search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்கு சென்ற முன்னுதித்த நங்கை அம்மன் சிலை சுசீந்திரம் வந்தது
    X

    முன்னுதித்த நங்கை அம்மன் சிலை சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலை வந்தடைந்தபோது எடுத்தபடம்.

    திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்கு சென்ற முன்னுதித்த நங்கை அம்மன் சிலை சுசீந்திரம் வந்தது

    • பக்தர்கள் தங்கள் வீடுகளில் முன்பு திருக்கன் சாத்தி மலர் தூவி அம்மனை வரவேற்றனர்.
    • அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரத்தில் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர், மன்னர்கள் தங்களது தலைநகரை திருவனந்தபுரத்திற்கு மாற்றினர். அதைதொடர்ந்து நவராத்திரி விழாவும் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், பத்மநாபபுரம் தேவார கட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சாமி சிலைகள் ஆண்டுதோறும் ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி கடந்த 5-ந் தேதி வரை நடந்தது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து சாமி சிலைகள் கடந்த 23-ந்தேதி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு சென்றன. நவராத்திரி விழா முடிந்த பின்பு கடந்த 7-ந் தேதி சாமி சிலைகள் மீண்டும் ஊர்வலமாக குமரி மாவட்டத்திற்கு புறப்பட்டன.

    இந்த சாமிசிலைகள் நேற்று முன்தினம் மாலையில் பத்மநாபபுரம் அரண்மனையை வந்து அடைந்தன. அரண்மனை வாசலில் சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சரஸ்வதி அம்மன் சிலை தேவாரக்கட்டு கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டது. வேளிமலை முருகன் சிலை குமாரகோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    தொடர்ந்து முன்னுதித்த நங்கை அம்மன் சிலை சுசீந்திரத்திற்கு புறப்பட்டது. நேற்று காலை 8.30 மணிக்கு அம்மன் சிலை மேளதாளத்துடன் சுசீந்திரம் வந்தடைந்தது. அம்மன் சிலைக்கு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் நுழைவு வாயில் முன்பு தமிழக மற்றும் கேரள போலீசார் அணிவகுத்து நின்று துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். அதன் பின்பு அம்மன் சிலை மேளதாளத்துடன் நான்கு ரத வீதிகளில் உலா வந்தது.

    அப்போது பக்தர்கள் தங்கள் வீடுகளில் முன்பு திருக்கன் சாத்தி மலர் தூவி அம்மனை வரவேற்றனர். பின்னர், அம்மன் கோவில் முன்பு வரும்போது தமிழக மற்றும் கேரள போலீசார் அணிவகுத்து நின்று துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்தநிகழ்ச்சியில் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, பா.ஜனதா விருந்தோம்பல் பிரிவு தலைவர் ரவீந்திரன், கோவில் ஸ்ரீகாரியம் ஹரி பத்மநாபன், நவராத்திரி குழு தலைவர் வீரபத்திர பிள்ளை மற்றும் ஊர் தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகமும், கேரள அறநிலையத் துறையினரும், நவராத்திரி குழு அமைப்பினரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.

    Next Story
    ×