என் மலர்tooltip icon

    வழிபாடு

    அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்
    X

    அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்

    • இயேசு தரும் அமைதியே நிலையானதாக இருக்கிறது.
    • இயேசு கிறிஸ்துவிடம் இருந்து அருளும் அமைதியும் உரித்தாகுக.

    இயேசு விவிலியத்தில் பல போதனைகளை மக்களுக்கு கொடுத்துள்ளார். அதில் மிகவும் முக்கியமானது மத்தேயு நற்செய்தி 5-ம் அதிகாரத்தில் இடம் பெற்று இருக்கிற மலைப்பிரசங்கம். அதில் அவர் எட்டு பேறுகளைப் பற்றி பேசுகிறார். அவற்றில் ஒன்று தான் "அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என்று அழைக்கப்படுவர்". (மத்தேயு 5:9)

    கடவுளின் மக்கள் யார்? என்கிற பலரது கேள்விக்கு பதிலாக அமைகிறது இயேசுவின் இந்த இறைவார்த்தை. ஜெபம் செய்பவர்களும், ஆலயத்திற்கு செல்பவர்களும், இறைவார்த்தையை வாசிப்பவர்களும் மட்டும் கடவுளின் மக்களாக மாற முடியாது. அதனோடு அமைதியை ஏற்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை எடுத்துச்சொல்கிறது இந்த இறைவார்த்தை. அமைதியை ஏற்படுத்துவது என்பது இன்றைய காலச்சூழலில் பெரும் சவாலாகவே இருக்கிறது. அமைதியை ஏற்படுத்த பல முயற்சிகள் தேவைப்படுகின்றன.

    எடுத்துக்காட்டாக ஒரு பிரச்சினை வருகிறது என்றால் அதனை முதலில் பொறுத்துக்கொள்ள வேண்டும். எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? எப்படி எனது கொள்கையை விட்டுக்கொடுப்பது? என்ற கேள்வியினாலேயே பல சண்டைகள் குடும்பங்களிலும், ஊரிலும், உலகிலும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதனால் வருகிற பின்விளைவுகளை எவருமே சிந்திப்பது இல்லை.

    பொறுமை நம்மில் உருவாகிட எல்லோரையும் அன்பு செய்ய வேண்டும். ஏன் அன்பு செய்ய வேண்டும்?. ஏனெனில், 'இறைவன் நம் அனைவரையும் அன்பு செய்து அவரது சாயலில் படைத்து இருக்கிறார்' (தொடக்கநூல் 1:26). எனவே நாம் அனைவரும் சகோதர-சகோதரிகள். அதனால் ஒருவர் மற்றவரை அன்பு செய்ய வேண்டும். இதனையே இயேசு, "உன் மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்து இருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" என்று (லூக்கா 10:27) கூறுகிறார்.

    ஒருவரை முழுமையாக அன்பு செய்கிறபோது அவர் என்ன தவறு செய்தாலும் அவரது இயலாமைகளோடு ஏற்றுக்கொள்ள முடியும். இந்த ஏற்றுக்கொள்ளுதல் நடந்து விட்டால், மன்னிப்பு நிகழ்ந்து விடும். மன்னிப்பு நிகழ்ந்துவிட்டால் பிரச்சினைகள் தீர்ந்து எல்லா தரப்பிலும் அமைதி நிலவிடும். அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று சொன்னால் முதலில் அமைதி நம்மிடம் இருக்க வேண்டும்.

    இதனையே மனஅமைதி என்று கூறுவர். இந்த அமைதியை நமது செல்வத்தாலும், புகழ்ச்சியாலும் பெற முடியாது. நாம் செய்யும் நற்செயல்களால் மட்டுமே பெற முடியும். அதிலும் இந்த உலகம் தரும் அமைதி நிலையானது அல்ல. மாறாக, இயேசு தரும் அமைதியே நிலையானதாக இருக்கிறது.

    இயேசு உயிர்த்தெழுந்த பிறகு தன் சீடர்களை சந்தித்ததும் அவர் கூறிய முதல் வார்த்தை 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக'. இயேசு தன் சீடர்களை அழைத்து அவர்களை இருவர் இருவராக நற்செய்தி அறிவிக்க அனுப்பும் போது அவர்களிடம், "நீங்கள் எந்த வீட்டிற்கு சென்றாலும் முதலில் அவர்களுக்கு அமைதியை தெரிவியுங்கள்" என்றார். இவ்வாறு இயேசு சென்ற இடம் எல்லாம் அமைதியை ஏற்படுத்தினார்.

    தன் சீடர்களையும் அமைதியை ஏற்படுத்தச் சொன்னார். அதனை பின்பற்றியே திருத்தூதரான பவுல் மக்களுக்கு கடிதம் எழுதுகிற போது தந்தையாம் கடவுளிடமிருந்தும், ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடம் இருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக (உரோமையர் 1:1) என்று எழுதியே தொடங்குவார்.

    இவ்வாறு அமைதியை ஏற்படுத்த விவிலியம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. இதனை பின்பற்றிய பிரான்சிஸ் அசிசியார் என்னும் துறவி, விவிலியத்தின் அடிப்படையில் அமைதிக்கான ஜெபத்தை இவ்வாறு எழுதியுள்ளார்:

    "இறைவா, என்னை அமைதியின் கருவியாக்கும். எங்கு பகைமை நிறைந்துள்ளதோ அங்கு அன்பையும், எங்கே கயமை நிறைந்துள்ளதோ அங்கே மன்னிப்பையும், எங்கே அவநம்பிக்கை நிறைந்துள்ளதோ அங்கே நம்பிக்கையையும், எங்கு இருள் சூழ்ந்துள்ளதோ அங்கு ஒளியையும், எங்கு மனக் கவலை உள்ளதோ அங்கு அகமகிழ்வையும் விதைத்திட அருள்புரியும். என் இறைவா, ஆறுதல் பெறுவதைவிட ஆறுதல் அளிக்கவும், புரிந்து கொள்ளப்படுவதைவிட புரிந்துகொள்ளவும், அன்பு செய்யப்படுவதைவிட பிறரை அன்பு செய்யவும் வரம் அருள்வாய்".

    இதனை நமது வாழ்வில் பயிற்சி செய்யும் போது அமைதியின் கருவிகளாக மாற முடியும். இவ்வாறு முயற்சி செய்கிற போது கடவுளின் மக்களாக மாற முடியும். இந்நாள் வரையிலும் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டோமா? இனியாவது அந்த முயற்சியில் ஈடுபடுவோமா? சிந்திப்போம்! செயல் படுவோம்.

    Next Story
    ×