search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியபோது எடுத்த படம்.

    திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • சந்திரசேகரர் திருத்தேரோட்டம் 4-ந் தேதி நடக்கிறது.
    • கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் 6-ந்தேதி நடக்கிறது.

    திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. பிரசித்திப்பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவ விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தியாகராஜ சாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் கொடிமரம் அருகே எழுந்தருளினார். பின்னர் கொடிமரம், மஞ்சள், பால், பன்னீர், தயிர் உள்ளிட்ட மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சாம்பிராணி தூபமிட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதைதொடர்ந்து பிரமாண்ட கொடி மரத்தில், மங்கல வாத்தியங்கள் முழங்க, கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, கூடியிருந்த பக்தர்கள், தியாகேசா ஒற்றீசா என, விண்ணதிர பக்தி ேகாஷம் முழங்கினர். பின்னர் தியாகராஜ சாமி, பஞ்ச மூர்த்திகளுடன் நான்கு மாடவீதிகளில் உலா வந்தார்.

    மாசி பிரம்மோற்சவ திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் உற்சவர் சந்திர சேகரர் மற்றும் திரிபுர சுந்தரி தாயார், சூரிய, சந்திர பிரபை, சிம்மம், நாகம், பூதம், ரிஷபர், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, புஷ்ப பல்லாக்கு, இந்திர விமானம், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதி உலா வருவார்கள். விழாவின் முக்கிய நிகழ்வான சந்திரசேகரர் திருத்தேரோட்டம் 4-ந் தேதியும், கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் 6-ந் தேதியும் நடைபெற உள்ளது. வருகிற 7-ந் தேதி கடலாடு தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கம், 8-ந்தேதி இரவு தியாகராஜர் 18 திருநடனம், பந்தம் பறி உற்சவத்துடன், திருவிழா நிறைவடைகிறது.

    Next Story
    ×