search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    8 ஆண்டுகளுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் சேதுமாதவ தீர்த்த தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி
    X

    ராமேசுவரம் கோவிலில் உள்ள சேது மாதவ தீர்த்த தெப்பக்குளத்தை படத்தில் காணலாம்.

    8 ஆண்டுகளுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் சேதுமாதவ தீர்த்த தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி

    • ஒவ்வொரு தீர்த்த கிணற்றில் நீராடினால் ஒவ்வொரு விதமான தோஷங்கள் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    • 8 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் இந்த தீர்த்தம் தூர்வாரப்படுகிறது.

    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலில் மிக முக்கியமானது என்றால் தீர்த்த கிணறுகள்தான். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வரக்கூடிய பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு, கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடிய பின்னர்தான் சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் உள்ள ஒவ்வொரு தீர்த்த கிணற்றில் நீராடினால் ஒவ்வொரு விதமான தோஷங்கள் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் 22 தீர்த்த கிணறுகளில் 6-வது தீர்த்தமாக உள்ள சேதுமாதவ தீர்த்த தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. அதற்காக தெப்பக்குளத்தில் தண்ணீருக்குள் ராட்சத மோட்டார் வைத்து குழாய் வழியாக கடலில் கலக்கும் வகையில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, கோவிலின் சேது மாதவ தீர்த்த தெப்பக்குளத்தில் தாமரை செடிகள் அதிகம் வளர்ந்துள்ளதாலும், சகதிகள் அதிகம் உள்ளதாலும் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் இந்த தீர்த்தம் தூர்வாரப்படுகிறது என்றார்.

    இது குறித்து பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் கூறும்போது, பொதுவாக கோவிலில் உள்ள தெப்பக்குளமாக இருந்தாலும் கண்மாய், ஊருணிகளாக இருந்தாலும் மழை சீசன் தொடங்குவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் தூர்வாரப்படும். அப்படி தூர்வாரும் பட்சத்தில் மழை சீசனில் பெய்யும் தண்ணீரால் அந்த தெப்பக்குளம், ஊருணி, கண்மாயில் தண்ணீர் வரத்து இன்னும் அதிகமாக இருக்கும்.

    கடந்த 2 மாதத்திற்கு முன்பு பருவமழை சீசனில் பெய்த மழையால் ராமேசுவரம் கோவிலில் உள்ள சேது மாதவ தீர்த்த தெப்பக்குளத்தில் ஓரளவு தண்ணீருடன் காட்சி அளிக்கிறது. தற்போது இந்த சேது மாதவ தீர்த்த தெப்பக்குளத்தில் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றி தூர்வாரும் பணி நடக்கிறது. தூர்வாரும் பணி சிறப்பானதாக இருந்தாலும் அது செய்வதற்கான நேரம் இது கிடையாது.

    ஆகவே சரியான திட்டமிடல் இல்லாமல் இதுபோன்று பணிகள் நடைபெறுவதை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

    Next Story
    ×