search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவாடானை ஏகாம்பரேசுவரர் கோவிலில் 108 மூலிகை பொடி அபிஷேகம்
    X

    திருவாடானை ஏகாம்பரேசுவரர் கோவிலில் 108 மூலிகை பொடி அபிஷேகம்

    • குழந்தைப்பேறுவேண்டி கன்னிகா பூஜை நடந்தது.
    • சாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

    திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதும் சுமார் 1,200 ஆண்டு மிகப் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாக விளங்கும் காமாட்சி அம்மன் உடனாய ஏகாம்பரேசுவரர் கோவில் உள்ளது. கோவிலில் எஸ்.பி.பட்டினம், சோழகன் பேட்டை, ரெகுநாத சமுத்திரம் மற்றும் 10 கிராம மண்டக படிதார்கள், மதுரை ஆலவாய் அருட்பணி மன்றம் சார்பில் சுவாமி, அம்மனுக்கு 108 மூலிகை பொடிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதனையொட்டி 100-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் நடராஜர் சுவாமியுடன் திருமுறை வேத பாராயணங்கள் முழங்க வீதி உலா சென்று வந்தனர். ருத்ர ஜெப வேத பாராயணங்கள் முழங்க சிறப்பு யாக வேள்விகள் நடை பெற்றது. தொடர்ந்து சுவாமி அம்மனுக்கு 108 மூலிகை பொடிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் கோ பூஜையும் குழந்தை பேறு கிடைக்க வேண்டி கன்னிகா பூஜையும் நடைபெற்றது.

    அப்போது குழந்தை பேறு வேண்டுதல்களுக்காக திருமணமான பெண்கள் கன்னிப் பெண்களுக்கு பாத பூஜை செய்து மஞ்சள், குங்குமம், போன்ற பொருட்களை வழங்கி வழிபட்டனர். தொடர்ந்து சாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் சாமி-அம்பாளுக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சாமி சன்னதியில் சிவனடியார்களுக்கு கிராமத்தார்களின் மரியாதை வழங்கும் நிகழ்ச்சியும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை யொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. பூஜைகளை ஆலய குருக்கள் சபரிகிரீஸ்வர குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர்.

    நிகழ்ச்சியில் திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார் மற்றும் சுற்றுவட்டார கிராம முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மதுரை ஆலவாயர் அருட்பணி மன்றத்தினர் சுந்தரபாண்டிய பட்டினம், சோழகன் பேட்டை, ரெகுநாத சமுத்திரம் மற்றும் 10 கிராம மண்டகப்படிதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    Next Story
    ×