search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பக்தர்களை பரவசப்படுத்தும் பகவதி அம்மனின் பரிவேட்டை
    X

    பக்தர்களை பரவசப்படுத்தும் பகவதி அம்மனின் பரிவேட்டை

    • தேவி, கன்னியாக இருக்கிறாள். அதற்கும் காரணம் உண்டு.
    • இக்கோவில் தேவியின் சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    நீலத்திரை கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவஞ் செய் குமரி என்று முண்டாசுக் கவிஞன் பாரதி போற்றி, புகழ்ந்து பாடிய பெருமைக்குரிய கோவிலாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் விளங்குகிறது. வங்காள விரிகுடா, அரபிக் கடல், இந்திய பெருங்கடல் ஆகிய முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது இந்த கோவில். இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள இக்கோவில் தேவியின் சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் தேவி, கன்னியாக இருக்கிறாள். அதற்கும் காரணம் உண்டு.

    பாணாசுரனின் அட்டகாசம்

    கடுமையான தவங்கள் மூலமாக அசுரர்கள் கூட கடவுளிடம் இருந்து பல்வேறு வரங்களை பெற்றுள்ளனர் என்று பழங்கால புராணங்கள் கூறுகின்றன. அந்த வரிசையில் பாணாசுரன் என்ற அரக்கனும், பிரம்மதேவனை நோக்கி கடும் தவம் புரிந்து தன்னை யாராலும் அழிக்க முடியாத வரத்தையும், ஒரு கன்னிப்பெண்ணைத்தவிர தனக்கு வேறு எவராலும் இறப்பு ஏற்படக்கூடாது என்ற வரத்தினையும் பெற்றதாக புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மென்மையான உடல் வாகுவையும், மனதையும் கொண்ட ஒரு கன்னிப் பெண்ணால் தனக்கு எப்படி மரணம் நிகழ முடியும்? என்ற எண்ணத்தில்தான் பாணாசுரன் இந்த வரத்தை வாங்கியதாக சொல்லப்படுகிறது.

    வரத்தைப் பெற்ற பாணாசுரனின் அட்டகாசம் தாங்க முடியாத அளவுக்கு போயிற்று. முனிவர்களையும், தேவர்களையும் அவன் கொடுமைப்படுத்த தொடங்கினான். இதனால் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கியது. உலகில் தீமையும், பாவமும் பெருகின. அறியாமையும், அநீதியும் ஆட்சி புரிந்தன. மூவுலகில் உள்ள தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். இதனால் முனிவர்களும், தேவர்களும் விஷ்ணுவிடம் தஞ்சம் அடைந்தனர். அப்போது விஷ்ணு, பாணாசுரன் பெற்ற வரத்தையும், ஒரு கன்னிப் பெண்ணால் தான் அவனை அழிக்க முடியும் என்ற ரகசியத்தையும் அவர்களுக்கு கூறினார்.

    திருவிளையாடல்

    விஷ்ணுவின் அருகில் அமர்ந்திருந்த சிவபெருமான் இதற்கு தீர்வு வழங்கினார். பாணாசுரனை, பராசக்தியால் மட்டுமே கொல்ல முடியும் என்றார். இதனால் தேவர்களும், முனிவர்களும் பராசக்தியை வேண்டி பெரும் வேள்வியை மேற்கொண்டனர். வேள்வி முடிவில் சக்தி தேவி வெளிப்பட்டு பாணாசுரன் தலைமையில் நிகழும் தீய செயல்களை ஒழித்து நன்மையும், அறமும் உலகில் நிலைபெறச் செய்வதாக உறுதி கொடுத்தாள்.

    தேவர்களையும், முனிவர்களையும் அசுரர்களிடம் இருந்து காப்பாற்ற சக்திதேவி கன்னிப்பெண்ணாக தென்பகுதியான குமரியில் அவதரித்தாள். அவள் சிவபெருமானிடம் பக்தி கொண்டு, அவரை மணம் முடிப்பதற்கு கடும் தவத்தை மேற்கொண்டாள். அந்த சமயத்தில் சிவபெருமானும் சுசீந்திரம் என்னும் ஊரில் தாணு என்ற பெயர் கொண்டு வாழ்ந்து வந்தார். பூலோகத்தில் கன்னிப் பெண்ணாக அவதரித்த சக்தி தேவியின் அழகை பார்த்து அவரை மணம் முடித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார் சிவபெருமான். இதனை அறிந்த தேவர்களுக்கு பயம் வந்து விட்டது. சக்தி தேவிக்கு திருமணம் ஆகிவிட்டால் அந்த அசுரனை எப்படி அழிப்பது? என்பதுதான் அவர்களுடைய பயம். ஆனால் முக்காலத்தையும் உணர்ந்த நாரதருக்கு மட்டும் இது அந்த சிவபெருமானின் திருவிளையாடல்தான் என்பது தெரிந்திருந்தது.

