என் மலர்
வழிபாடு

கன்னியாகுமரியில் நவராத்திரி விழா:முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு
- சிறப்பு வழிபாடுகள் நடத்தி கடலில் அம்மனை ஆராட்டினா்.
- ஆயிரணக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் கடந்த 26-ந்தேதி நவராத்திரி திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் தினமும் அபிஷேகம், விசேஷ பூஜைகள், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.
நவராத்திரி விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் அம்மன் குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்குச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி பகவதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி மாலை 6 மணிக்கு மகாதானபுரத்தில் பரிவேட்டை மண்டபத்தை அடைந்து பாணாசூரனை வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரணக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து பகவதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் இருந்து வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, உற்சவ அம்பாள் சிலையை ஆராட்டு மண்டபத்தில் வைத்து அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி கடலில் அம்மனை ஆராட்டினா்.
அதைதொடர்ந்து வருடத்தில் முக்கியமான ஐந்து விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.