search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குலதெய்வத்திற்காக வெள்ளை ஆடை அணியும் கிராமம்

    • விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ளது இலந்தைகுளம் என்ற கிராமம்.
    • இந்த குலதெய்வத்தை வழிபடும் மக்கள் வெள்ளை நிற ஆடைகளையே அணிகிறார்கள்.

    முன்னோர் ஏற்படுத்திய பல பழக்கவழக்கங்களை பல நூறு ஆண்டுகளாக தொன்றுதொட்டு கடைப்பிடித்து வந்துள்ளோம். ஆனால், அவற்றில் பலவற்றை காலப்போக்கில் பலரும் மறந்துவிடுகிறோம். இருப்பினும் ஆங்காங்கே பழமையான பழக்க வழக்கங்களை மறக்காமல் பின்பற்றுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். அந்த வகையில் சிறுதெய்வ வாக்கினை பின்பற்றும் வகையில் ஒரு கிராமத்தில் உள்ள மக்கள், பல நூறு ஆண்டுகளாக ஒரு பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். அதுபற்றிய சுவாரசியமான தகவலை இங்கே பார்க்கலாம்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ளது, இலந்தைகுளம் என்ற கிராமம். இங்கு வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தினர், பல தலைமுறைகளாக வெள்ளை உடைகளை மட்டுமே உடுத்தி வருகின்றனர். ஒரு காலத்தில் கணவனை இழந்த பெண்கள்தான் வெள்ளை ஆடையை அணிவார்கள் என்ற நிலை இருந்தது. அந்த நிலை இப்போது வெகுவாக மாறியிருக்கிறது.

    ஆனால் இலந்தைகுளம் கிராமத்தில் பெண்கள் மட்டுமின்றி, ஆண்கள் மற்றும் குழந்தைகளும் கூட தங்களின் வாழ்நாள் முழுவதும் வெள்ளை நிற ஆடைகளையே அணிந்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதுபற்றி அந்த கிராமத்தைச் சேர்ந்த புஷ்பலதா என்ற பெண் கூறும்போது, "பல தலை முறைகளுக்கு முன்பு பொம்மியம்மாள் என்ற பெண், தெய்வீகத் தன்மையுடன் வாழ்ந்துள்ளார். அவரை எங்களின் மூதாதையர்களும் அவர்களைத் தொடர்ந்து நாங்களும் தெய்வமாக வணங்கி வருகிறோம்.

    அந்த பொம்மியம்மாள், 'என்னை நினைத்து வெள்ளை உடை உடுத்தி தொடர்ந்து வணங்குபவர்களை, சகல வசதிகளையும், நன்மைகளையும் தந்து காத்தருள்வேன்' என்று கூறியுள்ளார். அவரது வாக்கின்படி, பல தலைமுறைகளாக நாங்கள் வெள்ளை உடைகளை உடுத்தி, அவரை வணங்கி வருகிறோம்" என்றார்.

    பொம்மியம்மாளுக்கு, சேடபட்டி சின்னக்கட்டளை பகுதியில் பீடம் அமைக்கப்பட்டு உள்ளது. அழகர் மலை அடிவாரத்தில் வீற்றிருக்கும் கள்ளழகரின் தங்கைதான் பொம்மியம்மாள் என்று சொல்கிறார்கள். ஆண்டுதோறும் சித்திரை மாத பவுர்ணமி அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழாவின்போது, இலந்தைகுளம் கிராமத்தில் உள்ளவர்கள், பொம்மியம்மாளை சின்னக்கட்டளையில் உள்ள அவரது பீடத்தில் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    இலந்தைகுளத்தில் இருப்பவர்கள் பொம்மியம்மாளை நினைத்து வெள்ளை நிற ஆடை அணிவதைப் போல, பல்வேறு கிராமங்களில் இருந்தபடி அந்த குலதெய்வத்தை வழிபடும் மக்களும் கூட அங்கு வெள்ளை நிற ஆடைகளையே அணிகிறார்கள். பொம்மியம்மாளை குலதெய்வமாக வழிபடுபவர்கள், தங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு அரைஞாண் கயிறைக் கூட, வெள்ளை துணியில்தான் கட்டுகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் துணிகள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் மட்டுமே இருக்கின்றன.

    பள்ளிக்கூடம் செல்வதற்கு சீருடை அவசியம் என்பதால் அந்த நேரத்தில் மட்டும், பள்ளி செல்லும் பிள்ளைகள் சீருடை அணிகிறார்கள். பள்ளி முடிந்து வந்ததும், அவர்களும் வெள்ளை நிற ஆடைக்கு மாறிவிடுகிறார்கள். பொம்மியம்மாளை வணங்கும் பெண்கள், பூ, பொட்டு, நகை அணிகிறார்கள். ஆனால் வீட்டில் இருந்தாலும், வேலைக்குச் சென்றாலும், விசேஷ நிகழ்வுகளுக்குச் சென்றாலும் வெள்ளை நிற ஆடைதான் அவர்கள் மகிழ்வுடன் அணியும் ஆடையாக இருக்கிறது.

    குலதெய்வம் என்பது ஆண்கள் வழியில் வரும் வழிபாடு என்பதால், இங்கிருந்து திருமணமாகி வேறு வீட்டிற்குச் செல்லும் பெண்கள், புகுந்த வீட்டின் பழக்க வழக்கப்படி இருக்கலாம். அவர்களுக்கு இந்த வெள்ளை நிற ஆடை கட்டுப்பாடு கிடையாது. அதே நேரம், வேறு ஒரு இடத்தில் இருந்து திருமணாகி பொம்மியம்மாளை குலதெய்வமாக ஏற்று வரும் பெண்கள், வெள்ளை நிற ஆடையை அணிந்துதான் ஆக வேண்டும் என்பது அவர்களது குல வழக்கமாக இருக்கிறது.

    Next Story
    ×