search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிவபெருமானின் ஏகபாத மூர்த்தி வடிவம்
    X

    சிவபெருமானின் ஏகபாத மூர்த்தி வடிவம்

    • ஏகபாத மூர்த்தி சிலைகள், பெரும்பாலும் தென்னிந்தியாவில் உள்ள ஆலயங்களில் காணப்படுகின்றன.
    • சிவபெருமானின் 64 சிவ வடிவங்களில் ஒன்றே ஏகபாத மூர்த்தி வடிவம்.

    சிவபெருமானுக்கு 64 சிவ வடிவங்கள் இருப்பதாக சைவ நெறி தத்துவம் சொல்கிறது. அதில் ஒன்றே, 'ஏகபாத மூர்த்தி.' ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய ஐந்து மூர்த்திகளும் ஒடுங்கி, ஒரே உருவத்தில் காட்சியளிப்பதே இந்த மூர்த்தி. ஊழிக்காலம் எனப்படும் பிரளய காலத்தில், இந்த உலகமே நீரில் மூழ்கி அழியும். அப்போது உலகில் உள்ள அனைத்து உயிர்களும், உமையவளாகிய சக்திதேவியும் கூட இந்த ஏகபாத மூர்த்தியாகிய சிவபெருமானிடம் ஒடுங்கிவிடுவார்கள்.

    ஊழிக்காலத்தில் இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என்று வேதங்கள் சொல்கின்றன. அனைத்து சக்திகளின் பிறப்பிடமாவும், அனைத்து உயிர்களும் தஞ்சமடையும் இடமாகவும் இந்த ஏகபாத மூர்த்தி இருக்கிறார். இவரது சிலைகள், பெரும்பாலும் தென்னிந்தியாவில் உள்ள ஆலயங்களில் காணப்படுகின்றன. நான்கு கரங்களுடன், மூன்று கண்கள் கொண்டவராய், ஒரு பாதத்தில் நின்ற கோலத்தில் அருளும் வடிவம் இவருடையது.

    ஒற்றைக் காலில் நிற்கும் சிவபெருமானுடைய இடுப்பின் வலது பக்கம் பிரம்மதேவனும், இடதுபக்கம் மகாவிஷ்ணுவும் காட்சி தருகின்றனர். சிவபெருமானின் ஒற்றைக் கால், இந்த பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்கும் தூணாகக் கருதப்படுகிறது. வலது கை அபய முத்திரை காட்டியபடி இருக்க, இடது கை வரத முத்திரை காட்டுகிறது. பின் இரு கரங்களிலும் மான் மற்றும் மழு தாங்கி அருளும் இந்த மூர்த்தியே, 'ஏகபாதர்.'

    Next Story
    ×