search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு: ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் சாந்தி அபிஷேகம்
    X

    உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்தபோது எடுத்தபடம்.

    மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு: ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் சாந்தி அபிஷேகம்

    • பரத்வாஜ் முனிவருக்கு (உற்சவர்) சாந்தி அபிஷேகம் செய்யப்பட்டது.
    • தீப, தூப, நெய்வேத்தியங்களை சமர்ப்பித்தனர்

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த 13-ந்தேதி பக்த கண்ணப்பர் கொடியேற்றத்துடன் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. 13-வது நாளான நேற்று முன்தினம் இரவு ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு ஏகாந்த சேவை நடந்தது.

    முன்னதாக உற்சவமூர்த்திகளை சிறிய பல்லக்குகளில் வைத்து ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மூலவர் சன்னதி எதிரில் இருந்து ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மூலவர் சன்னதி எதிரில் உள்ள சயன மந்திரத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.

    கோவிலின் நடை சாத்தும் நேரத்தில் இரவு 9.30 மணியளவில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் உற்சவரை பல்லக்கில் வைத்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் உற்சவரை அதே பல்லக்கில் வைத்து ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மூலவர் சன்னதி எதிரில் உள்ள சயன மந்திரம் அருகில் கொண்டு வந்தனர்.

    அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஊஞ்சலில் (படுக்கை) சாமி-அம்பாளை வைத்து தீப, தூப நெய்வேத்தியங்கள் சமர்பித்து வேத மந்திரங்கள் முழங்க கதவுகள் சாத்தப்பட்டதும் ஏகாந்த சேவை நடந்தது.

    இந்தநிலையில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று பஞ்சமூர்த்திகள் மற்றும் பரத்வாஜ் முனிவருக்கு (உற்சவர்) சாந்தி அபிஷேகம் செய்யப்பட்டது. வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா பூஜை முறைகளில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள், வேத பண்டிதர்கள் யாரேனும் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளை நிவர்த்தி செய்வதற்காக சாந்தி அபிஷேகம் செய்யப்பட்டது.

    கங்காதேவி சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாா், விநாயகர், வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணியசாமி, சண்டிகேஸ்வரர், பக்த கண்ணப்பர், திரிசூலம் மற்றும் பரத்வாஜ் முனிவர் உற்சவர்களுக்கு வேதப் பண்டிதர்கள் பல்வேறு சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்து தீப, தூப, நெய்வேத்தியங்களை சமர்ப்பித்தனர்.

    முன்னதாக அர்ச்சகர்கள் கலசம் ஏற்பாடு செய்து யாகம் வளர்த்தனர். அதைத்தொடர்ந்து அபிஷேக, அலங்காரம், ஆராதனை நடந்தது. அதில் கோவில் அதிகாரிகள், அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இத்துடன் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

    Next Story
    ×