search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்
    X
    கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்

    அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

    25 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகம். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.

    தேவாரப்பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இக்கோவில் சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் மற்றும் 60, 70, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அமிர்த கடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தன. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை முன்னிட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கடந்த 23-ம் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி தினமும் இரண்டுகால யாகாசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை 5 மணியளவில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8-வது யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. 8-வது கால பூஜைகள் நடைபெற்றது. பின்னர் புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றன.

    பின்னர் சிவ ஆகமங்கள் முறைப்படி சிவஸ்ரீ எம்.கே.கணேசகுருக்கள் தலைமையில் 120 வேத விற்பன்னர்கள், 27 திருமுறை ஓதுவார்கள் திருமுறை பாராயணம், அபிராமி அந்தாதி பாராயணம், மிரித்திங்கா ஜெபம் ஆகியவை நடைபெற்றது. பூர்ணாஹீதியுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க மேள தாளங்களுடன் வாணவேடிக்கையுடன் கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கோபுர விமானத்தில் வந்தடைந்தது.

    இதையடுத்து காலை 10.45 மணியளவில் கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கும், அம்பாளுக்கும் கடத்தில் உள்ள புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது கருடன் வட்டமிட புனித நீரால் கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    25 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிக்கலாம்...திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்கள் நாளை ரத்து
    Next Story
    ×