என் மலர்
வழிபாடு

திருமலையில் நாராயணகிரி ஸ்ரீவாரி பாதத்தில் சத்ரஸ்தாபன உற்சவம் 30-ந் தேதி நடக்கிறது
- தங்கக் கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுக்கப்பட்டது.
- ஸ்ரீவாரி பாதத்தில் திருமஞ்சனம் செய்து, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கின்றனர்.
கலியுகத்தில் திருமலையின் ஏழு மலைகளில் மிக உயரமான நாராயணகிரி மலையில் முதன்முதலில் காலடி எடுத்து வைத்தவர் வெங்கடேஸ்வர சுவாமி. இந்த நிகழ்ச்சியை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சத்ரஸ்தாபன உற்சவம் நடத்தப்படுகிறது. இதையொட்டி, அர்ச்சகர்கள் குழுவினர் ஸ்ரீவாரி பாதத்தில் திருமஞ்சனம் செய்து, சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட குடையை ஏற்றி பூஜை செய்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நாராயணகிரியில் உள்ள ஸ்ரீவாரி பாதத்தில் திருமஞ்சனம் செய்வதற்காக கோவிலின் தங்கக் கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுக்கப்பட்டது. ரங்கநாயகி மண்டபத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க குடைகளுடன் வலம் வந்து மேடாரமிட்டாவை அடைகின்றனர்.
அங்கிருந்து நாராயணகிரி உச்சியை அடைந்த அர்ச்சகர்கள், பங்காருபாவியில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தை கொண்டு ஸ்ரீவாரி பாதத்தில் திருமஞ்சனம் செய்து, அலங்காரம், பூஜை, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கின்றனர். அதைத்தொடர்ந்து, வேத பாராயணம், பிரபந்த சாத்துமோரை செய்து, ஸ்ரீவாரி பாதத்தில் குடை பிரதிஷ்டை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவார்கள்.






