search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்று சீரடி சாய்பாபா ஜெயந்தி தினம்: பாபா சொன்னதை சிந்தித்தால்...வெற்றி
    X

    இன்று சீரடி சாய்பாபா ஜெயந்தி தினம்: பாபா சொன்னதை சிந்தித்தால்..."வெற்றி"

    • பாபா அடிக்கடி "சப்கா மாலிக் ஏக்" என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.
    • வியாழக்கிழமை என்றால் சிறப்பு பூஜை செய்கிறார்கள்.

    ஓம் சாய்....

    ஸ்ரீ சாய்....

    ஜெய ஜெய சாய்....

    உலகம் முழுக்க வாழும் சீரடி சாய்பாபா பக்தர்கள் தினம் தினம் இந்த மந்திரத்தை உச்சரித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த மந்திரத்துக்குள் இருக்கும் மகத்துவத்தை யாராலும் அளவிடவே முடியாது. யார் ஒருவர் தினமும் ஓம் சாய்.... ஸ்ரீ சாய்.... ஜெய ஜெய சாய்.... என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே இருக்கிறாரோ அவரது மனம் ஆத்மார்த்தமாக அமைதியாகி விடும். நாளடைவில் அவர் பாபாவின் தத்துவங்கள் அனைத்தையும் கொண்ட மாமனிதனாக மாறி விடுவார்.

    இந்த அற்புதம் உலகளவில் ஓசையில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது. பொதுவாக இறைவனின் அவதாரங்களாக வருபவர்களால் மட்டுமே அற்புதங்களை நிகழ்த்த முடியும். அந்த வகையில் மராட்டிய மாநிலம் சீரடி மண்ணில் 60 ஆண்டுகள் வாழ்ந்த சீரடி சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்... ஏராளம்...

    அப்பாவிகளுக்கும், ஏழைகளுக்கும் அவர் கருணைக்கடலாக உள்ளார். ஆன்மீகத்தில் மேம்பட்டவர்களுக்கு அவர் வழிகாட்டியாக உள்ளார். பக்குவம் பெற்றவர்களுக்கு அவர் முக்தி பாதைக்கு வழிகாட்டும் கண்கண்ட தெய்வமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இப்படி பல வடிவங்களில் இருப்பதால்தான் நாட்டில் உள்ள பல்வேறு தரப்பு மக்களும் தினமும் சாய் நாமத்தை உச்சரித்துக் கொண்டு அவரை நம்பி அவரது பாதகமலங்களை இறுகப் பற்றியுள்ளனர்.

    மராட்டிய மாநிலத்தில் பாத்ரி என்ற கிராமத்தில் கங்கா-தேவகியம்மா ஆகியோருக்கு மகனாக சாய்பாபா பிறந்தார் என்றும் இஸ்லாமிய பக்தர் ஒருவர் அவரை 4 ஆண்டுகள் வளர்த்தார் என்றும் குறிப்புகள் உள்ளன. ஆனால் அவரை பற்றிய தெளிவான தகவல்களை இதுவரை எந்த ஆராய்ச்சியாளராலும் உறுதிப்பட சொல்ல முடிய வில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

    தத்தாத்ரேயரின் அவதாரமாக அவரை சொல்கிறார்கள். சீரடியில் வாழ்ந்த காலத்தில் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். அவரது திருவடிகளை சரணடைந்தவர்களின் அத்தனை எண்ணங்களையும் அவர் நிறைவேற்றினார். எந்த வடிவத்தில் அவரை பக்தர்கள் பார்க்க நினைத்தார்களோ அதே வடிவத்தில் மாறினார். அவரை நம்பி அடைக்கலம் அடைந்து விட்டால் நமது பாரத்தை சுமக்கும் பாதுகாவலராக மாறினார்.

    ஒவ்வொரு விஷயத்திலும் சாய் நாமத்தை உச்சரிக்கும்போது அனைத்து விதமான பாவங்களையும் நீக்கும் சக்தியை அளித்தார். குறிப்பாக சீரடி மண்ணில் யார் ஒருவர் காலடி எடுத்து வைக்கிறாரோ அவரது தோஷங்கள் அனைத்தையும் அன்றே விலக செய்வதை அனுபவப்பூர்வ மாக உணர்த்தினார்.

    சீரடியில் துவாரகமாயி தலத்தில் அவர் ஏற்றி வைத்த தீபம் இன்றும் அக்னிகுண்டமாக எரிந்து கொண்டு இருக்கிறது. அதில் இருந்து கிடைக்கும் சாம்பலைதான் சீரடி சாய்பாபாவின் பிரசாதமாக "உதி" என்ற பெயரில் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த "உதி" சக்திவாய்ந்தது. ஊழ் வினைகள் அனைத்தையும் விரட்டும் ஆற்றல் கொண்டது.

    பாபாவை வழிபட்டு உதியை வாங்கி கொண்டாலே போதும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் நழுவி நகர்ந்து விடும். ஆனால் இந்த பலனை பெறுவதற்கு பாபா காட்டிய தத்துவங்களை கடைபிடிக்க வேண்டும். பாபா தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் அந்த தத்துவங்களை வெளிப்படுத்தினார்.

    ஒழுக்கமாக வாழ வேண்டும், தொண்டு செய்ய வேண்டும், அன்னதானம் செய்ய வேண்டும், இரக்க செயல்களில் ஈடுபட வேண்டும், கண்மூடித்தனமாக சடங்குகளை கடைபிடிக்க கூடாது. இப்படி அவர் காட்டி உள்ள தத்துவங்கள் ஏராளம். இந்த தத்துவங்களில் வெற்றி பெற வேண்டுமானால் நம்பிக்கையும், பொறுமையும் வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

    எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் கலங்காதே... நீ என்னை நோக்கினால் நானும் உன்னை நோக்குவேன் என்று இன்றும் பாபா ஆசீர்வதித்துக் கொண்டு இருக்கிறார். அவர் சாதி, மதம், இனம் எதையும் பார்த்ததில்லை. அதனால்தான் சீரடி தலத்தில் இன்றும் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் என்று அனைத்து தரப்பினரும் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மதங்களை கடந்து அவர் நின்றார் என்பதற்கு இதுவே சாட்சியாகும்.

