search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் தேரோட்டம்
    X
    பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் தேரோட்டம்

    பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் தேரோட்டம்

    சித்திரை விழாவில் இன்று(சனிக்கிழமை) சித்ரா பவுர்ணமியையொட்டி தீர்த்த திருவிழாவும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு தெப்ப உற்சவமும் நடக்கிறது.
    தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற நீலகண்ட பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி பேராவூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் நீலகண்ட பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம்,  பூஜை செய்து வழிபட்டனர்.

    விழா நாட்களில் தினமும் காமதேனு வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், மயில் வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. விழாவில் நேற்று அதிகாலை 4 மணி முதல் பால் காவடி, பன்னீர் காவடி, அக்னி காவடி, வேல் காவடி, பறவைக்காவடி என பல்வேறு காவடிகள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 5.30 மணிக்கு நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.
    விழாவில் அசோக்குமார் எம்.எல்.ஏ., பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பழகன், தொழிலதிபர்கள் கந்தப்பன், ராமதாஸ், ஒன்றிய தலைவர் சசிகலா ரவிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் இன்று(சனிக்கிழமை) சித்ரா பவுர்ணமியையொட்டி தீர்த்த திருவிழாவும்,  நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு தெப்ப உற்சவமும் நடக்கிறது. 18-ந்தேதி  விடையாற்றி உற்சவமும், மண்டலாபிஷேகமும்  நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் தலைவர் கணேசன் சங்கரன், அறங்காவலர் குப்பமுத்து சங்கரன், கோவில் நிர்வாக அதிகாரி சிதம்பரம், ஸ்தானிகர் சங்கரன் வகையறாக்கள், முடப்புளிக்காடு கிராமத்தார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×