search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புதுமண்டபத்தில் தண்ணீர் நிரப்பி விழா நடத்த ஏற்பாடு
    X
    புதுமண்டபத்தில் தண்ணீர் நிரப்பி விழா நடத்த ஏற்பாடு

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பல நூற்றாண்டுகளுக்குப்பின் புதுமண்டபத்தில் தண்ணீர் நிரப்பி விழா நடத்த ஏற்பாடு

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புதுமண்டபத்தில் வருகிற 3-ந் தேதி வசந்த உற்சவத்தையொட்டி பல நூற்றாண்டுக்கு பின்பு மண்டபத்தில் தண்ணீர் நிரப்பி விழா நடத்த ஏற்பாடு நடைபெறுகிறது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு ராஜகோபுரம் எதிரே கீழசித்திரை வீதியில் அமைந்துள்ளது புதுமண்டபம். 1635-ம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் கோடை காலத்தில் வசந்த விழா கொண்டாடுவதற்காக முற்றிலும் கற்களால் இந்த மண்டபத்தை கட்டினார். எனவே இதனை வசந்த மண்டபம் என்றும் அழைப்பர். 333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட புதுமண்டபத்தில் 4 வரிசைகளில் 125 தூண்கள் உள்ளன. மண்டபத்தின் நடுவில் வசந்த மண்டப மேடை அழகுற அமைந்துள்ளது. வைகாசி வசந்த உற்சவத்தின்போது மீனாட்சி-சுந்தரேசுவரர் இந்த மேடையில் எழுந்தருளி காட்சி அளிப்பர். அதுதவிர கோடை காலத்தின்போது வெப்பம் அதிகமாக இருக்கும். அப்போது மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு வெப்பத்தை தணிக்க அந்த மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் நிரப்புவதற்காக சிறிய அகழி போன்ற அமைப்பும் உள்ளது. எனவே நீராழி மண்டபம் என்றும் அழைத்துள்ளனர். மேலும் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவமும் இந்த மண்டபத்தில்தான் நடைபெறும்.

    திருவிழா நாட்களை தவிர பக்தர்கள் அங்கு ஓய்வு எடுக்கும் இடமாக மாறியது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, இங்கு பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், துணி கடைகள், புத்தக கடைகள், இரும்பு மற்றும் சில்வர் பாத்திரக்கடைகள், பேன்சி கடைகள் என மொத்தம் 300 கடைகள் அங்கு செயல்பட்டு வந்தன. மேலும் அந்த மண்டபத்தில் திருமலை நாயக்கர் மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட 28 அற்புத சிலைகளும் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு கோவில் நிர்வாகமும், தொல்லியல், சுற்றுலா துறை இணைந்து அந்த புதுமண்டபத்தையும், அங்குள்ள கலை நயமிக்க சிலைகள், தூண்களை எல்லோரும் காணும் வகையில் அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்தது.

    அதன்படி அங்குள்ள கடைகள் அனைத்தையும் அங்கிருந்து காலி செய்யுமாறு கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது. பின்னர் கடைக்காரர்கள் தங்களுக்கு மாற்று இடம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து புதுமண்டபம் அருகே உள்ள குன்னத்தூர் சத்திரத்தில் மாநகராட்சி சார்பில் கடைகள் கட்டி அவர்களுக்கு கொடுக்க அரசு முன் வந்தது.

    குன்னத்தூர் சத்திரத்தில் 191 கடைகள் கட்டப்பட்டு, அதில் 169 கடைகள் புதுமண்டபத்தில் இருந்த கடைக்காரர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து புதுமண்டபத்தில் இருந்த பெரும்பாலான கடைகள் குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றப்பட்டன. ஆனால் பாத்திரக்கடை, புத்தக்கடை என 32 கடைக்காரர்கள் மட்டும் இன்னும் தங்களுக்கு ஒதுக்கிய இடத்திற்கு செல்லாமல் புதுமண்டபத்திலேயே தொடர்ந்து செயல்பட்டு வந்தனர். அந்த கடைகளையும் அகற்றும் பணி தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வசந்த உற்சவ விழா வருகிற 3-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் மாலை நேரத்தில் இங்கு வந்து, மண்டபத்தின் உள்ளே 3 முறை வலம் வந்து மேடையில் எழுந்தருள்வர். பல்லாண்டுக்கு முன்பு இந்த விழாவின் போது மண்டபத்தின் நான்குபுறமும் தண்ணீரால் நிரப்பப்படுவது போல் தற்போது தண்ணீரை நிரப்பி திருவிழாவை நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மண்டபத்தை சுத்தம் செய்யும் பணி தற்போது தொடங்கி உள்ளது. அது தவிர தண்ணீரை நிரப்புவதற்காகவும், தண்ணீர் தடையின்றி நான்கு புறமும் அகழியில் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. இதன் மூலம் வசந்த உற்சவ விழா பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு பழைய முறைப்படி நடைபெற உள்ளதால் பக்தர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
    Next Story
    ×