search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா 24-ந்தேதி தொடங்குகிறது
    X

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா 24-ந்தேதி தொடங்குகிறது

    • இந்த திருவிழா நவம்பர் 24-ந்தேதி தொடங்கி டிசம்பர் 3-ந்தேதி நிறைவடையும்.
    • டிசம்பர் 1-ந்தேதி தேர்ப்பவனி நடக்கிறது.

    கத்தோலிக்க திருச்சபையின் மறை மாவட்டங்களில் ஒன்றான கோட்டார் மறைமாவட்டத்தின் தலைமைப் பேராலயமாக நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் 3-ந் தேதி நிறைவடையும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.

    இதுகுறித்து கோட்டார் புனித சவேரியார் பேராலய பங்குத்தந்தை ஸ்டான்லி சகாயசீலன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கி.பி.1542 முதல் 1552-ம் ஆண்டு வரையுள்ள காலகட்டத்தில் சவேரியார் கோட்டாரில் தங்கியிருந்து சாதி, சமய பேதமின்றி நற்செய்தி பணியாற்றினார். இங்கு அவரே புனித ஆரோபண மாதா ஆலயம் ஒன்றை எழுப்பி, தனது புனிதமிக்க கரங்களால் திருப்பலி நிறைவேற்றி வந்தார்.

    பல்வேறு வரலாற்று சிறப்புகளுடன் விளங்கும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அனைத்து மக்களும் நாடி வரும் கோடி அற்புதங்கள் விளையும் புண்ணிய பூமியாக காட்சி அளிக்கிறது.

    கோட்டார் சவேரியார் பேராலயத்துக்கு இன்னுமொரு சிறப்பும் உள்ளது. அதாவது குமரி மண்ணில் மறைசாட்சியாக மரித்து, இந்தியாவின் முதல் இல்லற புனிதராக கடந்த மே மாதம் 15-ந் தேதி புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்ட தேவசகாயத்தின் உடல் பாகங்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையும் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளது சிறப்பாகும்.

    இந்தநிலையில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைக்கிறார். முதல் நாள் திருவிழாவை காவல்துறையினர் சிறப்பிக்கிறார்கள். ஒவ்வொரு நாள் திருவிழாவும் நற்செய்தி வாசக கருப்பொருளில் நடைபெறுகிறது. 4-வது நாள் திருவிழாவான 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, 11 மணிக்கு இறை இரக்க தூதுவர் குழுவினரின் குணமளிக்கும் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடைபெற உள்ளது. முதல் திருவிருந்து திருப்பலியில் ஏராளமான சிறுவர்- சிறுமிகள் முதல் திருவிருந்து பெறுகிறார்கள்.

    8-வது நாள் திருவிழாவான வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. 9-ம் நாள் திருவிழாவான 2-ந் தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். அன்று இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. 10-ம் நாள் திருவிழாவான 3-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பெருவிழாத் திருப்பலியை ஆயர் நசரேன் சூசை நிறைவேற்றுகிறார். காலை 8 மணிக்கு மலையாள திருப்பலியை திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் நிறைவேற்றுகிறார். 11 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு தேர்ப்பவனி ஆலய வளாகத்துக்குள் நடந்தது. கொரோனா அபாயம் நீங்கியதின் காரணமாக இந்த ஆண்டு வழக்கமாக தேர்பவனி செல்லும் இடங்களில் தேர்ப்பவனி நடைபெறும். வருகிற 8-ந் தேதி மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறும். திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் திருப்பலி நடைபெறும். திருவிழாவை தெற்கு மற்றும் வடக்கு ஊர் இறைமக்கள், பக்த சபைகள், சங்கங்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிறப்பிக்கிறார்கள்.

    திருவிழா தொடங்குவதற்கான முறையான பறை அறிவிப்பு வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) செய்யப்படுகிறது. கொரோனா பரவல் ஓய்ந்த பிறகு முதன்முதலாக இந்த ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற இருப்பதாலும், புனித தேவசகாயம், புனிதராக அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக திருவிழா நடைபெற இருப்பதாலும் கேரள மாநில பக்தர்கள், குமரி மாவட்ட பக்தர்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பெருமளவில் பங்கேற்க இருக்கிறார்கள். திருவிழாவின் கடைசி 3 நாட்களில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளை மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொள்ள இருக்கிறோம்.

    கடைசி நாள் திருவிழாவான 3-ந் தேதி அன்று வழக்கம்போல் உள்ளூர் விடுமுறை அளிக்க கலெக்டரை சந்தித்து கேட்டுள்ளோம். அவரும் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். விழாவுக்கு பல்வேறு துறைகளின் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துள்ளோம். இதற்கான ஏற்பாடுகளை கோட்டார் வட்டார முதன்மை பணியாளர் ஆனந்த், பங்குத்தந்தையாகிய நான் மற்றும் இணை பங்குத்தந்தை ஆன்றோ ஜெராபின், அருட் சகோதரிகள், பேராலய அருட்பணி பேரவை மற்றும் இறைமக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது இணை பங்குத்தந்தை ஆன்றோ ஜெராபின், பங்குப்பேரவை துணைத்தலைவர் ஜேசுராஜா, செயலாளர் ராஜன், துணைச்செயலாளர் ராஜன் ஆராச்சி, பொருளாளர் ஜார்ஜ் பிரகாஷ் ராபின் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×