search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடி அமாவாசை தர்ப்பணம்
    X

    ஆடி அமாவாசை தர்ப்பணம்

    • பித்ரு தர்ப்பணம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படும் துன்பங்கள் நீங்கும்.
    • பித்ரு தர்ப்பணம் என்பதற்கு பித்ருக்களை திருப்தி செய்வித்தல் என்று பொருள்.

    சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதூர்க்காரகன். இந்த இரண்டு கிரகங்கள் கடக ராசியில் இணையும் காலமான ஆடி அமாவாசையன்று, முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.

    எனவே ஆடி அமாவாசை நாளில் நீர் நிலைகளில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கை.

    பித்ரு தோஷம்

    ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால், அவருடைய குடும்பத்தில் அடுக்கடுக்கான சோதனைகள் ஏற்பட்டு துன்பம் விளைவிக்கும். இதற்கு உரிய பரிகாரம் செய்வது மிக அவசியம்.

    பித்ரு தர்ப்பணம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படும் துன்பங்கள் நீங்கும். தர்ப்பணம் செய்வது பற்றி மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. பித்ரு தர்ப்பணம் என்பதற்கு பித்ருக்களை திருப்தி செய்வித்தல் என்று பொருள். அமாவாசை நாளில் எள்ளும் தண்ணீரும் கொடுப்பதன் மூலம் மறைந்த நம் முன்னோர்களை திருப்திபடுத்தலாம்.

    பித்ரு தர்ப்பணம் மூன்று தலைமுறையினருக்காக செய்யப்படுகிறது. ஒருவர் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் அந்த ஜாதகம் பித்ருதோஷம் உடைய ஜாதகம். ஜாதகத்தில் சூரியனோ அல்லது சந்திரனோ, ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருப்பதும் பித்ரு தோஷத்தைக் குறிக்கும்.

    லக்னத்துக்கு 9-ம் இடத்து அதிபதியும் 5-ம் இடத்து அதிபதியும் சேர்ந்து லக்னம், 5ஆம் இடம், 9-ம் இடம் ஆகிய இடங்கள் ஒன்றில் இருந்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும்.

    அமாவாசை தர்ப்பணம்

    வான சாஸ்திர, ஜோதிட சாஸ்திர அடிப்படையில் சூரியன், சந்திரன் ஒரே ராசியில் இணைவதே அமாவாசை. ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசியில் இருப்பார். ஆடி மாதம் கடக ராசியில் இருப்பார். அந்த நேரத்தில் தினக்கோளான சந்திரன் கடக ராசியில் சூரியனுடன் சேரும் நாளே ஆடி அமாவாசை.

    அமாவாசை திதி நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கான பிரத்யேகமான திதி. மாதம்தோறும் அமாவாசையன்று திதி கொடுப்பதால், பித்ரு தோஷம் நீங்குவதோடு முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைப்பதுடன், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

    மூன்று தலைமுறை தர்ப்பணம்

    அமாவாசை அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவற்றை தர்ப்பணத்துக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தர்ப்பணம் கொடுக்க மதியவேளை மிகவும் சிறந்ததாகும். தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், தந்தை வழி மற்றும் தாய் வழியில் மூன்று தலைமுறையினரின் பெயர்களை சொல்லி, தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.

    அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின்போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகா விஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.

    அகத்திக்கீரை

    முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலையில் படையல் போட்டு வணங்க வேண்டும்.

    கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்க வேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும்வரை, தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம்.

    Next Story
    ×