    திருமணம் நின்றது

    சக்தி தேவிக்கும், சிவபெருமானுக்கும் நடத்த வேண்டிய திருமண பேச்சு சபைக்கு வந்தது. ஆனால் இந்த திருமணம் எப்படியாவது நிற்க வேண்டும் என்பது தான் தேவர்களின் எண்ணமாகவும், நாரதரின் எண்ணமாகவும் இருந்தது. நாரதரும் திருமணத்தை நிறுத்த கலகத்தை தொடங்கினார். நாரதரின் கலகம் நன்மையில் தான் போய்முடியும் என்பார்கள். நாரதர் சிவபெருமானை பார்த்து தேவர்களது சார்பில் ஒரு கோரிக்கையை வைத்தார். சூரிய உதயத்துக்கு ஒரு நாழிகைக்கு முன்னதாகவே மாப்பிள்ளையான சிவபெருமான் திருமணம் நடைபெறும் இடத்துக்கு வந்துவிட வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை. தேவியிடமும் இந்த கோரிக்கை குறித்து கூறப்பட்டது. மாப்பிள்ளை சூரிய உதயத்துக்கு முன்பு வரவில்லை என்றால் இந்த திருமணம் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

    அவ்வாறே திருமணம் நடைபெறும் நாள் வந்தது. அன்று இரவு சிவபெருமான், குறித்த நல்ல நேரம் தவறிவிடக்கூடாது என எண்ணி சுசீந்திரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு இரவில் புறப்பட்டார். போகும் வழியெங்கும் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனால் வழுக்கம்பாறை என்ற இடத்தை அடைந்தபோது நாரதர் ஒரு சேவல் உருவம் கொண்டு கூவினார். அதிகாலையில் கூவக்கூடிய சேவல் கூவியதால் பொழுது புலர்ந்துவிட்டது என தவறாக புரிந்துகொண்ட சிவபெருமான் சுசீந்திரத்துக்கு வருத்தத்தோடு திரும்பினார்.

    சிவபெருமான் மணம் முடிக்க வருவதாகக் கூறிவிட்டு, வராமல் போனது குமரி முனையில் திருமணத்துக்காக காத்திருந்த தேவிக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது.

    வதம்

    இதனால் திருமணத்துக்கு என்று சமைத்து வைக்கப்பட்டு இருந்த உணவு பதார்த்தங்களையும், அலங்காரத்துக்காக வைக்கப்பட்டு இருந்த பூக்களையும் தேவி கடல் மணல் பரப்பில் வீசினாள். எனவே தான் கன்னியாகுமரியில் இருக்கும் மணல் பரப்பானது வண்ண, வண்ண மணலாக மாறி காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது. கடும் வருத்தத்தில் இருந்த தேவி, அதன் பிறகு என்றும் கன்னியாகவே இருப்பதாக முடிவு செய்து தனது தவத்தை தொடர்ந்தாள். இவ்வாறு தேவி கடும் தவம் இருக்கும்போது ஒருநாள் பாணாசுரன் தேவியின் அழகைப்பற்றி கேள்விப்பட்டு, அவளை நேரில் காண வந்தான். தேவியைக் கண்டதும் தன்னை மணந்து கொள்ளும்படி அவளை வேண்டினான். ஆனால் தேவி அவனை மணம் முடிக்க மறுத்தாள். ஆனால் பாணாசுரன் விடவில்லை. கட்டாயப்படுத்தி தன்னை மணம் முடிக்க சக்திதேவியை வற்புறுத்தினான். மேலும் தனது உடல் வலிமையால் தேவியை கவர்ந்து செல்ல எண்ணி தனது உடைவாளை உருவினான்.

    இத்தகைய தருணத்தை எதிர்நோக்கி இருந்த தேவியும் தனது போர்வாளை வீசினாள். நெடுநாட்கள் இருவரும் கடும் போர் புரிந்தனர். இறுதியில் தனது சக்கராயுதத்தால் பாணாசுரனை வதம் செய்தாள் தேவி. தேவர்கள் அனைவரும் தங்களை காப்பாற்றியதற்காக தேவிக்கு நன்றி செலுத்தினர். தேவியும் அவர்களை வாழ்த்தி அருளினாள். அதன்பின் கோபம் தணிந்த தேவி, சாந்தி அடைந்து அன்று முதல் இன்றுவரை கன்னியாகுமரியில் கன்னிப்பெண்ணாக, பகவதி அம்மனாக அமர்ந்து அந்த சிவபெருமானை நினைத்து மீண்டும் தன் தவத்தை மேற்கொள்ளத் தொடங்கினாள். தவமிருந்தபடியே தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளையும் போக்கி வருகிறாள் என்கிறது தல புராணம்.

