என் மலர்
வழிபாடு

உற்சவர்களுக்கு அபிஷேகம் நடந்தபோது எடுத்தபடம்.
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் இன்று தங்கத்தேரோட்டம்
- நான்கு மாட வீதிகளில் உற்சவர்கள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
- ஆர்ஜித கல்யாணோற்சவ சேவையை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் நடக்கும் வருடாந்திர வசந்தோற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது. அதையொட்டி முதல் நாளான நேற்று அதிகாலை மூலவரை துயிலெழுப்பி சுப்ரபாதம், தோமாலை சேவை, சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது. அதன்பிறகு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரரை வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வந்து ஆஸ்தானம் நடத்தினர்.
அதைத்தொடர்ந்து மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவர்கள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
வசந்தோற்சவத்தின் 2-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணியில் இருந்து காலை 7 மணி வரை தங்கத் தேரோட்டம் நடக்கிறது. வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு கோவிலில் நடக்க இருந்த ஆர்ஜித கல்யாணோற்சவ சேவையை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.