search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீ பத்மாவதி தாயார் சிலை இன்று காலை பிரதிஷ்டை: நாளை கும்பாபிஷேகம்
    X

    ஸ்ரீ பத்மாவதி தாயார் சிலை இன்று காலை பிரதிஷ்டை: நாளை கும்பாபிஷேகம்

    • நாளை 17-ந்தேதி காலை 7.30 மணிமுதல் 7.44 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • நாளை பகல் 11 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
    • 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோவில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

    இந்தியாவிலேயே முதல் முதலாக சென்னையில் தான் பத்மாவதி தாயாருக்கு தனி கோவில் கட்டி நாளை 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிமுதல் 7.44 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

    முன்னதாக 3 நாட்கள் பத்மாவதி தாயார் நெல் தானியத்திலும், தண்ணீரிலும் 2000 லிட்டர் பாலிலும் அபிஷேகம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இன்று காலையில் தாயாரை கோவில் கருவறைக்கு கொண்டு சென்று அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று காலை 7 மணி முதல் 8 மணி வரை சதுஸ்தனா அர்ச்சனா நடந்தது.

    8 மணி முதல் 9 மணி வரை மூர்த்தி ஹோமம் நடத்தப்பட்டது. 9 முதல் 9.30 மணி வரை தாயாருக்கு அஸ்த பந்தன மூல விக்கிரக பிரதிஷ்டை மகாத்சயம் நடந்தது. பத்மாவதி தாயார் கருவறையில் நிறுவப்பட்டதை தொடர்ந்து திருப்தி கோவிலில் உள்ள ஆகம விதிப்படி அனைத்து சம்பிரதாயங்களும் பின்பற்றப்பட்டன. தொடர்ந்து காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை தாயாருக்கு பல்வேறு சடங்குகள் செய்யப்படுகின்றன.

    துவஜஸ்தம்ப சாயா, ஜலதிவாசம், பிம்ப நயனோன் மீளனம், தீர்த்தபிரசாத கோஷ்டி, சதுஸ்தானார்ச்சனா, தத்வனயாசம், மூர்த்தி ஹோமம், பூர்ணா ஹுதி, சயனாதிவாசம், தீர்த்தபிரசாத கோஷ்டி போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

    நாளை கும்பாபிஷேகத்தையொட்டி அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை சதுசதனா அர்ச்சனை தாயாருக்கு நடக்கிறது. 5-மணி முதல் 6 மணி வரை மகா சாந்தி ஹோமம் பூர்ணாஹுதி, 6 மணி முதல் 6.30 மணி வரை கும்ப உத்தப்பன 7 மணி முதல் 7.15 மணிவரை ஆலய பிரதக்ஷனா, 7.15 முதல் 7.30 மணி வரை சம்பாத்ஜய சபர்ஷனம், 7.30 மணி முதல் 7.44 மணிக்குள் மீன லக்கணத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    விமான கோபுரத்திலும் ராஜகோபுரத்திலும் ஒரே நேரத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

    10 மணி முதல் 11 மணி வரை பாணி கிரகணம் (பத்மாவதி சீனிவாசா கல்யாணம்) 11 மணி முதல் 11.30 மணி வரை ஆச்சர்யா, ரித்விக் பரிச்சார்கா மர்யாடா நிகழ்ச்சி நடக்கிறது.

    கும்பாபிஷேக விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.ஒய்.சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி, விசாகப்பட்டினம் சாரதா பீடம் ஸ்ரீ ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சுவாத் மனேந்திரா சரஸ்வதி சுவாமிகள், தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜே.சேகர் மற்றும் ஆன்மீகவாதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    நாளை காலையில் நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கு குறைந்த அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சிவாச்சாரியர்கள், குருக்கள், நீதிபதிகள், முக்கிய பிரமுகர்கள், திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கும்பாபிஷேகத்தை காண அனுமதிக்கப்படுகிறார்கள்.

    11-மணியில் இருந்து பொதுமக்கள் பத்மாவதி தாயாரை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். கூட்டத்தை சமாளிக்க இரும்பு தடுப்பு வேலி அமைத்து ஒரு வரிசையில் உள்ளே செல்லவும் மற்றொரு வரிசையில் வெளியே வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு வரை பத்மாவதி தாயாரை தரிசிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சாம்பார் சாதம், ரச சாதம், தயிர் சாதம், இனிப்பு பொங்கல், வெஜ் பிரியாணி ஆகிய உணவு வகைகள் 3 வேளையும் வழங்கப்படுகிறது.

    பக்தர்கள் சாப்பிடுவதற்கு வசதியாக கோவிலுக்கு எதிரே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு டேபிள்-சேர் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இதேபோல நாளை காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரையிலும் அன்னதானம் இடைவிடாமல் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழுத் தலைவர் ஏ.ஜே.சேகர் தெரிவித்தார்.

    பத்மாவதி தாயார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக திருப்பதி லட்டு வழங்கப்படுகிறது. 15 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    நாளை கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் இரவு 7.30 மணிக்கு திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தாயார் கோவிலில் இருந்து புறப்பட்டு ஜி.என்.செட்டி ரோடு வலது புறமாக சென்று வடக்கு போக் சாலை, விஜயராகவாச் சாரியார் சாலை, டாக்டர் நாயர் ரோடு வழியாக சென்று மீண்டும் திருமாட வீதியை அடைகிறது.

    கும்பாபிஷேகத்தையொட்டி நாளை காலையில் ஜி.என்.செட்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தை மாற்றி விடவும் திட்டமிடப்பட்டு உள்ளது. காலையில் இருந்து இரவு வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் போக்குவரத்தை சீர் செய்ய போலீசாரும் அங்கு குவிக்கப்படுகிறார்கள்.

    Next Story
    ×