search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா:  திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    • அம்மன் விசேஷ அலங்காரத்துடன் காட்சி அளித்தார்.
    • ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஒன்றாகும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய் அன்று கொடை விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான கொடைவிழாவுக்கு கடந்த மாதம் 27-ந் தேதி கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது. தினமும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. விழாவை முன்னிட்டு 2 நாட்களுக்கு முன்பே பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து குவிந்துள்ளனர். அவர்கள் கோவில் வளாகத்தில் ஓலையால் செய்யப்பட்ட குடிலில் தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் கொடைவிழாவை முன்னிட்டு அம்மன் விசேஷ அலங்காரத்துடன் காட்சி அளித்தார். அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    பகல் ஒரு மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜையும் நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் சாற்றி வழிபட்டனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு பட்டிமன்றம், மாலை் 6 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், மரத்திலான கை, கால்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து சிறப்பு வாணவேடிக்கை நடந்தது.

    கோவிலில் காலை முதல் இரவு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தேங்காய், பழம் வைத்து அம்மனை வழிபட்டனர்.

    நள்ளிரவில் நாராயணர், பாமா ருக்மணியுடன் குரங்கணி வீதிகளில் உலா வரும் காட்சி நடைபெற்றது. கோவை வாழ் குரங்கணி இளைஞர்கள், நண்பர்கள் பத்தாவது ஆண்டாக அன்னதானம் வழங்கினர்.

    Next Story
    ×