என் மலர்
வழிபாடு

தீராத நோய் தீர்க்கும் சோழவந்தான் `ஜெனகை மாரியம்மன்'
- 48 கிராம மக்களுக்கும் குடும்பக் கடவுளாக உள்ளார்.
- எண்ணற்ற நோய்களை தீர்க்கும் மருத்துவக் கோவிலாகவும், இந்த ஆலயம் திகழ்கிறது.
மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் என்ற இடத்தில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கிறது, ஜெனகை மாரியம்மன் திருக்கோவில். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் இருக்கும் இடத்தை இதற்கு முன் காலத்தில் 'ஜெனகாயம்பதி', 'சதுர்வேதிமங்கலம்', 'சோழாந்தக சதுர்வேதி மங்கலம்', 'ஜெனநாத சதுர்வேதி மங்கலம்' என்று அழைத்ததாக கோவில் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகிறது.
இந்த ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஜெனகை மாரியம்மன், சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 48 கிராம மக்களுக்கும் குடும்பக் கடவுளாக உள்ளார்.
தல வரலாறு
ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவி. இவர் தினமும் கணவரின் பூஜைக்கு கமண்டல நதியில் இருந்து நீர் எடுத்து வருவது வழக்கம். ஒரு நாள் அப்படி நதியில் நீர் எடுத்துக் கொண்டிருந்தபோது, நதி நீரில் தேவலோக கந்தர்வன் ஒருவரின் பிம்மம் விழுந்தது. அந்த பிம்பத்தின் அழகில் மயங்கிய ரேணுகாதேவி, அந்த நிமிடத்தில் மனதால் பதிவிரதை தன்மையை இழந்தார்.
அதோடு அவர் நீர் எடுக்க கொண்டு வந்த மண்குடமும் உடைந்தது. இதை தன் ஞானத்தால் அறிந்த ஜமதக்னி முனிவர், தன் மகன் பரசுராமரை அழைத்து தாயின் தலையை வெட்டும்படி உத்தரவிட்டார். மறு கேள்வி இன்றி பரசுராமரும் தன்னுடைய தாயின் தலையை கொய்தார்.
உடனே ஜமதக்னி முனிவர், "உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்" என்று கேட்டார். அப்போது பரசுராமர், "என் தாயின் உயிரை மீண்டும் தர வேண்டும்" என்று கேட்டார்.
அதன்படி ஜமதக்னி முனிவர், தன்னுடைய கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்து மந்திரம் ஓதி, ரேணுகா தேவியின் மீது தெளித்து அவரை உயிர்ப்பித்தார்.
ஆனால் அந்த உயிர், ஆக்ரோஷம் கொண்டு பெண்ணாக அவரை மாற்றியது. இந்த ஆக்ரோஷத்தைப் அடக்கும் பொருட்டு, இத்தலத்தில் மாரியம்மன் எழுந்தருளியதாக தல வரலாறு கூறுகிறது.
இதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த ஆலயத்தின் கருவறையில் இரண்டு அம்மன்கள் இருப்பதைக் காண முடியும். கருவறையில் அமர்ந்த நிலையில் சாந்தமான ஜெனகை மாரியம்மன் வீற்றிருக்கிறார். அவருக்கு பின்புறம் சந்தனமாரி என்ற பெயரில் நின்ற நிலையில் ஆக்ரோஷமான ரேணுகாதேவி காட்சி தருகிறார்.
இந்த ஊர், ராமாயணத்தில் வரும் ஜனகர் மகளான ஜானகியை போற்றும் வகையில் 'ஜெனகபுரம்' என்றும் முன்பு அழைக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக இங்குள்ள கோவிலில் அமர்ந்த மாரியம்மனுக்கு 'ஜெனகை மாரியம்மன்' எனப் பெயர் சூட்டப்பட்டது. இக்கோவில் தல விருட்சமாக வேப்பமரம் மற்றும் அரச மரம் ஆகிய இரண்டு மரங்கள் உள்ளன.
எண்ணற்ற நோய்களை தீர்க்கும் மருத்துவக் கோவிலாகவும், இந்த ஆலயம் திகழ்கிறது. அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈரத் துணியோடு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டுகிறார்கள். அப்போது அர்ச்சகர் தரும் அம்பாள் தீர்த்தத்தை வாங்கிக் குடிக்க வேண்டும்.
இந்த தீர்த்தமானது, மஞ்சள், வேப்பிலை மற்றும் வேறு சில பொருட்களும் கலந்த மருத்துவ குணமும், அம்பாள் கருணையும் கலந்ததாகும். பெண் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி, இந்த கோவிலில் தொட்டில் கட்டி பூஜை செய்வது வழக்கம்.
வெள்ளிக்கிழமை மட்டும் அம்மன் சந்தன காப்பில் அருள் வழங்குவார். இந்த ஆலயத்தில் நவராத்திரி மற்றும் தீபாவளி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
விஜயதசமி அன்று வைகை ஆற்றில் நடக்கும் அம்பு போடும் திருவிழாவின் முடிவில், ஒவ்வொரு ஆண்டும் மழைத் தூறல் விழுவது அம்பாளின் அருள் மழையே என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
ஆண்டு தோறும் வைகாசி மாதம் 17 நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறும். திருவிழாவின் இறுதி நாளன்று ஜெனகை அம்மன் தேரோட்டம் நடக்கிறது.
வைகாசி திருவிழாவை முன்னிட்டு பொங்கல் படையல், அக்னி சட்டி எடுத்தல், பூக்குழியில் இறங்குதல் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துகிறார்கள்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
மதுரையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில்.






