search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடிப்பெருக்கு உற்சாக கொண்டாட்டம்: காவிரி கரையில் புனித நீராட கட்டுப்பாடுகள்

    • இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • புதுமண தம்பதிகள் ஆற்றில் புனித நீராடி புதிய ஆடைகள் அணிந்து கொண்டனர்.

    ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் காவிரி ஆறு நுழையும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டது.

    கர்நாடகத்தில் பெய்த கன மழையால் மேட்டூர் அணை நிரம்பி அங்கிருந்து திறக்கப்பட்ட உபரி நீர் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டுச் செல்கிறது. தற்போது காவிரி ஆற்றில் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அகண்ட காவிரி கடல் போல் காட்சி அளிக்கிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆடிப்பெருக்கு நாளன்று காவிரி கரையோரங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது தொற்று கட்டுக்குள் இருக்கும் நிலையில் பாரம்பரிய நிகழ்வான ஆடிப்பெருக்கை கொண்டாட தடை ஏதும் விதிக்கப்படவில்லை. ஆனால் காவிரியில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் பாதுகாப்புடன் கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா காவிரி கரையோர பகுதிகளில் களை கட்டியது.

    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் புனித நீராடுவதற்காக வந்த பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. அவர்கள் படித்துறையில் வாழை இலை விரித்து அதில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, தேங்காய், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்பட மங்கல பொருட்களை படையலிட்டு விளக்கேற்றி பூஜை செய்தனர். பின்னர் அவற்றை ஒரு வாழை மட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விட்டனர். காவிரி ஆற்றிற்கும் தீபாராதனை காட்டி வழிபட்டு நன்றி தெரிவித்தனர்.

    புதுமண தம்பதிகள் ஆற்றில் புனித நீராடி புதிய ஆடைகள் அணிந்து கொண்டனர். மேலும் திருமணத்தின் போது மணமக்கள் அணிந்த மாலைகளை ஆற்றில் கொண்டு வந்தும் விட்டனர். மூத்த சுமங்கலி பெண்களிடம் புதுமண தம்பதிகள் ஆசி பெற்றனர். மேலும் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டனர்.

    அதேபோல திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி கையில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் வகையில் ஆற்றங்கரையோரம் உள்ள வேப்ப மரத்திலும் மஞ்சள் கயிறு கட்டினர். சுமங்கலி பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றிக்கொண்டனர்.

    ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் ஆபத்து ஏற்படலாம் என்பதால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்குழாய் மூலம் ஷவர் போன்ற அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. ஆனாலும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு பகுதிக்குள் நின்று நீராடினர். மேலும் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரை பொங்கல் வைத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்து விடாமல் தவிர்ப்பதற்காக படித்துறை அருகே முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. காவிரி கரையிலேயே கட்டுப்பாட்டு அறை அமைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மேலும் காவிரி ஆற்றில் ரப்பர் படகுகளில் தீயணைப்பு துறையினர் ரோந்து பணியில் இருந்தனர். தடுப்புகளை தாண்டி ஆற்றின் ஆழமான பகுதிக்கு வர யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று தொடர்ந்து அவர்கள் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்த வண்ணம் இருந்தனர்.

    இதேபோல் திருச்சி காவிரி கரையோரமான கருட மண்டபம், கீதாபுரம், ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை, திருவளர்ச்சோலை, கம்பரசம்பேட்டை, பெட்டவாய்த் தலை, பனங்காவேரி, திருப்பராய்த்துறை, தொட்டியம், ஸ்ரீராமசமுத்திரம், முசிறி காவிரி கரையோர பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் 62 இடங்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட அனுமதி வழங்கப்பட்டது.

    ஆடிப்பெருக்கையொட்டி மாலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் காவிரி அன்னைக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக காலை 6 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தங்க பல்லக்கில் புறப்பட்டு வந்தார். காலை 11.30 மணிக்கு அவர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார். மாலை 4 மணிக்கு நம்பெருமாள் காவிரி அன்னைக்கு பட்டுப்புடவை, பழங்கள், மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் அடங்கிய சீர் வரிசையை வழங்குகிறார்.

    சேலம் மாவட்டத்தில் மேட்டூர் மற்றும் அங்கிருந்து காவிரி புறப்படும் கரை யோரங்களில் ஆடிப்பெருக்கு விழா களை கட்டியது. தற்போது மேட்டூர் அணைக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    மேட்டூர் அணை பாலம் பகுதி மற்றும் அணைக்கட்டு முனியப்ப சுவாமி கோவில் ஆகிய 2 இடங்களில் மட்டுமே ஆடிப்பெருக்கு விழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டாக ஏமாற்றமடைந்த மக்கள் இந்த ஆண்டு திரண்டு வந்து உற்சாகமாக கொண்டாடினர். இதேபோல் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி காவிரி கரையோர பகுதிகளிலும் புதுமண தம்பதிகள், கன்னி பெண்கள், பொதுமக்கள் திரண்டு ஆடிப்பெருக்கை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம், ஜேடர் பாளையம், மொளசி, குமாரபாளையம், சோழசிராமணி, பரமத்திவேலூர், மோகனூர் ஆகிய ஊர்களில் காவிரி கரையோரம் திரண்ட மக்கள் அம்மனை தரிசித்து வழிபட்டனர். காவிரியில் கூடுதல் தண்ணீர் பாய்வதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. காவிரி ஆற்றில் இறங்க அனுமதிக்கப்படவில்லை.

    தஞ்சை மாவட்டத்தில் புத்திய மண்டபத்துறை மற்றும் காவிரி பாயும் திருவையாறு பகுதிகள், ஆடிப்பெருக்கை முன்னிட்டு களை கட்டியது. தஞ்சை கல்லணை கால்வாய் புது ஆறு, கும்பகோணம் மகாமக குளம், பகவத் படித்துறை பகுதியிலும் அதிக அளவில் பொதுமக்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.

    மயிலாடுதுறை மாவட்டம் காவிரி துலா கட்டத்தில் ஆடிப்பெருக்கான இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் ஒன்றுகூடி காப்பரிசி, காதோலை, கருகமணி, பழங்கள் உள்ளிட்டவற்றை வாழை இலையில் படைத்து தங்களது வாழ்வு வளம் பெற காவிரி அம்மனை வழிபட்டன்.

    ஈரோடு மாவட்டத்தில் வெகு விமரியைாக கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு விழா இன்று காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் களையிழந்தது. பொதுமக்கள் அதிகம் கூடும் பவானி கூடுதுறை, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், ஈரோடு அம்மாப்பேட்டை காவிரி கரையோர பகுதிகள், கருங்கல்பாளையம் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஆடிப்பெருக்கை கொண்டாட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டம் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில், நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கான இன்று ஏராளமான கன்னி பெண்கள், சுமங்கலி பெண்கள் திரண்டு வழிபட்டனர். அவர்கள் தாலி கயிறையும் மாற்றிக் கொண்டனர். இன்று மாலை தாமிரபரணி ஆற்றங்கரைகளில் மகா ஆரத்தி நிகழ்ச்சி நடக்கிறது.

    மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் திரண்ட ஏராளமான சுமங்கலி பெண்கள் பொற்றாமரை குளத்தின் படிகளில் நின்று தாலி கயிறை மாற்றிக் கொண்டனர். பின்னர் மீனாட்சி-சுந்தரேஸ்வரரை வழிபட்டனர்.

    Next Story
    ×