search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனி சண்முகநதியில் ஆரத்தி திருவிழா
    X

    சண்முகநதிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டபோது எடுத்த படம்.

    பழனி சண்முகநதியில் ஆரத்தி திருவிழா

    • சண்முகநதி கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்.
    • கங்கை அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    பழனி சண்முகநதியில் ஆடிப்பெருக்கைெயாட்டி ஆரத்தி திருவிழா நேற்று நடந்தது. இதற்கு மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, சரவண பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், சாய் கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் சுப்புராஜ், ஆர்.வி.எஸ். மகால் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பின்னர் 7 மணி அளவில் சண்முகநதி கரையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கங்கை அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோ பூஜை, மாங்கல்ய பூஜை நடைபெற்றது. முன்னதாக மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    இதையடுத்து மேள, தாளங்கள் முழங்க சண்முகநதிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா... என்று சரணகோஷம் எழுப்பினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி மாநில செயலாளர் ஜெகன், மாரியம்மன் கோவில் காணியாளர் பண்ணாடி ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

    விழாவையொட்டி நேற்று சண்முகநதி கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து பழம், வெல்லம் கலந்த அரிசி, பொங்கல் ஆகியவற்றை படைத்து முன்னோர்களை வழிபட்டனர். மேலும் பெண்கள் பலர் மஞ்சள் கயிற்றை அணிந்து கொண்டு, தங்கள் மாங்கல்யம் நிலைக்க வேண்டி பூஜை செய்தனர். பெரியநாயகி அம்மன் கோவில்

    இதேபோல் பழனி பெரியாவுடையார் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி நேற்று கன்னிமார் பூஜை நடந்தது. முன்னதாக காலை 9 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் காலசந்தி பூஜைக்குப்பின் விநாயகர், அஸ்திரதேவர், சண்டிகேஸ்வரர், சந்திரசேகர், ஆனந்தவல்லி அம்மையார் தனி சப்பரங்களில் எழுந்தருளி பெரியாவுடையார் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அங்கு நடராஜர் மண்டபத்தில் விநாயகர்பூஜை, புண்ணியாகவாஜனம், கலசபூஜை, பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் பெரியாவுடையாருக்கும், அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் 16 வகை அபிஷேகம், சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர் சண்முகநதி ஆற்றங்கரையில், மண்ணால் 7 கன்னிமார் உருவம் பிடித்து, அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்மாலை அணிவித்து, மாவிளக்கு வைத்து உலகநலன் வேண்டி வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பின்னர் சந்திரசேகர், ஆனந்தவல்லி அம்மையார், விநாயகர், சண்டிகேஸ்வரர் அஸ்திரதேவருடன் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு திரும்பி செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், கண்காணிப்பாளர் அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜை முறைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணி மற்றும் குருக்கள் செய்தனர்.

    திண்டுக்கல் கோட்டை குளத்திற்கு மாலை 5 மணியளவில் ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் வந்தனர். அவ்வாறு வந்தவர்கள் அங்கு, வாழை இலையில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதனுடன் தேங்காய், பழம், பூ, காப்பரிசி, காதோலை கருகமணி, மஞ்சள் கயிறு வைத்து, எலுமிச்சம்பழத்தில் விளக்கு ஏற்றி காவிரி தாயை நினைத்து சூடம் ஏற்றி வழிபட்டனர். அதன்பிறகு பெண்கள் மஞ்சள் கயிற்றை கழுத்திலும், ஆண்கள் கைகளிலும் கட்டிக் கொண்டனர். அதைத்தொடர்ந்து வாழை இலையில் எலுமிச்சம்பழத்தால் செய்யப்பட்ட விளக்கை வைத்தனர். பின்னர் அவற்றை கோட்டை குளத்தில் உள்ள தண்ணீரில் மிதக்க விட்டனர்.

    Next Story
    ×