search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கெலமங்கலம் பட்டாளம்மன் கோவில் தேர்த்திருவிழா
    X
    கெலமங்கலம் பட்டாளம்மன் கோவில் தேர்த்திருவிழா

    கெலமங்கலம் பட்டாளம்மன் கோவில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

    11 கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற இந்த திருத்தேரோட்டம் நிகழ்ச்சியை முன்னிட்டு சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்திகடன் செலுத்தினார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் தேர்திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.

    இதில் கெலமங்கலம், ஜுபி, தொட்டே காணப் பள்ளி, செட்டிபள்ளி, குந்துமாரணப்பள்ளி, ஜக்கேரி உட்பட 11 கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற இந்த திருத்தேரோட்டம் நிகழ்ச்சியை முன்னிட்டு சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்திகடன் செலுத்தினார்கள். நேற்று  மாவிளக்கு எடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கோவிலில் உள்ள மூலவர் ஸ்ரீ பட்டாளம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

    இதனை எடுத்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உற்சவ அம்மனை திருத்தேரில் அமர்த்தி மங்கள ஆரத்தி நடைபெற்றது.  இதை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் கே.பி.தேவராஜ் தலைமையில் தளி எம்எல்ஏவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக் குழு தலைவரும்மான டி. ராமச்சந்திரன், கலந்துக்கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கிவைத்தார்.

    இதில் அறநிலைதுறை அதிகாரிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள்,உட்பட ஏராளமான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்தது.

    இந்த திருத்தேர் நிகழ்ச்சியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. மேலும் பாதுகாப்பு பணியில் டி.எஸ்.பி.கிருத்திகா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சுப்பிரமணி, சப்- இன்ஸ்பெக்ட்டர் பார்திபன் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பக்தர்களின் பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்தனர்.

    இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
    Next Story
    ×