search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இறைவன் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள்
    X
    இறைவன் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள்

    இறைவன் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள்

    இறைவனை முழுமையாக சரணடைந்தால், விதிப்படி நடக்கும் பெரும் தீமை கூட, நம்மை விட்டு நீங்க இறைவன் அருள்புரிவார் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை அறிந்து கொள்ளலாம்.
    ஒரு குருவும், சீடனும் தல யாத்திரை மேற்கொண்டிருந்தனர். ஒருநாள் இரவு பயணத்தை முடித்துக் கொண்டு, ஒரு மரத்தடியில் தங்கி ஓய்வெடுத்தனர். மறுநாள் அதிகாலை கண் விழித்த சீடன், அருகில் இருந்த நதியில் நீராடிவிட்டு வந்து, குருவை எழுப்பினான். அவரும் உடனடியாக எழுந்து நீராடி வருவதாக கூறிச் சென்றார். அவர் நீராடும்போது, சூரிய பகவானை நினைத்து வழிபட்டார். அப்போது அவர் முன்பு தோன்றிய சூரிய பகவான், “உன்னுடைய சீடன் இன்று ஒரு ராட்சதனால் கொல்லப்படுவான். முடிந்தால் காப்பாற்றிக் கொள்” என்று எச்சரிக்கை செய்து மறைந்தார்.

    நீராடி விட்டு தங்கியிருந்த இடத்திற்கு வந்த குரு, தன்னுடைய சீடனை கவலையோடு பார்த்தார். பின்னர் அவர்கள் இருவரும் வேறு ஒரு தலத்தை நோக்கி பயணப்பட்டனர். அன்று இரவும் ஒரு இடத்தில் தங்கினர். சீடன் நன்றாக கண்ணயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான். ஆனால் சீடனின் நிலை என்னாகுமோ என்ற கவலையில், குருவிற்கு தூக்கம் வரவில்லை.

    அப்போது அங்கு ஒரு ராட்சதன் தோன்றினான். அவன், சீடனை தன் கூரிய பற்களால் கடிக்க முற்பட்டான். அவனைத் தடுத்த குரு, “நீ என் சீடனின் உயிரை எடுக்க வந்திருக்கிறாய் என்பதை நான் அறிவேன். குருவின் மீது பக்தி கொண்ட ஒரு சீடனை காப்பாற்றுவது, அந்த குருவின் கடமை. எனவே என்னுடைய சீடனின் உயிரை எடுக்க நான் அனுமதிக்க மாட்டேன். என்னை மீறி நீ அந்த காரியத்தைச் செய்வதாக இருந்தால், என் தவப்பலனால், உன்னை கடுமையான துன்பத்திற்கு நான் ஆளாக்குவேன்” என்றார்.

    ராட்சதன் இப்போது பேசினான். “சுவாமி.. உங்களுடைய சீடனை காப்பாற்றுவது உங்களுடைய கடமை. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் உங்கள் சீடனின் கழுத்தில் என் நாவை வைத்து அவருடைய ரத்தத்தை குடிக்க வேண்டும் என்பது எனக்கு எமதர்மன் இட்டிருக்கும் கட்டளை. அந்த கடமையை செய்யவிடாமல் நீங்கள் தடுப்பது எந்த வகையில் நியாயம்” என்று கேட்டான்.

    அதைக் கேட்ட குரு, “சற்று பொறுமையாக இரு.. நீ என்னுடைய சீடனின் ரத்தத்தை குடிக்க வேண்டும், அவ்வளவுதானே. நானே அதற்கு வழி செய்கிறேன்” என்று கூறி, தன்னிடம் இருந்த சிறிய கத்தியை எடுத்து, சீடனின் கழுத்தை ரத்தம் வரும்படியான ஆழத்திற்கு அறுத்தார். அப்போது கண்விழித்த சீடனின் முன்பாக, கத்தியோடு தன் கழுத்தை அறுக்கும் குரு காணப்பட்டார். ஆனால் அதன்பிறகு எந்த மறுமொழியும் கூறாமல், சீடன் மீண்டும் படுத்து உறங்கத் தொடங்கிவிட்டான்.

    குருவும், தன்னுடைய சீடனின் கழுத்தை லேசாக அறுத்து அதில் இருந்து வெளிப்பட்ட ரத்தத்தை ராட்சதன் குடிக்கும்படி செய்தார். இதனால் அவனது கடமை நிறைவேற்றப்பட்டு விட்டதை எண்ணி மகிழ்ந்தபடி, ராட்சதன் அங்கிருந்து அகன்றான். அவன் போனதும், தான் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த மூலிகைகளைக் கொண்டு, சீடனின் காயத்திற்கு மருந்து போட்டார் குரு.

    மறுநாள் காலை எழுந்த சீடனிடம், “நான் உன்னுடைய கழுத்தை அறுப்பதை கண்கொண்டு பார்த்தபிறகும் எப்படி அத்தனை தைரியமாக மீண்டும் உறங்கினாய்? உனக்கு பயம் தோன்றவில்லையா?” என்று கேட்டார்.

    அதற்கு சீடன், “குருவே.. என் கழுத்தில் ஏதோ ஊறுவதை உணாந்துதான் விழித்தேன். கையில் கத்தியுடன் நீங்கள் என் கழுத்தை அறுப்பதை பார்த்தேன். ஆனால் என் குருநாதராகிய உங்களால் எனக்கு எந்தக் கெடுதலும் வராது என்பதை நான் அறிவேன். அதனால்தான் நிம்மதியாக தூங்கினேன். காலையில் எழுந்ததும் என் கழுத்தில் இருந்த மூலிகை பற்றைப் பார்த்தேன். நான் நினைத்தது சரிதான் என்று தோன்றியது. என் குருநாதராகிய உங்களுக்கு, என் ஊன், உயிர், உள்ளம் அனைத்தும் அர்ப்பணம். நீங்கள் எது செய்தாலும் அது என் நன்மைக்கே என்றறிவேன்” என்றான்.

    இந்த கதையில் வரும் சீடன்தான் நாம். குரு நம்முடைய கடவுள். ராட்சதன் தான் நம் வாழ்வோடு விளையாடும் விதி. அனைத்தும் விதிப்படிதான் நடக்கும். நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் இறைவனே பொறுப்பு. அவனை முழுமையாக சரணடைந்தால், விதிப்படி நடக்கும் பெரும் தீமை கூட, நம்மை விட்டு நீங்க இறைவன் அருள்புரிவார்.
    Next Story
    ×