    அவர் சமய சடங்குகள் செய்தது இல்லை. யாகம் நடத்தியது இல்லை. புரியாத மந்திரங்கள் சொல்லி மக்களிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்தி கொண்டது இல்லை. அதனால்தான் சீரடி பூமி இன்றும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்களுக்கு சொர்க்க பூமியாக திகழ்ந்து கொண்டு இருக்கிறது.

    பாபாவை சீரடிக்கு சென்றுதான் வழிபட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. அவரது ஆலயங்கள் தமிழகம் முழுக்க நிரம்ப வந்து விட்டன. அனைத்து ஆலயங்களிலும் சீரடியில் நடப்பது போன்றே ஆரத்திகள் எடுக்கப்படுகின்றன. பாபாவுக்கு உரிய அத்தனை ஆராதனைகளும் சிறப்பாக செய்யப்படுகின்றன.

    இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பாபா ஆலயத்திலும் அவர் நீக்கமற நிறைந்து இருக்கிறார் என்பதை உறுதியாக நம்பலாம். இந்த பிறவியை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் பாபாவின் கொள்கை கோட்பாடுகளை தாமாகவே கடைபிடித்து கொண்டாலே போதுமானது. பாபாவின் தத்துவங்களை ஏற்றுக் கொண்டு வாழ்பவர்கள் ஒருநாளும் வீழ்ந்ததாக சரித்திரமே கிடையாது.

    அதே சமயத்தில் சாய்பாபாவின் வார்த்தைகளை கடைபிடித்தால் வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்தி லும் வெற்றி கிடைப்பதை அனு பவப்பூர்வ மாக உணர முடியும். அன்பு காட்டுங்கள் என்பது தான் பாபாவின் அடிப்படை தத்துவம். மனதில் அன்பு வந்து விட்டால் தன்னலமற்ற சேவையை தொடங்கி விடுவீர்கள் என்பது பாபா காட்டிய அடுத்த வழி.

    பாபா அடிக்கடி "சப்கா மாலிக் ஏக்" என்று சொல்லிக் கொண்டே இருப்பார். இதற்கு அனைவரின் கடவுள் ஒருவரே என்று அர்த்தம் ஆகும். இதை உணர்ந்து கொண்டவர்களிடம் நம்பிக்கை மற்றும் பொறுமையை விளக்கி சொன்னார். இவற்றை உணர முடியாத நிலையில் இருந்தவர்களிடம், "நான் இருக்கும் போது பயம் ஏன்" என்று ஆறுதல்படுத்தினார்.

    என்னை நம்புங்கள் உங்கள் பிரார்த்தனைக்கு பதில் கிடைக்கும். உலகம் ஒரு பாலம். அதை கடந்து செல்லுங்கள். அதில் ஒருபோதும் வீடு கட்ட நினைக்காதீர்கள் என்று தன்னை காண வந்த ஒவ்வொருவரிடமும் சீரடி சாய்பாபா வலியுறுத்தி சொல்வது உண்டு. இதை பாபா பக்தர்களில் எத்தனை பேர் ஆத்மார்த்தமாக கடைபிடிக்கிறார்கள் என்று ஆய்வு செய்தால்.... ஒரு சதவீதம் பேர்கூட தேற மாட்டார்கள்.

    அப்படியானால் சீரடி சாய்பாபா ஆலயங்களில் இப்போது என்ன நடக்கிறது என்ற கேள்வி எழலாம். ஆரத்திகள் நடத்து கிறார்கள், அன்னதானம் செய்கிறார்கள், வியாழக்கிழமை என்றால் சிறப்பு பூஜை செய்கிறார்கள். ஆனால் இவை போதுமா? என்றால் நிச்சயம் போதாது.

    சாய்பாபாவின் அருளை உண்மையிலேயே பெற நினைத்தால் என்ன செய்ய வேண்டும். முதலில் பாபாவை நம்ப வேண்டும். அவரிடம் பக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவரது போதனைகளை கடைப்பிடிக்க வேண்டும். சத்சரிதம் படித்தால் மட்டும் போதாது. பாபாவின் ஒவ்வொரு வாசகங்களையும் மனதுக்குள் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

    சாய்பாபா ஒருபோதும் தன்னை துதிக்க வேண்டும் என்றோ, மந்திரங்கள் மூலம் ஆராதனைகள் செய்ய வேண்டும் என்றோ, நிறைய படையல்கள் போட்டு வழிபட வேண்டும் என்றோ சொன்னதே கிடையாது. அவர் எதிர்பார்ப்பது எல்லாம் பிறருக்கு தொண்டு செய்யுங்கள், அன்பாக இருங்கள் என்பதுதான்.

    சாய்பாபா நாமத்தை எந்த அளவுக்கு நம்பிக்கையோடு உச்சரிக்கிறோமோ அதே அளவுக்கு அவரது போதனைகளை ஏற்று தன்னலமற்ற வாழ்க்கையை இன்று முதல் தொடங்கி நடத்தி பாருங்கள். இன்று (வியாழக்கிழமை) பாபாவின் ஜெயந்தி தினமாகும். இன்று முதல் பாபா தத்துவத்தை கடைபிடிக்க தொடங்கினால் இன்று முதல் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

    Next Story
    ×