search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் திருக்கல்யாணம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்ததை படத்தில் காணலாம்.

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் திருக்கல்யாணம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

    • தாணுமாலய சாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
    • இன்று இந்திரன் தேராகிய சப்பரத்தில் உற்சவமும், ஆராட்டு விழாவும் நடக்கிறது.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிகள் வழங்கினர்.

    விழாவில் நேற்று சனி பிரதோஷ வழிபாட்டுடன் திருக்கல்யாண விழா நடந்தது. சனி பிரதோஷ வழிபாட்டையொட்டி நேற்று இரவு 7 மணியளவில் கோவிலில் உள்ள அகல் விளக்குகள் அனைத்தும் ஏற்றப்பட்டு ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும் இருக்கும்படி அமரச் செய்து கோவிலை சுற்றி 3 முறை ஸ்ரீ பலி விழா நடந்தது.

    தொடர்ந்து தாணுமாலய சாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது. முன்னதாக நேற்று காலை 8 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனை பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளச் செய்து பறக்கையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அம்மனுக்கு திருமஞ்சள்நீராட்டு வைபவம் நடந்தது. பின்னர் அம்மனை மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து பல்லக்கு வாகனத்தில் ஆசிரமம் கிராமத்தில் எடுத்து வந்து ஆசிரமம் சோழன் திட்டை அணைக்கட்டில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    மாலையில் அறம் வளர்த்த நாயகி அம்மனை அலங்கரித்து பல்லக்கில் பூமாலை, தோரணம் கட்டி ஆசிரமத்தில் இருந்து வெற்றிலை, பூ மாலை, திருமணப்பட்டு, மஞ்சள், குங்குமம், சீர்வரிசை பொருள்கள் அடங்கிய தாம்பூல தட்டுடன் ஊர்வலமாக தாணுமாலய சாமி கோவிலை வந்தடைந்தனர்.

    இரவு 8 மணிக்கு மேல் அலங்கார மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் இருந்த தாணுமாலய சாமி கையில் திருமாங்கல்யம் வைக்கப்பட்டு, கருட வாகனத்தில் திருமால் வீற்றிருக்க அவரது முன்னிலையில் தாணுமாலய சாமி கையில் உள்ள திருமாங்கல்யம் வேத மந்திரங்கள் முழங்க பெண்கள் குலவையிட அறம் வளர்த்த நாயகி அம்மன் கழுத்தில் கட்டப்பட்டது. திருமணம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக தாணுமாலய பக்தர் சங்கம் சார்பில் சந்தனம், குங்குமம், வெற்றிலை சுருள் ஆகியவை வழங்கப்பட்டது. சுசீந்திரம் தெய்வீக இயல், இசை, நாடக சங்க உறுப்பினர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருமணம் முடிந்த தம்பதிகளான உமா மகேஸ்வரர் மற்றும் திருமால், அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்த சங்க நிர்வாகிகளும், திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் இந்திரன் தேராகிய சப்பரத்தில் உற்சவமும், இரவில் ஆராட்டு விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், திருக்கோவில் நிர்வாகத்தினரும் பக்த சங்கத்தினரும் இணைந்து செய்திருந்தனர்.

    Next Story
    ×