என் மலர்

  வழிபாடு

  ஆடி அமாவாசை: சதுரகிரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வயதானவர்கள் டோலி உதவியுடன் மலைக்கு சென்று வந்தனர்.
  • பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டது.

  விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். சித்தர்களின் பூமியாக கருதப்படும் இங்கு சுயம்புவாக எழுந்தருளியுள்ள சிவனை வழிபட்டால் புண்ணியம் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.

  மலை அடிவாரத்தில் இருந்து 5.5 கி.மீ. தூரத்தில் மேலே அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பகதர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சதுரகிரியிலும் வருடந்தோறும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறும்.

  இந்நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது உண்டு. இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த 25-ந்தேதி முதல் பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டதால் முதல் நாளில் இருந்தே கணிசமான அளவில் பக்தர்கள் சதுரகிரிக்கு வரத்தொடங்கினர்.

  ஆடி மாத பிரதோஷமான 26-ந்தேதி 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரியில் சாமி தரிசனம் செய்தனர். இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சதுரகிரிக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர். கார், வேன், பஸ்களில் வந்த பொதுமக்கள் மலை அடிவாரத்தில் உள்ள தோப்புகளில் தங்கினர்.

  நேற்று அதிகாலை 5 மணி முதலே பக்தர்களின் எண்ணிக்ககை அதிகரித்ததால் மலையேற அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று பிற்பகல் முதல் சதுரிகிரியில் அவ்வப்போது மழை பெய்ய தொடங்கியது. மாலை முதல் மிதமான மழை பெய்துகொண்டே இருந்ததால் மலைப்பாதையில் உள்ள மாங்கனி ஓடை, பிலாவடி கருப்பசாமி கோவில் முன்பு உள்ள ஓடை, சங்கிலிப்பாறை, வழுக்குப்பாறை ஆகிய பகுதிகளில் ஓடைகளில் கணிசமான நீர்வரத்து அதிகரித்தது.

  இதன் காரணமாக மலை மேல் இருந்த பக்தர்கள் கீழே இறங்கவும், அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. நடு வழியில் சிக்கியிருந்த பக்தர்கள் மழைக்கு ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் தவித்தனர். அவர்களை வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பாக அடிவாரத்திற்கு அழைத்துச் சென்றனர்.

  திடீர் மழையால் சதுரகிரிக்கு செல்ல தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டதால் அடிவாரத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

  நள்ளிரவு நேரத்தில் மழை நின்று வானிலை மாறியது. இதனைத் தொடர்நது ஆடி அமாவாசையான இன்று அதிகாலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அடிவார கேட் திறக்கப்பட்டதும் பக்தர்கள் சாரை, சாரையாக பக்தி கோஷம் முழங்க மலையேற தொடங்கினர். வயதானவர்கள் டோலி உதவியுடன் மலைக்கு சென்று வந்தனர்.

  இன்று மட்டும் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலையாக காட்சியளித்தது. அடிவாரமான தாணிப்பாறையில் மடங்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆனால் கோவில் பகுதியில் குறைவானவர்களுக்கு மட்டுமே அன்னதானம் கிடைத்தது. மலைப்பாதையில் அடிப்படை வசதிகளும் போதுமானதாக இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

  இன்று மாலை 3 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இடைப்பட்ட நேரத்தில் மழை பெய்தால் அனுமதி வழங்கப்படாது என வனத்துறை தெரிவித்துள்ளது. பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருவதால் சதுரகிரியே திருவிழா கோலம் பூண்டுள்ளது.

  முன்னதாக ஆடி அமாவாசையான இன்று சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

  கடைசி நாளான நாளை மறுநாள் வரை பக்தர்கள் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடி மாவாசையை முன்னிட்டு விருதுநகர், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர், பேரிடர் மீட்பு குழுவினர் மலைப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

  Next Story
  ×