search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுமா?
    X

    புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுமா?

    • கோவில் உள்புறத்தில் வெல்லக்குளம் உள்ளது.
    • கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள், குளத்தில் புனிதநீராடிவிட்டு செல்வர்.

    தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றான புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தஞ்சை-நாகை சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தஞ்சையை ஆண்ட சோழ பேரரசர்கள் தஞ்சையை சுற்றி 8 திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கிழக்கு புறத்தில் அமைய பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன்.

    இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது என்பது தனிச்சிறப்பு. இதனால் கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. ஆகம விதிப்படி நாள்தோறும் 4 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மூலவராக விளங்கும் புற்று வடிவில் உள்ள அம்பாளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும்.

    அம்பாளுக்கு ஆண்டுதோறும் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் முக்கிய திருவிழா நடைபெறும். ஆடி மாதம் முத்துப்பல்லக்கு, பூச்சொரிதல், திருவிளக்கு பூஜைகள் ஆகியவையும், ஆவணி மாதம் ஆண்டு திருவிழாவும், கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும், புரட்டாசி மாதம் தெப்ப உற்சவமும், நவராத்திரி விழாவும், மார்கழியில் லட்சத் திருவிளக்குவிழாவும், மாசி முதல் சித்திரை மாதம் வரை பால்குட விழாவும் நடைபெறும்.

    கோவில் உள்புறத்தில் வெல்லக்குளம் உள்ளது. உடம்பில் கட்டி, பரு ஏற்படுபவர்கள் அம்பாளை வேண்டிக் கொண்டு வெல்லம் வாங்கி வந்து செல்லக்குளத்தில் போடுவர். வெல்லம் தண்ணீரில் கரைவது போல முகப்பரு, கட்டிகளும் கரைந்துவிடும் என்பது நம்பிக்கை. அதேபோல் கோவிலுக்கு வெளியே தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். மேலும் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள், குளத்தில் புனிதநீராடிவிட்டு செல்வர். அப்படி இல்லையென்றால் தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை தலையில் தெளித்து கொண்டு செல்வார்கள்.

    இந்த கோவிலுக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமை மட்டுமின்றி ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது ஆடி மாதம் தொடங்கிவிட்டது. ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி பக்தர்கள் அதிகஅளவில் கோவிலுக்கு வருவார்கள். அப்படி வருபவர்கள் தெப்பக்குளத்தில் புனித நீராடவும், தண்ணீரை தலையில் தெளித்து கொள்ளவும் ஆசைப்படுவார்கள்.ஆனால் தற்போது தெப்பக்குளம் தண்ணீர் இன்றி காட்சி அளிக்கிறது. கோவில்களில் 80 சதவீதம் அளவுக்கு தூர்வாரும் பணி நிறைவடைந்து இருக்கிறது. மீதமுள்ள பணிகளையும் விரைவாக முடித்து, தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.

    Next Story
    ×