search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிக்கல் சிங்காரவேலவர் கோவில் குடமுழுக்குஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
    X

    சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றியபோது எடுத்த படம்.

    சிக்கல் சிங்காரவேலவர் கோவில் குடமுழுக்குஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

    • பக்தர்கள் மீது குழாய் மூலமாக புனித நீர் தெளிக்கப்பட்டது.
    • நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் உள்ளது.

    நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் உள்ளது. தமிழ் கடவுளான முருகப்பெருமான் அருள்பாலிக்கும் இக்கோவில் அறுபடை வீடுகளை போல பல்வேறு சிறப்புகளை கொண்ட கோவிலாகும்.

    இங்கு நவநீதேஸ்வரர் மூலவராக அருள்பாலித்து வருகிறார். நவநீதேஸ்வரராக சிவன், கோலவாமனராக பெருமாள் சிங்காரவேலவராக முருகப்பெருமான் ஆகியோர் ஒரே கோவிலில் தனிச்சன்னதியில் அருள்பாலிப்பது இக்கோவிலின் சிறப்புகளில் ஒன்றாகும்.

    இங்கு அருள்பாலித்து வரும் வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்ததாக கந்த புராணம் கூறுகிறது.

    அதன்படி ஆண்டுதோறும் இக்கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவையொட்டி அம்மனிடம் இருந்து சிங்காரவேலவர்(முருகன்) வேல் வாங்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடக்கிறது.

    அப்போது முருகனின் மேனி எங்கும் வியர்வை சிந்தும் அதிசயத்தை பக்தர்கள் கண்டு வியந்து தரிசனம் செய்கிறார்கள். இந்த அற்புத காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் சிக்கலுக்கு வருவார்கள்.

    பல்வேறு சிறப்புகளைப் பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பணி வேலைகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.

    இதையொட்டி நவநீதேஸ்வரர், சிங்காரவேலவர், வேல் நெடுங்கண்ணி அம்மன், கோலவாமன பெருமாள் உள்ளிட்ட தனிச்சன்னதிகள், ராஜகோபுரம், திருக்கல்யாண மண்டபம், ராஜகோபுரம் கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு கோபுரங்கள், விமானங்கள் மற்றும் உள்பிரகார மண்டபங்கள் புனரமைக்கப்பட்டது.

    திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. 52 யாக குண்டங்களுடன் பிரம்மாண்ட யாக சாலை அமைக்கப்பட்டது. இங்கு 108 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை கூறி யாக சாலை பூஜைகளை நடத்தினர்.

    6 கால யாக சாலை பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை புனிதநீர் அடங்கிய கடங்கள் சிவ வாத்தியங்கள் முழங்க யாக சாலையில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டன. காலை 9.45 மணி அளவில் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.

    அப்போது 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு பக்தர்கள் சிக்கல் சிங்காரவேலவரை மனமுருகி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது குழாய் மூலமாக புனித நீர் தெளிக்கப்பட்டது.

    விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங், உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால், சென்னை ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ராஜா, நாகை குற்றவியல் நீதித்துறை தலைமை நீதிபதி கார்த்திகா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன், உதவி ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர் முருகன், தாசில்தார் ராஜசேகர், ஊராட்சி மன்ற தலைவர் விமலா ராஜா, சிக்கல் கோவில் அர்ச்சகர் ராமநாத சிவாச்சாரியார், சிக்கல் வர்த்தக சங்க நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×