search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வித்தியாசமான விநாயகர்கள்
    X

    வித்தியாசமான விநாயகர்கள்

    • கும்பகோணத்தில் உள்ள விநாயகருக்கு 'கரும்பாயிரம் கொண்ட விநாயகர்' என்று பெயர்.
    • திருநெல்வேலி நகரில் 'எண்ணாயிரம் பிள்ளையார்' எனும் பெயரில் அருள்பாலிக்கிறார்

    மூலமுதற் கடவுளாக வணங்கப்படுபவர், விநாயகர். இவரை வணங்கிவிட்டு தான் எந்த காரியத்தையும் செய்ய வேண்டும் என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்து. முன்னுரிமை அளித்து வணங்கப்படும் விநாயகர், பலவித பெயர்களில் அருள்புரிகிறார். அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

    ஓங்கார கணபதி

    காஞ்சிபுரத்தில் தேவாரம் பாடல் பெற்ற திருத்தலங்களுள் ஒன்று, ஓணேஸ்வரர் கோவில். இது காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓணகாந்தன் தளி என்ற இடத்தில் அமைந்துள்ளது. சுந்தரர் இத்தல இறைவனிடம் பதிகம் பாடி, பொன் பொருளை பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. இங்கு 'வயிறு தாரி பிள்ளையார்' என்ற பெயரில் விநாயகர் வீற்றிருக்கிறார். இது தவிர 'ஓங்கார கணபதி' என்ற பெயரிலும் விநாயகர் அருள்கிறார். இந்த விநாயகரின் மீது காதை வைத்துக் கேட்டால், 'ஓம்' என்ற ஒலி கேட்பதாக சொல்கிறார்கள்.

    ஞானசம்பந்த விநாயகர்

    சமயக்குரவர்களில் ஒருவராகவும், தேவாரப் பாடல் பாடியவர்களில் முக்கியமானவராகவும் போற்றப்படுபவர் திருஞானசம்பந்தர். இவர் தேரெழுந்தூர் திருத்தலம் சென்றபோது, அங்கு சிவன் கோவில் எது?, திருமால் கோவில் எது? என்று தெரியாமல் திகைத்து நின்றார். அப்போது அங்கே சாலையில் அருகில் இருந்த விநாயகர், 'அதோ ஈஸ்வரன் கோவில்' என்று கிழக்கு திசையை காட்டியருளினார். அன்று முதல் அந்த சாலை விநாயகர், 'ஞான சம்பந்த விநாயகர்' என்று பெயர் பெற்றார்.

    நாலாயிரத்து ஒரு விநாயகர்

    ஒரு முறை 4 ஆயிரம் முனிவர்கள், அஸ்வமேத யாகம் செய்தனர். அவர்கள் விநாயகரை வழிபட மறந்ததால், யாகம் நடத்துவதற்கான மந்திரம் மறந்து யாகம் தடைபட்டது. பின்னர் நாரதர் வாக்குப்படி, முனிவர்கள் விநாயகரை வழிபட்ட பிறகு யாகம் பூர்த்தியானது. அதில் விநாயகரும் கலந்துகொண்டார். இவர் நாலாயிரத்து ஒரு விநாயகர் என்ற பெயரில், சீர்காழிக்கு கிழக்கே 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநாங்கூர் செல்லும் வழியில் திருமணிக்கூடம் வைணவ திருப்பதியில் உள்ள சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்கிறார். இவருக்கு செய்யப்படும் அபிஷேக நீர், முழுமையாக விநாயகர் சிலைக்குள் உறிஞ்சப்படுகிறது.

    ஆயிரமும் விநாயகரும்

    கும்பகோணத்தில் உள்ள விநாயகருக்கு 'கரும்பாயிரம் கொண்ட விநாயகர்' என்று பெயர். அதே போல் திருவண்ணாமலை ஆலயச் சுவரில் வீற்றிருக்கும் ஒரு ஜான் உயரமே கொண்ட விநாயகருக்கு 'ஆயிரம் யானை திரை கொண்ட விநாயகர்' என்றும், திருநெல்வேலி நகரில் 'எண்ணாயிரம் பிள்ளையார்' என்றும், ஆறுமுகமங்கலம், கினாக்குளம் ஆகிய ஊர்களில் 'ஆயிரத்தெண் விநாயகர்' எனும் பெயர்களிலும் அருள்பாலிக்கிறார்.

    Next Story
    ×