search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    X

    காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    • 14-ந்தேதி பூச்சொரிதல் விழா நடக்கிறது.
    • 7-ந்தேதி மாலை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    சிவகங்கை பையூர் பகுதியில் சிவகங்கை நகர் மக்களுக்கு வேண்டும் வரம் தரும் அம்மனாக பிள்ளைவயல் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு 69-வது ஆண்டு திருவிழாவாக வருகிற ஜூலை மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது.

    முன்னதாக காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு தெப்பக்குளத்தில் இருந்து பூக்கரகம் எடுத்து வந்து கோவில் முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி ஒருவார காலம் அம்மன் தினந்தோறும் பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

    தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், கரும்பு தொட்டில் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 14-ந்தேதி பூச்சொரிதல் விழா காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணிக்குள் அம்மனுக்கு பால் மற்றும் பல்வேறு திரவிய பொருட்கள் மூலம் அபிஷேகம் நடக்கிறது. மாலையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.

    இரவு முழுவதும் சிவகங்கை நகரில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் மற்றும் பக்தர்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து பூ காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கொல்லங்குடி கோவில் செயல் அலுவலர் நாராயணி தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×