளை காணிக்கை செலுத்துவோர் கொடிகளை தட்டுகளில் ஏந்தி சென்றனர்.

    உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது வழக்கம். அதன்படி நேற்று மாலை 5 மணிக்கு திருப்பலி நடந்தது. 6 மணிக்கு மறைமாவட்ட முதன்மை செயலாளர் செல்வம் தலைமையில் திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து கொடிபவனி தொடங்கியது. ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் இன்று (புதன்கிழமை) காலை ஏற்றப்படவுள்ள அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடியை பக்தர்கள் பவனியாக எடுத்துச் சென்றனர்.

    மேலும், நேர்ச்சையாக கொடிகளை காணிக்கை செலுத்துவோர் கொடிகளை தட்டுகளில் ஏந்தி சென்றனர். அதுபோன்று பக்தர்கள் கல்வி உபகரணங்கள், ஏழைகளுக்கு வழங்கக்கூடிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு காணிக்கை பொருட்களையும் பவனியாக கொண்டு சென்றனர். இந்த கொடி பவனி செயின்ட் பீட்டர் தெரு, மணல் தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக, தூய பனிமய மாதா ஆலயத்தை வந்தடைந்தது. அங்கு அருட்தந்தையர்கள் கொடிகள் மற்றும் காணிக்கைகளை பெற்றுக் கொண்டு மக்களை ஆசீர்வதித்தனர்.

    இதனை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை கொடியேற்றம் நடக்கிறது. தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் கூட்டுத் திருப்பலியும், தொடர்ந்து கொடியேற்றமும் நடக்கிறது. இந்த ஆண்டு தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தங்கத் தேர் பவனி நடக்கிறது. 16-வது முறையாக இந்த ஆண்டு தங்கத் தேர் பவனி நடப்பதால் திருவிழா நாட்களில் தினமும் ஒரு பிஷப் பங்கேற்று சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகின்றனர். விழா ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை குமார்ராஜா, உதவிப் பங்குத்தந்தை சைமன் ஆல்டஸ் மற்றும் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் செய்து உள்ளனர்.

    Next Story
    ×