search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபடும் பக்தர்கள்.
    X
    கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபடும் பக்தர்கள்.

    கரூர் மாரியம்மன் கோவிலில் களை கட்டும் கம்பம் ஆற்றில் விடுதல்

    கரூர் மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுதலும், அதனை அமராவதி ஆற்றில் விடுவதும் தொன்மையும், சிறப்பும் வாய்ந்ததாகும்.
    சக்தியின் வடிவமாக திகழும் அம்மன் பக்தர்களின் குறைபோக்கும் அவதாரமாக போற்றப்படுகிறார். ஆடி மாதம் அம்மனுக்கு ஏற்றதாகினும் எப்போதும் பக்தர்களின் தீராத வினைகளை தீர்த்து வைக்கும் அம்சமாக திகழ்கிறாள்.

    அம்மனின் பெருமைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த வகையில் நாடு முழுவதும் பல்வேறு அவதாரம் எடுத்துள்ள அம்மன்களில் தமிழகத்தில் மாரியம்மன் பெரிதும் வணங்கப்படுகிறாள்.

    அந்த வகையில் சக்தி தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக கரூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக திகழ்ந்து வருகிறது. தொழில் நகரமாம் கரூரில் அவதரித்து வரும் இந்த மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத திருவிழா வெகு சிறப்பாகவும், விமரிசையாகவும் நடைபெறும். அப்போது கம்பம் நடுதலும், அதனை அமராவதி ஆற்றில் விடுவதும் தொன்மையும், சிறப்பும் வாய்ந்ததாகும்.

    கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கம்பம் நடுதலுடன் தொடங்கும். அன்றைய தினம் கோவில் பரம்பரை அறங்காவலருக்கு அசரீரியாக அம்மன் வாக்கு கூறியதையடுத்து மூன்று கிளையுடைய வேப்ப மரத்தின் கம்பினை பாலம்மாள்புரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலின் பலி பீடம் எதிரே நட்டு வைப்பார்கள்.

    பின்னர் கம்பத்திற்கு மஞ்சள் தேய்த்து, வேப்பிலை சூட்டி அலங்கரித்து வைப்பார்கள். இந்த கம்பத்திற்கு பக்தர்கள் தினமும் புனித நீரை எடுத்து வந்து குடம், குடமாக ஊற்றி வழிபடுவார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியின் போது, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது திரளான பக்தர்களும் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபடுவார்கள்.

    அதன்பின்னர் புனித நீர் ஊற்றி கோவிலை சுத்தம் செய்வார்கள். இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன், தீபாராதனை காட்டப்படும். பின்னர் கோவில் பலி பீடம் முன்பு உள்ள கம்பத்தில் வேப்பிலை மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    அதைத்தொடர்ந்து கம்பத்தை ஆற்றுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்வார்கள். பக்தர்கள் கோவிலின் முன்புற பகுதியில் கம்பத்தை வழியனுப்ப திரண்டு நிற்பார்கள்.

    மாலை நேரத்தில் அம்மன் சன்னதி எதிரே இருந்த கம்பத்தை பூசாரி எடுத்து கோவில் பிரகாரத்தை சுற்றி வருவார். அப்போது விண்ணதிர மேளதாளங்கள் முழங்கும். பின்னர் கோவிலின் முன்புற பகுதியில் தயார் நிலையில் இருந்த பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்திற்குள் கம்பம் வைக்கப்பட்டு ஊர்வலமாக புறப்படும்.

    இரவு 7 மணியளவில் கம்பமானது பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரையை அடையும். மாவடி ராமசாமியாக அரிவாளுடன் முன்னே அருளாளி செல்ல அதனை பின் தொடர்ந்து கம்பம் ஆற்று பகுதிக்குள் செல்லும். அப்போது ஓம் சக்தி... பராசக்தி... என பக்தர்கள் கோஷம் எழுப்பி கம்பத்தை தொட்டு வணங்குவார்கள்.

    பின்னர் அங்குள்ள மணல் திட்டில் கம்பம் நடப்பட்டு அதன் மீது மஞ்சள், குங்குமம் தூவி பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்படும். இதையடுத்து அங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த அகழியில் உள்ள புனிதநீரில் கம்பத்தை விட்டு மூழ்கடிப்பார்கள்.

    அந்த சமயத்தில் பக்தர்கள் மீது அகழியில் இருந்த புனிதநீர் தெளிக்கப்படும். மேலும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கம்பம் சென்ற இடத்தை கண்டு வழிபட்டு செல்வார்கள். சில பக்தர்கள் காலி பாட்டில்களில் அந்த நீரை பிடித்து எடுத்து செல்வார்கள். கம்பம் ஆற்றில் விடப்பட்டதும் கண்களை கவரும் வகையில் விதவிதமான வாண வேடிக்கை நடைபெறும். இந்த நிகழ்ச்சியை காண கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்ட பக்தர்களும் கடல் அலை போல் திரண்டு வருவார்கள்.
    Next Story
    ×