search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தாயமங்கலம் முத்துமாரியம்மனையும், கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.
    X
    தாயமங்கலம் முத்துமாரியம்மனையும், கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.

    தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

    தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி விழாவையொட்டி தொடர்ந்து இரவு குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம் மற்றும் பூத வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலத்தில் இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலையில் நவசக்தி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இரவு 10 மணிக்கு ஸ்ரீவிக்னேஸ்வரர் பூஜை நடந்தது. அதன்பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு இரவு 11.30 மணியளவில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதன் பின்னர் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி தொடர்ந்து இரவு குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம் மற்றும் பூத வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா வருகிற 5-ந்தேதி அன்று நடக்கிறது. அன்றைய தினம் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து பொங்கல் வைத்து ஆடு, கோழி ஆகியவற்றை படையல் செய்து வழிபாடு செய்வார்கள். மறுநாள் 6-ந்தேதி இரவு மின் விளக்கு அலங்காரத்தில் தேரோட்டம் நடக்கிறது. 7-ந்தேதி பால்குடம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், மறுநாள் ஊஞ்சல் உற்சவம் மற்றும் இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் நாள் விழா அன்று காலையில் தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடேசன் செட்டியார் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×