    பரிவேட்டை நிகழ்ச்சி

    தேவி, பாணாசுரனை கொன்றழித்ததை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாள் நவராத்திரி விழா இந்த கோவிலில் நடைபெறுகிறது. இதேபோல் இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவின் நட்சத்திர நிகழ்வாக கருதப்படுவது 10-ம் நாள் நடக்கும் பரிவேட்டையாகும். பரிவேட்டை நிகழ்ச்சி வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெறும். காலை 9.15 மணிக்கு பிறகு அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அதன் பிறகு அம்மன் எலுமிச்சை பழ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளிக்குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்காக மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்படுவார். அம்மன் எழுந்தருளி உள்ள வாகனம் கோவிலில் இருந்து வெளியே வந்ததும் வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்துவார்கள். அம்மன் எழுந்தருளியிருக்கும் வாகனத்தின் முன்னால் கோவில் பரம்பரை தர்மகர்த்தாக்கள் கையில் வாள் ஏந்தியபடியும், வில் அம்பு ஏந்தியபடியும் நடந்து செல்வர். ஊர்வலத்துக்கு முன்பு பஜனைக் குழுவினர் பஜனை பாடிச் செல்வார்கள். அதனைத் தொடர்ந்து நெற்றிப்பட்டம் அணிவிக்கப்பட்ட 3 யானைகளின் மீது பக்தர்கள் முத்துக்குடை பிடித்த படியும், பகவதி அம்மன் உருவப்படத்தை தாங்கிய படியும் அணிவகுத்துச் செல்வார்கள்.

    ஆராட்டு

    அம்மன் பரிவேட்டைக்கு எழுந்தருளிச் செல்லும் வழிநெடுகிலும் பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு வண்ணக்கோலமிட்டு திருவிளக்கு ஏற்றி தோரணங்கள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைத்து வரவேற்பார்கள். மேலும் திருக்கண் சாற்றியும் வழிபடுவார்கள். கோவிலில் இருந்து புறப்படும் பரிவேட்டை ஊர்வலம் மாலையில் மகாதானபுரம் வேட்டை மண்டபத்தை சென்றடையும். அங்கு கோவில் மேல்சாந்தி போற்றிகள் பூஜைகள் நடத்துவார்கள். அதன் பின்னர் அம்பு பாய்ந்த இளநீருடன் பக்தர் ஒருவர் அம்மன் வாகனத்தை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். பாணாசுரன் என்ற அரக்கனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சியாக இது கருதப்படுகிறது.

    பின்னர் அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் இருந்து வெள்ளி பல்லக்கு வாகனத்தில் கோவில் நோக்கி புறப்படுவார். தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நடைபெறும். அமாவாசை, தை அமாவாசை, வைகாசி விசாகத் திருவிழா, கார்த்திகை தீபத்திருவிழா ஆகிய நாட்களில் மட்டும் திறக்கப்படும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசல் நவராத்திரி திருவிழாவின் கடைசி திருவிழாவான பரிவேட்டை திருவிழா அன்றும் திறக்கப்படும். இந்த முக்கிய நாட்களில் 1 மணி நேரம் மட்டுமே கிழக்கு வாசல் திறக்கப்படுவது வழக்கம். மற்ற நாட்களில் இந்த கிழக்கு வாசல் மூடியே இருக்கும். பரிவேட்டை முடிந்து திரும்பிய அம்மன் கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் எழுந்தருள்வார்.

    முக்கிய திருவிழாக்கள்

    ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் 10 நாள் நடைபெறும் நவராத்திரி திருவிழா, வைகாசி மாதத்தில் 10 நாள் நடைபெறும் விசாக திருவிழா மற்றும் தேரோட்டம், தெப்பத் திருவிழா ஆகியவை இந்த கோவிலின் முக்கிய திருவிழாக்கள் ஆகும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். இந்த திருவிழா நாட்களில் காலையிலும், இரவிலும் ஊர் தெருக்கள் வழியாக தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும். 9-வது நாள் தேர்த்திருவிழாவும், 10-வது நாள் தெப்பத்திருவிழாவும் நடைபெறும்.

    கொடிமரக்கயிறு வழங்கும் மீனவர்கள்

    பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவையொட்டி கொடியேற்றத்துக்கு முந்தையநாள் மத நல்லிணக்கத்தை எடுத்துக்கூறும் வகையில் கன்னியாகுமரி கிறிஸ்தவ மீனவர்கள் சார்பில் கொடிமர கயிறு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கப்படும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.

    விவேகானந்தர் வழிபட்ட அம்மன்

    1892-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் தனது யாத்திரையின் போது குமரி முனை வந்து அம்மனை வழிபட்டு விட்டு, கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் அமர்ந்து தியானம் செய்ததாக கூறப்படுகிறது. அவர் தியானம் செய்த பாறையில் அவர் நினைவாக மண்டபமும் கட்டப்பட்டுள்ளது.

    பரசுராமர் குமரி தெய்வ உருவை இந்த இடத்தில் அமைத்து வழிபட்ட தலம். குமரி கடல் முனையில் இருந்தாலும் கோவிலுக்குள் உள்ள கிணற்றில் உப்புக்கரிக்காத நல்ல தண்ணீர் கிடைக்கிறது என்பது அதிசயம். இந்த தண்ணீரைக் கொண்டுதான் கோவிலில் தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது என்கிறார்கள் அதிகாரிகள். விவேகானந்தர் பாறையில் பகவதி அம்மனின் கால்தடம் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×