search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோவிலில் ஆனிவார ஆஸ்தான நிகழ்ச்சி: ஸ்ரீரங்கம் கோவில் சார்பாக பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்
    X

    பிரம்மாண்ட புஷ்ப பல்லக்கு வீதிஉலா நடந்த காட்சி.

    திருப்பதி கோவிலில் ஆனிவார ஆஸ்தான நிகழ்ச்சி: ஸ்ரீரங்கம் கோவில் சார்பாக பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்

    • மூலவருக்கு 4 பட்டு வஸ்திரங்கள் அணிவித்து அலங்கரிக்கப்பட்டது.
    • தீர்த்த பிரசாதத்துக்கு பிறகு ஸ்ரீவாரி பாதங்களில் சாவி கொத்து வைக்கப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஆனிவார ஆஸ்தானம் நடந்தது. காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை தங்க வாசல் எதிரில் உள்ள கண்டா மண்டபத்தில் சர்வபூபால வாகனத்தில் உற்சவர்களான ஸ்ரீேதவி, பூதேவி, மலையப்பசாமியை கருடாழ்வார் எதிரில் வைத்தனர். சேனாதிபதியான விஷ்வக்சேனர் மற்றொரு பீடத்தில் தெற்கு நோக்கி வைக்கப்பட்டார். ஆனந்த நிலையத்தில் உள்ள மூலவர் ஏழுமலையானுக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு பிரசாத நிவேதனம் வழங்கப்பட்டது.

    அதன்பிறகு, பெரிய ஜீயர் சுவாமி வெள்ளித் தட்டில் 6 பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி மங்கள வாத்தியங்கள் இசைக்க ஏழுமலையான் கோவிலுக்குள் வந்தார். அவருடன் சின்ன ஜீயர் சுவாமி மற்றும் முதன்மைச் செயல் அலுவலா், பிற உயர் அதிகாரிகள் உடன் வந்தனர்.

    மூலவருக்கு 4 பட்டு வஸ்திரங்கள் அணிவித்து அலங்கரிக்கப்பட்டது. மீதமுள்ள 2 வஸ்திரங்களில் ஒன்றை உற்சவர் மலையப்பசாமிக்கும், மற்றொன்றை விஷ்வக்சேனருக்கும் அணிவித்து அலங்கரிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கோவிலின் தலைமை அர்ச்சகர் தலையில் பரிவட்டம் கட்டி, சாமியிடம் அரிசி தட்சணை பெற்று, சுவாமிக்கு 'நித்ய ஐஸ்வர்யோபவ' என உச்சரித்தார். அதன்பின் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அர்ச்சகர்கள் பெரிய ஜீயர் சுவாமி, சின்னஜீயர் சுவாமி, முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஆகியோரின் வலது கையில் சாவிக்கொத்தை ஒப்படைத்தனர். இத்துடன் கோவிலில் நடந்த ஆனிவார ஆஸ்தான விழா முடிந்தது. அதைத்தொடர்ந்து ஆரத்தி, சந்தனம், தாம்பூலம், தீர்த்த பிரசாதத்துக்கு பிறகு ஸ்ரீவாரி பாதங்களில் சாவி கொத்து வைக்கப்பட்டது.

    ஆனிவார ஆஸ்தானத்துக்கு பிறகு கோவிலில் இருந்து வெளியே வந்ததும் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பேசுகையில், கடந்த காலங்களில் ஏழுமலையான் கோவிலின் பாதுகாவலர்களான மகந்துகள் ஆண்டு அடிப்படையில் வருமானம், செலவுகள், இருப்பு கணக்குகளை வைத்திருந்தனர். திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு அமைக்கப்பட்ட பிறகு, மகந்துகளிடம் இருந்து கோவிலின் வரவு-செலவு கணக்குகள் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தேவஸ்தானம் வருடாந்திர வரவு-செலவு கணக்கு பட்ஜெட்ைட மார்ச்-ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்து வருகிறது, என்றார்.

    அதைத்தொடர்ந்து மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    ஆனிவார ஆஸ்தானம் அன்று வைகானச வழக்கத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி கோவில் நிர்வாகிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பட்டு வஸ்திரம் மற்றும் மங்கள பொருட்கள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை சமர்ப்பணம் செய்தனர்.

    அதையொட்டி நேற்று காலை பேடிஆஞ்சநேயர் கோவிலை அடுத்த பெரிஜீயர் மடத்தில் பட்டு வஸ்திரங்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. அங்கிருந்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சின்ன ஜீயர்சுவாமி, திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஆகியோர் பட்டு வஸ்திரங்களை மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து கோவிலுக்குள் எடுத்துச் சென்றனர். இதையடுத்து மூலவருக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தனர்.

    நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மணிவாசகம், கமிஷனர் முரளிதரன், ஸ்ரீரங்கம் கோவில் இணை கமிஷனர் சிவராம்குமார், ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர் சீனிவாச ராகவ பட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×