search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவொற்றியூரில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வரும் வடிவுடையம்மன் கோவில் தெப்பக்குளம்
    X

    திருவொற்றியூரில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வரும் வடிவுடையம்மன் கோவில் தெப்பக்குளம்

    • 2016-ம் ஆண்டு தைப்பூசத்தில் வடிவுடையம்மன் கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
    • சுமார் 6 ஆண்டுகளாக நீரின்றி வறண்டு கிடந்தது வடிவுடையம்மன் கோவில்.

    திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கோவில் வெளியே உள்ள ஆதிஷேசகுளம் என்ற பெரிய குளம் 2.5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

    இந்த குளத்துக்கு தண்ணீர்வரும் மதகுகள் அடைக்கப்பட்டு சரியாக பராமரிக்கப்படாமல் கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு பல ஆண்டுகளாக நீர் இல்லாமல் தெப்பக்குளம் வற்றி வறண்டு கிடந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துவிட்டது.

    இதையடுத்து திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து சுற்றுவட்டாரத்தில் இருந்து வரும் மழைநீர் அனைத்தும் குழாய்கள் வழியாக இந்த குளத்துக்கு வரும் வகையில் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மழைநீரானது புதிதாக கட்டமைக்கப்பட்ட குழாய்கள் வழியாக கோவில் குளத்துக்கு வந்தது. இதனால் சுமார் 6 ஆண்டுகளாக நீரின்றி வறண்டு கிடந்த வடிவுடையம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தற்போது தண்ணீர் நிரம்பி வருகிறது.

    பல வருடங்களுக்கு பிறகு கோவில் குளத்தில் தண்ணீர் தேங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குளத்தை தூய்மைப்படுத்தும் பணிகளை மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, உதவி ஆணையர் சங்கரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.

    அப்போது மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு கூறும்போது, "தற்போது அடைப்புகளை நீக்கி புதிதாக ஏற்படுத்தப்பட்ட குழாய்கள் வழியாக மழை நீர் குளத்துக்கு வருகிறது. மழை காலம் முடிந்ததும் திருவொற்றியூர் மெட்ரோ ரெயில் பாதையில் இருந்து வரக்கூடிய மழைநீரையும் இந்த குளத்துக்கு வரும் வகையில் புதிய திட்டம் உருவாக்கப்படும். இதன் மூலம் குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேங்கி இருக்கும்" என்றார்.

    கடந்த 2016-ம் ஆண்டு தைப்பூசத்தில் வடிவுடையம்மன் கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. அதன் பிறகு குளத்தில் தண்ணீர் இல்லாததால் நிலைதெப்ப உற்சவம் நடத்தப்பட்டது. தற்போது குளம் நிரம்பி வருவதால் இந்த ஆண்டு தெற்ப உற்சவம் நடைபெறவேண்டும் என்று கோவில் நிர்வாகத்துக்கு பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×