search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச மகா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
    X

    சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச மகா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

    • இன்று மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.
    • ஞாயிற்றுக்கிழமை வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடக்கிறது.

    சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 5-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு ஈரோடு முருகனடியார் திருப்பணி குழு சார்பில் மலை மேல் உள்ள முருகன் கோவிலில் தொடர்ந்து 5 நாட்கள் அன்னதானம் நடைபெற்றது.

    தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம் நேற்று நடந்தது. இதற்காக நேற்று காலை 9 மணிக்கு மேல் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வகைகளை கொண்ட மலர்கள் டன் கணக்கில் கொண்டு வரப்பட்டது. பின்னர் சாமிக்கு மலர்கள் மற்றும் அனைத்து வகை கனிகள், திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நாதஸ்வர தவிழிசை கச்சேரியுடன் 4 ராஜ வீதிகளிலும் சாமிகள் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களின் வசதிக்காக மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர் திருவிழாவுக்காக ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தது.

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை (பெருந்துறை), கோபாலகிருஷ்ணன் (திருப்பூர்) ஆகியோர் மேற்பார்வையில் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் உட்பட 9 இன்ஸ்பெக்டர்கள், 30-க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் என 320 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது. தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) இரவு விஸ்வகர்ம சமுதாய விழா குழு சார்பில் பக்தி இசை நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு கைலாசநாதர் கோவில் வளாகத்தில் பாரம்பரிய கலை குழுவினரின் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    Next Story
    ×